Vaiko

எம்.ஜி.ஆருக்குப் பிறகு தி.மு.க-வை உடைத்த வைகோ – ம.தி.மு.க உருவான பின்னணி!

தி.மு.க தலைமையுடனான கருத்துவேறுபாட்டால், பொருளாளர் பதவியில் இருந்து விலகி 1972-ல் எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கினார். அந்த சம்பவம் நடந்து சுமார் 20 ஆண்டுகள் கழித்து தி.மு.க இரண்டாவது முறையாகப் பிளவுபட்டது. வைகோ தி.மு.க-விலிருந்து விலகியது ஏன்… ம.தி.மு.க உருவான பின்னணி என்ன?

வைகோ

1944ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தின் கலிங்கபட்டியில் பிறந்த வை.கோபால்சாமி, மாணவப் பருவத்திலேயே திராவிட இயக்கக் கொள்கைகள் மீது பற்று கொண்டிருந்தார். அப்போது நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் அவரது அரசியல் பயணத்துக்கு விதை போட்டது. 1962-ல் சென்னை கோகலே மன்றத்தில் அண்ணா முன்னிலையில் நடந்த இந்தி எதிர்ப்புக் கருத்தரங்கில் வைகோ பேசியது அவரது வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதன்பிறகு தி.மு.க-வில் வைகோவுக்கு ஏறுமுகம்தான்.

Vaiko

1969ம் ஆண்டு அண்ணா மறைவைத் தொடர்ந்து கட்சித் தலைமைப் பொறுப்பையும் முதலமைச்சர் பொறுப்பையும் ஏற்ற கருணாநிதியின் செல்லப்பிள்ளையாக கட்சியில் வளர்ந்தார் வைகோ. புதிதாகத் தொடங்கப்பட்ட எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க-விடம் 1977-ல் ஆட்சியைப் பறிகொடுத்தபிறகு, அந்தக் கட்சியின் வாய்ஸாக நாடாளுமன்றத்தில் ஒலித்தது வைகோவின் குரல். 1980-களில் ஈழப் பிரச்னை தீவிரமானபோது தி.மு.க-வின் நிலைக்கேற்ப அவரது செயல்பாடுகள் வேகம்பெற்றன. இதனால், `தி.மு.க-வின் போர்வாள் வை.கோபால்சாமி’ என்று புளகாங்கிதப்பட்டார் கருணாநிதி.

ஆனால், வைகோவின் வளர்ச்சி கருணாநிதி விரும்பவில்லை என்பது 1980களில் இறுதியில் வெளிப்படத் தொடங்கியது. 1989-ம் ஆண்டு கள்ளத்தோணியில் இலங்கை சென்று பிரபாகரனை வைகோ சந்தித்தது கருணாநிதிக்கு வாய்ப்பாக அமைந்தது. ஆட்சிப் பொறுப்பில் இருந்த தி.மு.க-வின் முக்கியப்புள்ளி ஒருவரே கள்ளத்தோணியில் இலங்கை சென்றது பெரும் சர்ச்சையானது. பதிமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக் கட்டிலில் அமர கிடைத்த வாய்ப்பை வைகோ சிதறடித்துவிடுவார் போலிருக்கிறதே என கருணாநிதி மூத்த உடன்பிறப்புகள் சிலரிடம் வெளிப்படையாகவே அதிருப்தியை வெளிப்படுத்தினார். ஆனால், கட்சியில் வைகோவுக்கு இருந்த செல்வாக்கு, இதனால் அதிகரிக்கவே செய்திருக்கிறது.

வைகோவை ஓரங்கட்டிய கருணாநிதி

1993-ம் ஆண்டு வைகோ தி.மு.க-விலிருந்து 9 மாவட்டச் செயலாளர்களோடு வெளியேறினார். ஆனால், இது உடனடியாக நடந்த சம்பவம் அல்ல. ஏறக்குறைய இரண்டாண்டுகள் நடந்த சம்பவங்களின் தொடர்ச்சியாகவே வைகோவின் வெளியேற்றம் நடந்தது. 1969 அண்ணா மறைவுக்குப் பிறகு 20 ஆண்டுகள் தி.மு.கவின் முன்னணி தலைவர்களுள் ஒருவராக விளங்கிய வைகோவை 1989 தொடங்கியே கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கத் தொடங்கினார் கருணாநிதி. ஒருகட்டத்தில் வைகோவுக்கு நெருக்கமான 12 மாவட்டச் செயலாளர்கள் பதவியில் இருந்த மாவட்டங்களில் நடந்த கூட்டங்களில் மட்டுமே அவர் பேச முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அதேநேரம் வைகோவின் உணர்ச்சிப்பூர்வமான பேச்சைக் கேட்க கூடும் கூட்டமும் அதிகரித்துக் கொண்டே போனதையும் கருணாநிதி கவனிக்காமல் இல்லை. இதனால், தி.மு.க கூட்டங்களில் வைகோவுக்கு மதிய உணவின்போது பேச நேரம் ஒதுக்கப்பட்ட சம்பவங்கள் கூட நடந்தன. 1991-ல் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்த திராவிட இயக்கத்தின் பவளவிழா மாநாடு தி.மு.க-வின் வைகோவின் செல்வாக்கை கருணாநிதிக்கு எடுத்துக் காட்டியது.

Vaiko - Karunanidhi

அதனால், வைகோவை தி.மு.க-வில் இருந்து வெளியேற்ற சரியான சமயம் பார்த்துக் கொண்டிருந்தார் கருணாநிதி. 1991 ராஜீவ்காந்தி கொலைக்குப் பிறகு தி.மு.க ஆட்சிக்கான நெருக்கடி அதிகரித்தது. இந்த சூழலில் 1991ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி தி.மு.க-வின் செயற்குழுவைக் கூட்டினார் கருணாநிதி. வைகோ மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அந்தக் கூட்டத்தில் முன்வைத்த கருணாநிதி, அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்தார். ஆனால், செயற்குழு உறுப்பினர்கள் பெரும்பாலானோர் வைகோவுக்கு ஆதரவாக நிற்கவே, அந்தக் கூட்டத்தில் கருணாநிதியால் தீர்மானத்தை நிறைவேற்ற முடியவில்லை. தி.மு.க வரலாற்றில் செயற்குழுவில் தான் நினைத்ததை கருணாநிதியால் நிறைவேற்ற முடியாதது அதுதான் முதலும் கடைசியும்.

1993ம் ஆண்டு தொடக்கம் முதலே கருணாநிதி – வைகோ இடையே எந்தவிதப் பேச்சுவார்த்தையும் இல்லாத நிலையில், அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதிக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடமிருந்து 1993-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி கடிதம் ஒன்று வந்தது. அதில், வைகோவின் அரசியல் ஆதாயத்துக்காக விடுதலைப் புலிகள் தன்னைக் கொலை செய்யவும் வாய்ப்பிருப்பதாக எழுதப்பட்டிருந்தது என்று பத்திரிகையாளர்களைக் கூட்டி வெளிப்படையாகவே அறிவித்தார் கருணாநிதி. அந்த செய்தியாளர் சந்திப்பில் கடிதத்தில் இருந்த தகவல்களையும் வெளியிட்டார். இது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது.

Vaiko

இந்த சம்பவமே தி.மு.க இரண்டாவது முறையாகப் பிளவுபட முக்கிய காரணமானது. தி.மு.க-விலிருந்து வெளியேற்றப்பட்ட வைகோவுடன் அப்போது மாவட்டச் செயலாளர்களாக இருந்த 9 பேர் சென்றார்கள். பின்னாட்களில் வைகோவுடன் பயணித்த எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், மு.கண்ணப்பன் போன்றோர் வெவ்வேறு கட்சிகளில் இணைந்தனர். வைகோவைக் கட்சியை விட்டு நீக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், கோவை காமராசபுரம் பகுதியைச் சேர்ந்த பாலன், மேலப்பாளையம் ஜஹாங்கீர், உப்பிலியாபுரம் வீரப்பன் ஆகிய தி.மு.க தொண்டர்கள் தீக்குளித்து உயிரிழந்தனர்.

ம.தி.மு.க

பின்னர், உதயசூரியன் சின்னத்துக்கு உரிமைகோரி மாவட்டச் செயலாளர்களாக இருந்த ஒன்பது பேருடன் இணைந்து வைகோ நடத்திய சட்டப்போராட்டம் வெற்றிபெறவில்லை. உதயசூரியன் பறிபோனால் என் உயிர் போய்விடும்’ என்று கலங்கினார் கருணாநிதி. வைகோவின் அந்தப் போராட்டம் வெற்றிபெறாத நிலையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். 1994-ம் ஆண்டு மே 6-ம் தேதி சென்னை தி.நகரில் இருந்த தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடத்தில் கூடிய ம.தி.மு.க பொதுக்குழுவில் கட்சியின் கொள்கைகள், கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. அக்கட்சியின் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்ட வைகோ,அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, இலட்சியத்தில் உறுதி’ என்ற முழங்கினார்.

Vaiko - Stalin

காலங்கள் மாறின; அரசியல் களத்தில் காட்சிகளும் மாறியிருக்கின்றன. தற்போது தி.மு.க கூட்டணியில் இருக்கும் ம.தி.மு.க சார்பில் வைகோ மாநிலங்களவை எம்.பியாக இருக்கிறார்எந்த சின்னத்துக்கு உரிமைகோரி வைகோ சட்டப்போராட்டம் நடத்தினாரோ, அதே உதயசூரியன் சின்னத்தில் . 2021 தேர்தலில் போட்டியிட்டது ம.தி.மு.க. ஆறு இடங்களில் நான்கில் வென்று ம.தி.மு.க சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கைக் கணக்கை மீண்டும் தொடங்கியிருக்கிறது.

Also Read – முதல் மேடைப்பேச்சு முதல் லண்டன் பிரஸ்மீட் வரை… கருணாநிதி குறித்த 13 துளிகள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top