சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் சிறைவாசம் அனுபவித்த சசிகலா, விடுதலைக்குப் பிறகு முதல்முறையாக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதியில் மரியாதை செலுத்தினார்.
சசிகலா
கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 14-ல் சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. பெங்களூரு செல்வதற்கு முன்னர் ஜெயலலிதா சமாதிக்கு வந்த சசிகலா, கட்சியை மீட்பேன் என்று மூன்றுமுறை சமாதிமீது அடித்து சபதம் செய்துவிட்டுச் சென்றார். அதன்பிறகு நான்காண்டுகள் தண்டனையை அனுபவித்துவிட்டு கடந்த பிப்ரவரியில் விடுதலையானார். பெங்களூரில் இருந்து காரில் சென்னை திரும்பிய சசிகலா ஜெயலலிதா சமாதிக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நினைவிடப் பணிகளைக் காரணம் காட்டி பொதுமக்களுக்கு அனுமதி மறுத்திருந்தது தமிழக பொதுப்பணித் துறை.
சசிகலா விடுதலை அ.தி.மு.க-வுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்பட்ட நிலையில், அரசியலில் இருந்து விலகுவதாக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக ஒரு அறிக்கை அவரிடமிருந்து வந்தது. அதேநேரம், ஆட்சியில் இருந்த அ.தி.மு.க அரசு, ஜெயலலிதா நினைவிடம் செல்லும் சசிகலாவின் எண்ணம் ஈடேறாமல் பார்த்துக் கொண்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், தொண்டர்களுடன் சசிகலா பேசுவது போன்ற ஆடியோக்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வந்தது. அதில், கட்சியை மீட்டு ஜெயலலிதா ஆட்சியைக் கொடுப்பதாக அவர் பேசியிருந்தார்.
சசிகலா ரிட்டர்ன்ஸ்?
சமீபத்தில் நடந்துமுடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க அமோக வெற்றிபெற்றது. மொத்தமுள்ள, 153 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் தி.மு.க 139 இடங்களில் வென்ற நிலையில், அ.தி.மு.க-வால் 2 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் மொத்தமிருக்கும் 1,421-ல் தி.மு.க 977 இடங்களிலும், அ.தி.மு.க 212 இடங்களிலும் வென்றன. சமீபத்தில், நமது அம்மா நாளிதழில் சசிகலா, `நமது ஒரே நோக்கம், இதய தெய்வம் அம்மா அவர்கள் சொல்லி சென்றதை ஒவ்வொரு தொண்டனும் மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். மற்றவர்களை பற்றி நாம் கவலை படக் கூடாது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் மீது உண்மையிலேயே பாசம் வைத்திருப்பவர்கள் கட்சியை விட்டு போக மாட்டார்கள்.தொண்டர்களின் மனக்குமுறலை பார்த்தேன். இனியும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. புரட்சித் தலைவர் மறைவிற்குப் பிறகு இதய தெய்வம் அம்மாவுடன் கூட இருந்து இந்த கட்சியை பழைய நிலைமைக்கு கொண்டு வந்தோம். புரட்சித் தலைவர் மறைவிற்குப் பிறகு என்ன நடந்ததோ அதுவே மீண்டும் நடந்துள்ளது. எனவே நான் கட்சிக்கு வந்து எல்லோரையும் நல்லபடியாக கொண்டு செல்ல வேண்டும். இதய தெய்வம் அம்மாவின் ஆட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு துளிகூட மாறாமல் நாம் முயற்சி செய்து நல்லபடியாக வெற்றி வாகை கூட வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை, எண்ணம்’’ என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
ஜெயலலிதா சமாதியில் மரியாதை
இந்தநிலையில், சுமார் நான்காண்டுகள் எட்டு மாதங்கள் கழித்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் சசிகலா மரியாதை செலுத்தினார். இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்த நிலையில், சமாதியில் சசிகலா ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர். சமாதியில் மலர்தூவி மரியாதை செய்த சசிகலா, கண்ணீருடன் காணப்பட்டார். அ.தி.மு.க-வின் பொன்விழா நாளை தொடங்க இருக்கும் நிலையில், ஜெயலலிதா சமாதியில் சசிகலா மரியாதை செலுத்தியிருக்கிறார். இது, அரசியலுக்கு வருவதற்காக சசிகலா போடும் அச்சாரம் என்று அவரது ஆதரவாளர்கள் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள். ஆனால், சசிகலாவின் இந்த நாடகத்தை உண்மையான தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவரின் நடிப்புக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்திருந்தார்.
Also Read – அரசியல் வருகைக்குத் தூபம் போடும் சசிகலா… தொண்டர்களிடம் பேசியது என்ன?