தமிழக சட்டமன்றத்துக்கு வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அதையொட்டி தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் விருப்ப மனு பெறப்படும் தேதிகளை அறிவித்துவிட்டன. அதேநேரம், தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ம.தி.மு.க, வி.சி.க, சி.பி.ஐ, சி.பி.எம், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு ஒதுக்கப்படும் இடங்களும் மார்ச் மாதத் தொடக்கத்தில் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. அ.தி.மு.க அணியிலும் இதே சூழல் நிலவுகிறது.
தி.மு.க, அ.தி.மு.க தவிர்த்து நாம் தமிழர் கட்சியும் மக்கள் நீதி மய்யமும் தனித்துக் களமிறங்க உள்ளன. 234 தொகுதிகளுக்கும் சரிபாதி ஆண், பெண் வேட்பாளர்களை அறிவித்துக் களமிறங்க உள்ளார் சீமான். மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிடக் கூடிய வேட்பாளர்களின் விவரங்கள் வெளியாகவில்லை. இவர்களைத் தவிர்த்து மக்கள் பாதை அமைப்பின் வழிகாட்டியாக இருக்கும் சகாயம் ஐ.ஏ.எஸ்ஸை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தும் வேலைகள் தொடங்கிவிட்டன. அதற்கேற்ப ஆன்லைன் மூலம் சகாயத்துக்கு ஆதரவு திரட்டும் வேலைகள் தொடங்கிவிட்டன.
இதன் ஒரு பகுதியாக wesupport-sagayamias-2021cm.com என்ற இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில், `சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்றுள்ள நம்முடைய நேர்மையாளர் தலைவர் சகாயம் ஐஏஎஸ் அவர்களை அரசியலுக்கு அழைத்து அவரோடு இணைந்து 2021 சட்டமன்ற தேர்தலில் களம்காண விருப்பம் உள்ள சுமார் 1 கோடி பேரை ஒன்று திரட்டி சகாயம் அவர்களிடம் நம் விருப்பத்தை கொண்டு செல்வோம். மாற்றம் நம்மிலிருந்து துவங்கட்டும்’ எனக் குறிப்பிட்டு சில கேள்விகளை முன்வைத்துள்ளனர். பெயர், ஊர், வயது, பாலினம், நான் சகாயம் ஐ.ஏ.எஸ் தலைமையில், சட்டமன்றத் தொகுதி ஆகிய விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, `சென்னையில் ஏதேனும் ஒரு ஞாயிறு அன்று மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றால் நிச்சயமாக கலந்து கொள்வீர்களா?’ எனக் கேட்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இளைஞர்களை ஒருங்கிணைத்து ஆட்சியாளர்களின் ஊழலுக்கு எதிராக சகாயம் களமிறங்கப் போவது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து மக்கள் பாதை அமைப்பின் நிர்வாகிகளிடம் பேசினோம். “ அரசுப் பணியில் இருந்தபோதும் மக்கள் பாதை அமைப்பின் செயல்பாடுகளுக்கு சகாயம் வழிகாட்டியாக இருந்தார். ஊழலுக்கு எதிரான புரட்சியை இளைஞர்களால் மட்டுமே வழிநடத்த முடியும் என்பதிலும் அவர் உறுதியாக இருக்கிறார். இந்தி எதிர்ப்புப் போராட்டம், நீர் பங்கீட்டுக்கான உரிமைப் போராட்டம், ஈழ விடுதலைக்கான போராட்டம் எனப் பல போராட்டங்களை தமிழகம் கண்டுள்ளது. ஆனால், கடந்த 50 ஆண்டுகளாக ஊழலுக்கு எதிரான மாபெரும் மக்கள் திரள் போராட்டம் நடைபெற்றதில்லை. ஊழலின் காரணமாகவே ஆட்சியாளர்கள் மத்திய அரசிடம் தங்களை அடகு வைத்துள்ளனர்.
ஊழலுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதை மிக முக்கியக் கடமையாக சகாயம் கருதுகிறார். ஆட்சிப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த திட்டமிட்டிருந்தார். அதேநேரம், அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்பதை அழுத்தமாகக் கூறி வந்தோம். எங்களின் கோரிக்கையை ஏற்று, `விரைவில் அரசியல் தொடர்பான நிலைப்பாட்டை அறிவிப்பேன்’ என்றார். மார்ச் மாதத் தொடக்கத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால், மக்கள் பாதை சார்பாக இளைஞர்களை வேட்பாளர்களாக நிறுத்தவும் திட்டமிட்டுள்ளோம். இதுதொடர்பாக விரைவில் செய்தியாளர்களைச் சந்தித்து சகாயம் விளக்கமளிப்பார்” என்கின்றனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் பிரசாரம் மேற்கொண்ட ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன், `முதல்முறையாக வாக்களிக்கப் போகிறவர்கள், அரை நூற்றாண்டு காலத் தமிழகத்தில் ஒரு சரித்திரத்தைப் படைத்துக் காட்டப் போகிறீர்கள். நீங்கள் அதைச் செய்வதுடன் நிற்காமல், ராஜ விசுவாசம் என்று நினைத்துக்கொண்டு செய்த தவறையே மீண்டும் செய்து கொண்டிருக்கும் மக்களின் மனதை மாற்றி, மாற்றத்திற்காக வாக்களிக்கச் செய்ய வேண்டும். அவர்களிடம் சொல்லுங்கள்- ‘சாதி பார்த்து வாக்களிக்காதீர்கள், சாதிப்பவர்களைப் பார்த்து வாக்களியுங்கள்’ என்று. அப்படிச் செய்தால் நிச்சயம் நாளை நமதாகும்’ என்றார்.
இதே பாணியில் முதல் தலைமுறை வாக்காளர்களையும் இளைஞர்களையும் நம்பிக் களமிறங்கத் திட்டமிட்டுள்ளார் சகாயம் ஐ.ஏ.எஸ். அவரது அரசியல் பயணம் எப்படிப்பட்டதாக இருக்கப் போகிறது என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.
[zombify_post]