Kakkan: அரசியலில் எளிமையின் அடையாளம் – கக்கன் மீதான எம்.ஜி.ஆரின் மரியாதை!

கக்கன், தமிழக அரசியல் களத்தில் எளிமைக்குப் பெயர் பெற்ற தலைவர்களின் வரிசையில் முக்கிய இடத்தில் இடம்பெறுபவர். காந்தியும் காங்கிரசும் என்ற இரட்டைப் புள்ளிகளைச் சுற்றியே கக்கனின் அரசியல் வாழ்வு முழுக்க சுற்றியது. காந்தி மதுரைக்கு வருகை தந்தபோது அவரைச் சந்தித்த கக்கன் அந்தப் பயணம் முழுக்க காந்தியுடன் வலம் வந்தார். அந்தப் பயணம் மட்டுமல்ல, அவர் வாழ்க்கை முழுக்கவே அதற்கடுத்து காந்தியுடனும் காந்தியத்துடனும்தான்.

கக்கன் காங்கிரஸில் சேர்ந்த வரலாறு

மதுரையைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களுள் ஒருவரான அ. வைத்தியநாதர் மூலமாக காங்கிரஸில் சேர்ந்தார் கக்கன். வைத்தியநாதரையே தன்னுடைய முதல் தலைவராக ஏற்றுக்கொண்டா. ஹரிஜன சேவா சங்கப் பணிகளில் தொடக்க காலத்தில் பங்காற்றினார். ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் இரவுப் பள்ளிகளை அமைப்பதில் முன்னோடியாகச் செயல்பட்டார். பட்டியலின மாணவர்களுக்காக அவர் தொடங்கிய பள்ளி பல்லாண்டுகள் அம்மக்களின் நலனுக்காக இயங்கியது. மீணாட்சியம்மன் கோயில் நுழைவுப்போராட்டத்தில் வைத்தியநாதருடன் கலந்துகொண்டு வரலாற்றில் இடம்பெற்றார்.

அமைச்சர் கக்கன்

காங்கிரஸ் உறுப்பினராக தேச விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தவர், 18 மாதங்கள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு வதைக்கப்பட்டார். விடுதலை, நெருங்கி வந்த சமயத்தில் அமைக்கப்பட்ட ‘அரசியலமைப்பு அவை’யின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் தேர்தலில் மதுரை மேலூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார் கக்கன். 1957-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றவர் பொதுப் பணித்துறை அமைச்சர் ஆக்கப்பட்டார். அடுத்த தேர்தலில் (1962) சமயநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்று, வேளாண் துறை மற்றும் உள்துறை அமைச்சராகவும் பதவிவகித்தார். தி.மு.க வெற்றி பெற்ற 1967 தேர்தலில் இதற்கு முன்பு வெற்றி பெற்ற மேலூர் தொகுதியிலேயே தி.மு.க வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவினார். எளிமையின் அடையாளமாகவும், நேர்மையான அரசியல்வாதியாகவும், திறமையான அமைச்சராகவும் விளங்கிய கக்கனின் அரசியல் வாழ்வில் ஒரு கரும்புள்ளியாக ‘இந்தி எதிர்ப்புப் போராட்ட’ சமயத்தில் அவர் காட்டிய கடுமையும், அப்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூடும் இடம்பெற்றுவிட்டது.

கக்கன்

கக்கனுக்காக சண்டை போட்ட எம்.ஜி.ஆர்

எளிமையின் அடையாளமாகவே வாழ்ந்தவர் அதிகாரத்தை எங்கும் பயன்படுத்தியதில்லை. மதுரை அரசு மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த அ.தி.மு.க-காரர் ஒருவரைச் சந்திக்க வருகை தந்திருந்தார் எம்.ஜி.ஆர். அப்போது கக்கனும் அங்கு அனுமதிக்கப்பட்டிருப்பதை அறிந்ததும், அவரைச் சந்திக்கச் சென்றார்.

கக்கன் சுதந்திரப் போராட்ட வீரர் என்பதால் அவருக்கு சி பிரிவு வார்டு வழங்கப்பட்டிருந்தது. பர்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இதனைக் கண்டதும் கோபமடைந்த எம்.ஜி.ஆர், மருத்துவர்களிடம் ‘இவர் யார் தெரியுமா? இந்திய அரசியலமைப்பு அவையின் உறுப்பினர், தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சர். இவருக்கு நீங்கள் தரும் மரியாதையா இது? அவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார் எம்.ஜி.ஆர்.

Also Read : காமராஜர் வாழ்வின் 4 முக்கிய தருணங்கள்!

கக்கனின் இறுதிக்காலம்

வைத்தியநாதருக்குப் பிறகு காமராசரை தன்னுடைய தலைவராக ஏற்றுக்கொண்டார். ஸ்தாபன காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ் என கட்சி இரண்டாக உடைந்த போதும் ஸ்தாபன காங்கிரஸிலேயே இருந்தார். 1971-ல் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார், பிறகு படிப்படியாக அரசியல் வாழ்விலிருந்து விலகிய கக்கன், 1981 டிசம்பர் 23 அன்று உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top