ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வில் நடராசன் செய்த தரமான 3 சம்பவங்கள்!

ஜெயலலிதாவின் கொஞ்சம் ஃபீல் குட்டான வாழ்க்கையை த்ரில்லர் ஜானராக மாற்றியதில் சசிகலா – நடராசனுக்கு பெரும் பங்கு உண்டு. ஜெயலலிதாவின் அரசியல் வாழ்விலும் சரி, தனிப்பட்ட வாழ்விலும் சரி சசிகலாவும் நடராசனும் செய்த சம்பவங்கள் ஏராளம். ஜெயலலிதாவுக்குப் பின்னால் சசிகலா, சசிகலாவுக்குப் பின்னால் நடராசன் என பார்த்தால் அ.தி.மு.க ஜெயலலிதாவின் கைக்கு வரப்போகிறது என்று கணித்து அவரின் மாஸ்டர் மைண்டாக கடைசி வரை இருந்து செயல்பட்டவர் நடராசன் என்ற ஆழமான நம்பிக்கை அரசியல் வட்டாரத்தில் எப்போதும் உண்டு. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் நிழல் முதலமைச்சராக நடராசன் இருந்தார் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். அவ்வகையில், ஜெயலலிதா வாழ்வில் நடராசன் செய்த 3 தரமான சம்பவங்களைப் பற்றிதான் நாம தெரிஞ்சுக்கப் போறோம்.

நடராசன்
நடராசன்

நடராசன் என்ட்ரி!

எம்.ஜி.ஆர் இரண்டாவது முறையாக முதலமைச்சர் பொறுப்பேற்றதும் 1982-ம் ஆண்டு ஜெயலலிதா அ.தி.மு.க-வில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். அவரை கொள்கை பரப்பு செயலாளராக எம்.ஜி.ஆர் நியமித்தார். அதோடு மட்டுமல்லாமல் ஜெயலலிதாவை சத்துணவு திட்ட உயர்மட்டக்குழு உறுப்பினராகவும் நியமித்தார். அந்த நேரத்தில், முதலமைச்சர் எம்.ஜி.ஆர், பாரதியார் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு சார்பில் கொண்டாடினார். அதன் தொடர்ச்சியாக பாரதியார் பிறந்த எட்டயபுரத்திலும் விழா நடைபெற்றது. அதில் கலந்துகொள்ள எம்.ஜி.ஆர் தனக்கு பதிலாக ஜெயலலிதாவை அனுப்பி வைத்தார். அந்த விழாவில் ஜெயலலிதா பேசுவதற்காக எழுதப்பட்டிருந்த உரையில் நிறைய பிழைகள் இருந்தன. அதை ஜெயலலிதாவிடம் சுட்டிக்காட்டிய நடராசன் உடனடியாக புதிய உரை ஒன்றை எழுதிக்கொடுத்தார். அதைப் பேசிய ஜெயலலிதாவுக்கு பாராட்டுக்களும் கைதட்டல்களும் கிடைத்தன. அதோடு, ஜெயலலிதாவின் அந்தப் பேச்சை மாலை பத்திரிக்கைகள் மறுநாள் வெளியான நாளிதழ்களில் பிரதான செய்தியாக இடம்பெறுவதற்கான வேலைகளையும் நடராசன் சிறப்பாக செய்திருந்தார். அதுதான் ஜெயலலிதா மனதில் நடராசன் இடம்பிடிக்கக் காரணமான முதல் மற்றும் முக்கியமான நிகழ்வு. அதேநேரத்தில் கடலூரில் சத்துணவுத்திட்ட தொடக்கவிழாவும் நடைபெற்றது. அதில் ஜெயலலிதா பங்கேற்றார். அப்போது, கடலூர் மாவட்ட கலெக்டராக இருந்த சந்திரலேகாவிற்கு கீழ் நடராஜன் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்தார்.

நடராசன் - சசிகலா
நடராசன் – சசிகலா

கடலூரில் ஜெயலலிதா நடத்திய சத்துணவுத்திட்ட தொடக்க விழா பெரும் வரவேற்பைப் பெற்றது. அதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் சந்திரலேகாவின் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த, நடராசன். மேலும் அந்த நிகழ்ச்சி மூலம் சந்திரலேகா, ஜெயலலிதா நட்பு பலப்பட்டது. இதையறிந்த எம்.ஜி.ஆர், சந்திரலேகாவை சென்னைக்கு வரவழைத்து ஜெயலலிதாவுக்கு அரசு நிர்வாகம் தொடர்பான பல விஷயங்களைக் கற்றுக்கொடுக்க வைத்தார். அது மேலும் சந்திரலேகா-ஜெயலலிதாவிடம் கூடுதல் நெருக்கத்தை உருவாக்கியது. அந்த நேரத்தில், `நீங்கள் போன் பின்பு நேரமே போகவில்லை’ என்று சந்திரலேகாவிடம், ஜெயலலிதாகூற, தான் ஆங்கிலப்படங்கள் பார்ப்பதாகவும் தன்னுடன் வேலைப் பார்க்கும் நடராசன் அதற்கான கேசட்டுகளைத் தருவதாகவும் கூறியுள்ளார். பின்னர், சசிகலா மூலம் கேசட்டுகளை போயஸ் கார்டனுக்கு நடராசன் அனுப்பியுள்ளார். நடராசன் மொழிப்போர் போராளி, மாணவர் இயக்கங்களை முன்னெடுத்தவர், சந்திரலேகாவை மக்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்த்தவர், அண்ணா மற்றும் கலைஞரோடு அறிமுகமானவர் என்றெல்லாம் சசிகலாகூற ஜெயலலிதாவுக்கும் நடராசனை பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது. இப்படித்தான், ஜெயலலிதாவுக்கு நடராசனின் அறிமுகம் கிடைத்துள்ளது.

ஜெயலலிதா
ஜெயலலிதா

க்ளோஸ் ஆனவங்க க்ளோஸ்!

சசிகலாவும் ஜெயலலிதாவும் நெருங்கிப் பழக ஆரம்பித்த காலக்கட்டம் அது. ஜெயலலிதாவிடம் தன்னைத் தவிர வேறு யாரும் நெருங்கிவிடக்கூடாது என்பதில் அதிக கவனத்தை சசிகலா கொண்டிருந்தார். அதற்கு இடைஞ்சலாகவும் ஏற்கெனவே, நெருங்கிப் பழகி ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவர்களாகவும் இருந்தவர்களை காலி செய்ய சசிகலா துணிந்தார். அதற்கான திட்டங்களை வகுத்துக் கொடுத்தது, நடராசன். ஜெயலலிதாவின் அதிக நம்பிக்கைக்கு உரிய மும்மூர்த்திகளில் ஒருவராகவும் அதில் முதல்வராகவும் இருந்தவர், மாதவன் நாயர். ஜெயலலிதாவின் பல ஆண்டு குடும்ப நண்பராகவும் போயஸ் கார்டன் வீட்டு வரவு செலவு கணக்கை பார்க்கும் பொறுப்பிலும் இவர் இருந்தார். இரண்டாவது ஜெயலலிதாவின் நீண்டகால கார் டிரைவர், ஜெயமணி. மூன்றாவது, எம்.ஜி.ஆர் நடத்திய தாய் பத்திரிக்கையின் ஆசிரியர், வலம்புரி ஜான். இவர்தான் ஜெயலலிதா மேடையில் பேசுவதற்கான குறிப்புகளை கொடுப்பது, உலக செய்திகள், வரலாறுகளை கொடுப்பது உள்ளிட்டவற்றை செய்தார்.

மாதவன் நாயரை முதலில் காலி செய்ய நினைத்த நடராசன், சசிகலா வழியாக அவரது வங்கிக்கணக்கை பகடைக் காயாக பயன்படுத்திக்கொண்டார். அவரின் வங்கிக்கணக்கில் 36,000 ரூபாய் இருந்தது. அவரது வங்கிக்கணக்கில் எப்படி இவ்வளவு தொகை? என சசிகலா, ஜெயலலிதாவை நோக்கி கேள்வி எழுப்ப… எந்தவித தயக்கமுமின்றி ஜெயலலிதா, மாதவன் நாயரைப் பார்த்து இனி வேலைக்கு வரவேண்டாம் என கூறினார். இப்படி முதல் விக்கெட்டை வெற்றிகரமாக எடுத்தார். ஜெயமணி ஜானகியின் ஆள் என்றும் வீட்டில் நடப்பதை வெளியில் சொல்கிறார் என்றும் கூறி இரண்டாவது விக்கெட்டையும் நடராசன் எடுத்தார். மூன்றாவது விக்கெட் கொஞ்சம் கடினமானது. அந்த விக்கெட்டை வீழ்த்த சரியான நேரம் பார்த்து காத்திருந்தார், நடராசன்.

சசிகலா - நடராசன்
சசிகலா – நடராசன்

நடராசன் தக்க சமயம் பார்த்து காத்திருந்த நேரம்… எம்.ஜி.ஆர் – ஜானகிக்கு இடையில் மனஸ்தாபம் ஏற்பட்டதை அறிந்த வலம்புரிஜான் `தாய்’ பத்திரிக்கையில் இருவரின் இளமைக்கால புகைப்படம் ஒன்றை அட்டைப்படமாகப் போட்டு பிரசுரித்தார். இந்த செய்தியை நடராசன், சசிகலா வழியாக ஜெயலலிதா கவனத்துக்கு எடுத்துச்சென்றார். ஜானகி – ஜெயலலிதா இடையேயும் கடுமையான பனிப்போர் அப்போது நடந்துகொண்டிருந்தது. இந்த நிலையில், அட்டைப் படத்தை வைத்து வலம்புரிஜான் ஜானகியின் ஆள் எனவும் உங்களுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில் இடைவெளியை உண்டாக்க நினைக்கிறார் எனவும் சசிகலா வழியாக நடராசன் கூறினார். இதனையடுத்து, வலம்புரிஜான் மீதும் ஜெயலலிதாவுக்கு அதிருப்தி ஏற்பட்டது. தொடர்ந்து, எம்.ஜி.ஆரிடம் வலம்புரிஜான் பற்றி தனது அதிருப்திகளை ஜெயலலிதா வெளிப்படுத்தினார். இப்படி, வலம்புரி ஜானின் விக்கெட்டையும் நடராசன் வீழ்த்தினார். முக்கிய விக்கெட்டுகள் வீழ்ந்த பிறகு அடுத்தடுத்த விக்கெட்டுகளை ஈஸியாக காலி செய்தார். நடராசன் காலி செய்த விக்கெட்டுகளின் பட்டியல் நீளம். இப்படி ஜெயலலிதாவுக்கு க்ளோஸ் ஆக இருந்தவர்களின் கதையை க்ளோஸ் செய்தார். வீட்டுக்கு உள்ளேயும் கட்சிக்கு உள்ளேயும் தனக்கு ஆதரவான ஆள்களை களத்தில் நிறுத்தி ஜெயலலிதாவின் கோட்டையை தனது கட்டுக்குள் கொண்டு வந்தார், நடராசன். அதன் பிறகு என்ன அவரைத்தாண்டி ஒரு அணுவும் அசையவில்லை.

ஜெயலலிதா
ஜெயலலிதா

அண்ணா அரியணையில் ஜெயலலிதா

தமிழக சட்டமன்ற தேர்தல் 1984-ம் ஆண்டு நடைபெற்றபோது எம்.ஜி.ஆர் உடல்நிலை பாதிப்படைந்த அமெரிக்காவின் ப்ரூக்ளின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கருணாநிதி களத்தில் தீயாக வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அ.தி.மு.க-வினரும் அந்த சமயத்தில் சும்மாக இல்லை. தங்களால் இயன்றவரை உயிரைக் கொடுத்து வேலை பார்த்தனர். அந்த சமயத்தில் எம்.ஜி.ஆர் இறந்துவிட்டார் என்றெல்லாம் செய்திகள் பரவியது. அதனை மறுக்கும் வகையில் வீடியோ ஒன்றையும் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் இருந்தபடி தனது தொண்டர்களுக்காக வெளியிட்டார். இந்த பிளானுக்கு பின்னால் இருந்தது ஆர்.எம்.வீரப்பன். இந்த வீடியோவில் ஜெயலலிதா கண்டிப்பாக இடம்பிடிக்க வேண்டும் என நடராசன்- ஜெயலலிதா டீம் கடுமையாக முயற்சித்தது. ஆனால், ஆர்.எம்.வீரப்பன் டீம் அதை முறியடித்தது. இதற்கு பதிலடி கொடுக்க நினைத்த நடராசன், ஜெயலலிதாவின் பிரசாரம், அதற்கு கூடிய கூட்டம் ஆகியவற்றை கவர் செய்து தனியாக ஒரு வீடியோ வெளியிட்டார். அதுவும் எம்.ஜி,ஆர் பார்வைக்குப் போனது. இதன்மூலம் 1984 தேர்தல் வெற்றிக்கு ஜெயலலிதாவின் பங்கும் மிகப்பெரியது என நடராசன் அதிமுகவினர் மத்தியிலும் எம்.ஜி.ஆர் மனதிலும் பதிய வைத்தார். அதன்பிறகே ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர் ராஜ்ய சபா எம்.பி ஆக்கினார். ஜெயலலிதாவை தமிழகம் மட்டும் அறிந்தால் போதாது டெல்லியும் அறிய வேண்டும் என எண்ணிய நடராசன், அறிஞர் அண்ணா ராஜ்ய சபா எம்.பியாக இருந்தபோது அமர்ந்த இருக்கையில் ஜெயலலிதாவை அமர வைக்க எண்ணினார். அந்த யோசனை ஜெயலலிதாவுக்குப் பிடித்துப்போனது. அதையடுத்து எம்.ஜி,ஆர் மூலம் டெல்லியில் பேச வேண்டியவர்களிடம் பேசி, அண்ணா அமர்ந்த அந்த இருக்கை ஜெயலலிதாவிற்காக பெறப்பட்டது. இந்தத் தகவல் பத்திரிக்கைகளில் பிரதான செய்தியாக இடம்பெறும் வகையில் டெல்லியில் நடராசன் ஆலோசனைப்படி பிரஸ்மீட் நடத்தப்பட்டு, அது பிரதான செய்தியாகவும் டெல்லி நாளிதழ்களில் வெளியானது. அது ஜெயலலிதாவை அதிமுகவில் அடுத்த முகம் என டெல்லி அறிந்துகொள்ள முக்கிய காரணமாக அமைந்தது.

ஜெயலலிதா
ஜெயலலிதா

கடிதத்தை தடுத்த கைகள்

அ.தி.மு.க வரலாற்றில் 1989-ம் ஆண்டு மார்ச் 15-ம் தேதி மறக்க முடியாத நாள். ஜெயலலிதா வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்திய நாள். நடராசன் கொஞ்சம் அசந்திருந்தால் அதுவரை கொஞ்சம் கொஞ்சமாக கட்டிய மொத்த கோட்டையும் உடைந்து சிதறியிருக்கும் நாள். அப்படி என்ன நடந்துச்சுனுதான கேக்குறீங்க? சசிகலா ஊருக்கு சென்ற நாள் அது… நடராசன் தன்னுடைய ஆழ்வார்பேட்டை வீட்டுக்குள் நுழைந்த போது தொலைபேசியில் அழைப்பு வந்தது. ஜெயலலிதாவின் வீட்டில் இருந்த நடராசனின் ஆளான பியூன்தான் அவரை தொடர்புகொண்டார். மேடம் திடீர்னு டிரைவரைக் கூப்பிட்டு 7 கடிதம் கொடுத்தாங்க. அதுல ஒண்ணுல சபாநாயகர் அட்ரெஸ் இருந்துச்சு. அப்புறம் பத்திரிக்கை அலுவலகங்கள் அட்ரெஸ் இருந்துச்சு’ அப்டினு தகவல் கொடுக்குறாரு. ஏதோ தப்பா இருக்கு... ஜெயலலிதா நமக்கு தெரியாமல் ஏதோ பண்றாங்கனு உடனே யூகிச்ச நடராசன். கடிதங்கள் செல்லும் காரை மறித்து கடிதங்களை பறித்து வரச் சொன்னார். அவர் அனுப்பிய ஆட்களும் கச்சிதமாக வேலையை முடித்தனர். கடிதத்தில், ‘நான் அரசியலைவிட்டு ஒதுங்குகிறேன். என்னுடைய எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்கிறேன்’ என்று இருந்தது. அதைப் பார்த்து அதிர்ந்த நடராசன், அனைத்து கடிதங்களையும் வீட்டில் இருந்த பீரோவில் வைத்துப் பூட்டினார். போயஸ் கார்டனுக்கு ஃபோன் போட்டு அங்கிருந்த வேலையாட்களையும் கிளம்ப சொல்லிவிட்டார்.

ஜெயலலிதா
ஜெயலலிதா

ஜெயலலிதா காலையில் செய்தித்தாளை எடுத்துப் பார்த்தபோது அதில் ராஜினாமா கடிதம் இடம்பெறவில்லை. விசாரணையில் நடராசன் செய்தது அம்பலமானது. ஆழ்வார்பேட்டை, பீமண்ணா கார்டன் தெருவிலிருந்த சசிகலா-நடராசன் வீட்டிற்கே நேரடியாக வந்த ஜெயலலிதா, என்னுடைய முடிவுகளில் தலையிட நீங்கள் யார் என்று கேட்டு நட்ராஜனுடன் சண்டைப் போட்டதுடன், எனது கடிதங்கள் எங்கே? அதைக் கொடுங்கள் என்று கத்தினார். அனைத்தையும் எதிர்பார்த்து இருந்த நடராசன், சசிகலா பீரோ சாவியை எடுத்து போய்விட்டாள். அவர் வந்ததும் பேசிக்கொள்ளலாம் என சமாதானப்படுத்தினார். ஆனால், ஜெயலலிதா சமாதானம் அடைவதாக தெரியவில்லை. கோபத்துடன் அங்கிருந்து கிளம்பிய ஜெயலலிதா தனது வீட்டிற்கு போய், ஊரில் இருந்த சசிகலாவுக்கு ஃபோன் செய்து இங்கு நடந்த விவரங்களைச் சொல்லி, உடனே சென்னைத் திரும்பி உன் கணவரிடமிருந்து கடிதங்களை வாங்கிக்கொடு என்றார். எதுவும் புரியாமல் சென்னை வந்து நடராசனை சந்தித்த சசிகலாவிடம், `ஜெயலலிதாவை அரசியலில் பெரிய ஆளாக்குவது என் பொறுப்பு. இதை அவரிடம் போய் சொல். இப்போது அரசியலில் இருந்து விலகுவது சரியல்ல’ என்று கூறினார். அதைக்கேட்ட சசிகலா வாங்க ரெண்டு பேரும் போலாம் என சசிகலா கூறியதற்கு, அந்தம்மா எழுதிய கடிதங்கள் இப்போது நம் வீட்டில் இருக்கிறது. அதை பாதுகாக்க வேண்டும். விஷயம் வெளியில் தெரிந்தால் பிரச்னையாகிவிடும். அதனால், நான் இங்கிருக்கிறேன். நீ மட்டும் போய் சொல்’ என சசிகலாவுடன் செல்ல மறுத்துவிட்டார். இதற்கிடையில் நடராசன் வீட்டைக் கண்காணித்து வந்த உளவுத்துறை மூலம் விஷயம் தி.மு.க-வின் தலைமைக்கு தெரிந்துவிட்டது. அதையடுத்து, நடராஜனை போலீஸ் கைது செய்ததோடு, நடராஜன் வீட்டு பீரோவில் இருந்த ஜெயலலிதாவின் கடிதங்களையும் கைப்பற்றியது. அதையடுத்து, நான் எம்.எல்.ஏ பதவியை ராஜினாம செய்கிறேன் என்று ஜெயலலிதா எழுதிய கடிதம் முரசொலியில் வெளியானது. நட்ராஜன் தமிழகம் முழுவதும் பிரபலமானார். இன்னும் சொல்லணும்னா அன்றைய அரசியல் வட்டாரத்தில் நட்ராஜன் ஹீரோவாக பார்க்கப்பட்டார். நடராசன் மீது அதீத கோபத்தில் ஜெயலலிதா இருந்தபோதிலும் கருணாநிதி ராஜினாமா கடிதம் மீது காட்டிய ஆர்வத்தால் நடராசன் மீது இருந்த கோபம் கருணாநிதி மீதான வெறுப்பாக மாறியது.

நடராசன்
நடராசன்

`நடராசன் நினைத்திருந்தால் கடிதத்தை கிழித்து போட்ருக்கலாம். ஆனால், அப்படி பண்ணலை’ என நினைத்த ஜெயலலிதாவுக்கு நடராசன் மீது மதிப்புக்கூடியது. நடராசன் இந்தக் கடிதப் பிரச்னை தொடர்பாக பேசும்போது, ஜெயலலிதா தனது ராஜினாமா கடித்தத்தை கிழித்து போடும்படி என்னிடம் கூறினார். ஆனால் அவற்றை ஜெயலலிதா மற்றும் சசிகலா முன்னிலையில்தான் கிழித்துப்போடுவேன் என அவற்றைப் பத்திரமாக வைத்திருந்தேன். அதற்குள் என்னைக் கைது செய்துவிட்டனர். கடிதம் தொடர்பான விபரங்களை வெளியிட்டால் தகுந்த சன்மானம் தருவதாகவும் கூறினர். என்னை மிரட்டினர்” என்றார். இந்தக் கடிதப் பிரச்னை தொடர்பாக ஜெயலலிதா பேசும்போது,’’தமிழக அரசியலில் நடராசன் மிகவும் நம்பிக்கைக்குரியவர். கருணாநிதி இந்த அளவுக்கு கீழே இறங்கி அரசியல் செய்வார் என நினைக்கவில்லை. இந்தப் பிரச்னைகளைக் கண்டு நான் அஞ்சப்போவதில்லை’ என்று கூறினார். ஒருவேளை அந்தக் கடிதம் சபாநாயகருக்கு சென்றிருந்தால் அ.தி.மு.க அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கும். அதை சரியாக கையாண்டு ஜெயலலிதாவை திசை திருப்பியவர், நடராசன்தான்.

Also Read: ஸ்வீட் பாக்ஸ், வழக்கறிஞர் நியமனம், சாதி – அமைச்சர் ராஜகண்ணப்பன் சந்தித்த 4 சர்ச்சைகள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top