தி.மு.க மாநிலங்களவை எம்.பி-யும் மூத்த தலைவருமான டி.கே.எஸ்.இளங்கோவனைப் பெயர் குறிப்பிடாமல் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விமர்சித்தது அக்கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
லக்னோவில் கடந்த 17-ம் தேதி நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்துகொள்ளாதது சர்ச்சையானது. இதுகுறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் உள்ளிட்டோர் விமர்சனங்களை முன்வைத்தனர். அதற்கு, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காட்டமாக பதிலடி கொடுத்திருந்தார். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக செயல்படும் அவர், எதிர்க்கட்சியினர் விமர்சனங்களுக்குப் பெரும்பாலான நேரம் அங்கேயே பதிலளிப்பதுண்டு.
டி.கே.எஸ்.இளங்கோவன் அறிவுரை!
இந்தநிலையில், ஆங்கில ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த தி.மு.க எம்.பி-யும் செய்தித் தொடர்பாளருமான டி.கே.எஸ்.இளங்கோவனிடம் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அந்தக் கேள்விக்குப் பதிலளித்த டி.கே.எஸ்.இளங்கோவன், “பி.டி.ஆர் எளிதில் பொறுமையை இழந்துவிடுகிறார். அவரது பேச்சின் பெரும்பாலான பகுதி, கோபத்தின் வெளிபாடாகவே இருக்கிறது. அவர் யாரையும் வம்பிழுப்பதோ, வம்புக்குப் போவதோ இல்லை. ஆனால், மற்றவர்களின் பேச்சால் எளிதில் பொறுமையை இழந்துவிடுகிறார். அரசியல்வாதியாக இருக்கும் சூழலில், அவர் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதைத்தான் நான் அவரிடம் எப்போதும் சொல்வேன். எதிர்க்கட்சிக்காரர்கள் எப்போதுமே நம்மை சீண்டிக்கொண்டேதான் இருப்பார்கள். அதுவும் ஆளுங்கட்சியாக இருக்கும்போது, அதை மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். அதிகாரத்தில் இருக்கும் நம்மிடம் செயல்பாட்டையே மக்கள் எதிர்பார்ப்பார்கள். சண்டைபோடுவதை மக்கள் விரும்ப மாட்டார்கள். இதைத்தான் அவருக்கு அறிவுரையாக நான் சொல்வேன். ஒவ்வொரு அமைச்சரின் செயல்பாடுகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் கவனித்துக் கொண்டேதான் இருக்கிறார். பி.டி.ஆருக்கு ஏற்கனவே தலைமை அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறது. தேவைப்பட்டால் மீண்டும் இதுகுறித்து அறிவுரை வழங்குவார்கள் என்று நினைக்கிறேன். அதேபோல், ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் அவர் பங்கேற்றிருக்க வேண்டும். ஏன் அதில் கலந்துகொள்ளவில்லை என்று தெரியவில்லை’ என்று கருத்துத் தெரிவித்திருந்தார்.
பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் பதிலடி!

டி.கே.எஸ்.இளங்கோவன் இப்படி பேசியிருந்தது தி.மு.க-வுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. இருவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் தி.மு.க-வினர் சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வந்தனர். இந்தநிலையில், இதுகுறித்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ட்விட்டரில் தெரிவித்த கருத்து சர்ச்சையானது. அவரது ட்விட்டர் பதிவில், கட்சியின் அடுத்தடுத்த இரண்டு தலைவர்களால் இரண்டு முறை கட்சிப் பொறுப்பு பறிக்கப்பட்டவயதான முட்டாளை’ அழைத்து என்னைப் பற்றி பேசச் சொல்லி உளறவைத்திருக்கிறார்கள்’ என்று டி.கே.எஸ். இளங்கோவனைப் பெயர் குறிப்பிடாமல் விமர்சித்திருக்கிறார். அவரின் இந்தப் பதிவு சர்ச்சையான நிலையில், பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே அந்தப் பதிவை நீக்கியும் விட்டார். இது தி.மு.க-வுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவரை அமைச்சராக இருக்கும் ஒருவரே இப்படி தரம்தாழ்ந்து விமர்சிக்ககலாமா என்றும் ஒரு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
0 Comments