கல்வித் தந்தை என்றழைக்கப்படும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த தினம் இன்று. 1903-ம் ஆண்டு ஜூலை 15-ல் விருதுநகரில் பிறந்த அவர், சுதந்திரப் போராட்டத்திலும் கலந்துகொண்டவர். அவரது பிறந்தநாளான இன்று கல்வி வளர்ச்சி தினமாக அனுசரிக்கப்படுகிறது.
மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய காமராஜர், இடைநிலைக் கல்வியைக் கூட முடிக்காதவர். 16 வயதில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து 55 ஆண்டுகள் பொதுவாழ்வில் இருந்த காமராஜர், தமிழக முதல்வராக 9 ஆண்டுகள் பதவி வகித்தவர். சுமார் 12 ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தவர். எம்.பியாகவும் இருந்திருக்கிறார்.
காமராஜர் பிறந்த நாளில் அவர் வாழ்வில் நடந்த 4 சம்பவங்களைப் பற்றி தெரிந்துகொள்வோமா…
- கிங் மேக்கர் என்று அறியப்பட்ட காமராஜருக்குப் பிரதமராகும் வாய்ப்பு ஒருமுறை வந்தது. இரண்டு பிரதமர்களை உருவாக்கிய அவர், என்றுமே தன்னை முன்னிறுத்திக் கொண்டதில்லை. நேருவின் மறைவுக்குப் பின் லால் பகதூர் சாஸ்திரியை பிரதமராக முன்னிறுத்தியபோது காமராஜரிடம்,
நீங்கள் ஏன் பிரதமராகக் கூடாது?’’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில்,
இந்தி கிடையாது. ஆங்கிலமும் கிடையாது. நான் எப்படி பிரதமராவது?’’ என்று அடக்கத்தோடு சொன்னார். அவர் அப்படி சொல்லியிருந்தாலும் ஆங்கிலத்தில் நன்றாக உரையாடக் கூடியவர். நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில் அவர் ஆற்றிய உரைகளைப் பாராட்டி பல பத்திரிகைகளும் செய்தி வெளியிட்டிருக்கின்றன. - முதலமைச்சராகப் பொறுப்பில் இருந்தபோது பயணமொன்றில் சிறுவன் ஒருவன் மாடு மேய்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறார். அந்த சிறுவனிடன்
ஏன் மாடு மேய்க்கிறாய்? பள்ளிக்கு செல்லவில்லையா?’ என கேட்டதற்கு,
சாப்பாடு தருவீங்களா?’ என பதில் கேள்வி கேட்டிருக்கிறான் அந்த சிறுவன். மாணவர்கள் பள்ளியிலிருந்து இடைநிற்றலைக் குறைப்பதற்காக காமராஜர் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வருவதற்கு விதைபோட்ட நிகழ்வு இதுவே.
- இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இவர் கொண்டுவந்த திட்டம்தான் கே – பிளான் (K – Plan). அதற்கும் முன்மாதிரியாக 1963-ல் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு டெல்லி சென்றார். மூத்த தலைவர்கள் கட்சிப் பணியாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று சொன்ன காமராஜரின் கே – பிளானுக்கு காங்கிரஸ் கட்சியில் ஆதரவு பெருகிறது. காங்கிரஸின் அகில இந்தியத் தலைவரானார்.
- காந்தியின் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த காமராஜர் 1975-ம் ஆண்டு காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2-ல் மறைந்தார். அவர் உயிரிழப்பதற்கு முன்னர், தனது உதவியாளர் வைரவனிடம் கடைசியாகச் சொன்ன வார்த்தைகள் – `விளக்கை அணைத்துவிட்டுப் போ’ என்பதுதான்.
Also Read – திடீர் கவனம் பெறும் `கொங்கு நாடு’ அரசியல்… தமிழகத்தைப் பிரிப்பது சாத்தியமா?