போக்குவரத்துத் துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்குச் சொந்தமான 24 இடங்களில் காலை முதல் நடந்த சோதனை நிறைவுபெற்றிருக்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு நடைபெற்ற சோதனைதான் இது என அ.தி.மு.க கொதித்திருக்கிறது. என்ன நடந்தது?
எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆளும் அ.தி.மு.க அமைச்சர்கள் மீது மிகப்பெரிய ஊழல் பட்டியலை ஆளுநரிடம் நேரில் போய் புகார் மனுவாகக் கொடுத்தார் மு.க.ஸ்டாலின். அந்த புகார் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. `தி.மு.க ஆட்சிக்கு வந்தால் அ.தி.மு.க அமைச்சர்கள் மீதான ஊழல் புகாரில் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அப்போதே பேட்டி கொடுத்தார் ஸ்டாலின். இந்தநிலையில், கடந்த மே 7-ல் ஆட்சிப்பொறுப்புக்கு வந்தது தி.மு.க. இதனால், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்து விசாரணை குறித்த பேச்சு மீண்டும் எழுந்தது.
கொரோனா இரண்டாவது அலையால் மே 10-ம் தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், படிப்படியாக கொரோனா பாதிப்பின் வேகம் குறைந்தது. இந்த சூழலில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையின் டி.ஜி.பி-யாக கந்தசாமி நியமிக்கப்பட்டபோது ஊழல் விவகாரம் மீண்டும் மையப்பொருளானது. அவர் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து கடந்த ஜூன் 25-ல் ஆலோசனை நடத்தியிருந்தார். குஜராத்தில் சிபிஐ அதிகாரியாக இருந்தபோது ஆளுங்கட்சியில் இருந்த அமித் ஷாவைக் கைது செய்து பரபரப்பைக் கிளப்பியவர் கந்தசாமி. நேர்மையான அதிகாரியான அவர் லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி-யாக நியமிக்கப்பட்டிருப்பது அ.தி.மு.க அமைச்சர்களின் ஊழல் குறித்த விசாரணையைத் துரிதப்படுத்தத்தான் என்ற பேச்சும் அப்போது எழுந்தது.
அ.தி.மு.க அமைச்சர்கள்

முன்னாள் முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் என அ.தி.மு.க அமைச்சர்கள் பலர் மீது ஊழல் புகார்கள் இருக்கின்றன. இந்தநிலையில், முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான கரூர் சாயப்பட்டறை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களிலும் சென்னையில் ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கும் அவரது வீடு, கார் ஆகியவற்றிலும் இன்று காலை 7 மணி முதலே அதிரடி சோதனையில் ஈடுபட்டனர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார்.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்திருக்கிறார். அதேபோல், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது வெளியான டெண்டர்கள், பேருந்துகளில் ஜி.பி.எஸ். கருவி பொறுத்துவதில் ஊழல் என பல்வேறு விவகாரங்கள் குறித்தும் அவரிடம் டி.எஸ்.பி ராமச்சந்திரன் தலைமையில் விசாரணை நடந்தது. சுமார் 8 மணி நேரத்தைத் தாண்டி நடந்த சோதனையில் சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
கொதிக்கும் அ.தி.மு.க
சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10.30 மணியளவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. கூட்டத்துக்காக மாவட்டச் செயலாளர் வந்திருந்த நிலையில், மதியம் 12.30 மணியளவில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈ.பி.எஸ் ஆகியோர் தலைமயில் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்குப் பின் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.

அப்போது, `ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது பொய்யான புகாரைக் கூறி வீட்டில் ரெய்டு நடத்தியிருக்கிறது. இதற்கெல்லாம் அஞ்ச மாட்டோம்’ என்றார் ஓ.பி.எஸ். இதுதொடர்பாக அ.தி.மு.க தலைமைக் கழகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அ.தி.மு.க-வை அழித்துவிடலாம், ஒழித்து விடலாம் என்று கனவு கண்டால் அது பகல் கனவாகவே முடியும் என்ற வரலாறு தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்குத் தெரியும். அ.தி.மு.க இதுபோன்ற அடக்குமுறைகளை எல்லாம் தாங்கி வலுப்பெற்ற இயக்கம் என்பதை தி.மு.க தலைவர் ஸ்டாலின் போன்றவர் அறிவர்.

எனவே, காழ்ப்புணர்ச்சியோடு காவல்துறை மூலம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது காவல்துறையை ஏவி விட்டு அவரது இல்லத்தில் சோதனை என்ற பெயரில் அச்சுறுத்த நினைக்கும் தி.மு.க அரசுக்கு எங்களுடைய கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கட்சி என்றுமே துணை நிற்கும். ஸ்டாலின் அரசின் இந்த அராஜகத்தையும் அத்துமீறல்களையும் தொண்டர்களின் துணையோடு இதை சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் எதிர்க்கொள்வோம்’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
0 Comments