* சென்னையில் இன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டம் முன்னாள் எம்.பி அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து 10 மாவட்டங்களில் காணொளி காட்சி வாயிலாக பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை அ.ம.மு.க ஐ.டி விங் ஏற்பாடு செய்திருந்தது. சிக்னல் கோளாறு உள்பட எந்தவிதச் சிரமமும் இல்லாமல் அமமுக நிர்வாகிகள் பேசியுள்ளனர்.
* காலை 9 மணிக்குத் தொடங்கிய இந்தப் பொதுக்குழுவில், `ஜெயலலிதாவுடன் முப்பது ஆண்டுகாலம் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த சசிகலாவுக்கு நல் வாழ்த்துகள். ஜெயலலிதாவின் மக்கள் நல கொள்கைகளைப் பாதுகாக்கப் போராடும் பொதுச் செயலாளர் தினகரன் தலைமையின் கீழ் ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்களாக என்றும் பயணிப்போம். குக்கர் சின்னத்தைப் பெற்றுக் கொடுத்து, கட்சியை அனைத்து நிலைகளிலும் கட்டியெழுப்பி சவால்களுக்கும் கட்சியை ஆயத்தமாக்கி காத்துவரும் டிடிவி தினகரனுக்குப் பாராட்டுகள். கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஏனைய அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் அரசியல் லாப வேட்டைக்காகச் செயல்பட்டதைப் போலல்லாமல் விவேகமும், வீரமும் கொண்ட தலைவராகச் செயல்பட்ட தினகரனுக்குப் பாராட்டுகள்’ என தினகரனைப் புகழ்ந்து பாடிவிட்டு, `சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட கட்சிகள் நன்மை பயக்கும் அனைத்து முடிவுகளையும் எடுப்பதற்கு டிடிவி தினகரனுக்குப் பொதுக்குழு முழு அதிகாரம் வழங்குகிறது’ என்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* `சட்டப்பேரவைத் தேர்தலில் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்’ என ஜெயலலிதா பிறந்தநாளில் சசிகலா பேசியுள்ள நிலையில், `தினகரனை முதல்வராக்குவோம்’ எனப் பொதுக்குழுவில் அமமுக நிர்வாகிகள் பேசியுள்ளது, தமிழக அரசியலில் விவாதமாகியுள்ளது. இதையடுத்து, பொதுக்குழுவில் பங்கேற்ற அ.ம.மு.க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “ இன்றைய கூட்டத்தில் பேசிய மண்டலப் பொறுப்பாளர்கள் பலரும், `துரோகிகளை வீழ்த்தும் வகையில் மக்கள் நம்மை ஆதரிப்பார்கள். மக்கள் மத்தியில் ஆளுமைமிக்க தலைவராக டி.டி.வி. இருக்கிறார். தமிழகத்தில் அவரைப் போல ஆளுமைமிக்க தலைவர் யாரும் இல்லை’ எனப் பேசினர்.
* மேலும் சிலர் பேசுகையில், `பெங்களூருவில் இருந்து சின்னம்மா வந்தபோது 20 லட்சம் தொண்டர்கள் விடிய விடிய காத்திருந்தனர். இப்படியொரு உணர்வுபூர்வமான தொண்டர்கள் வேறு எந்தக் கட்சியிலும் இல்லை. எம்.ஜி.ஆர், அம்மா காலத்தில் இருந்து தியாகத்துக்கு என்றுமே மக்கள் மதிப்பளித்துள்ளனர். சின்னம்மாவின் தியாகத்துக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கும்’ என்றனர்.
* கூட்டத்தில் டி.டி.வி பேசும்போது, ` கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன். நமது தலைமையிலான அணிதான் பிரதானமாக இருக்கும். உங்கள் எல்லோருக்காகவும்தான் நான்கு ஆண்டுகளாக பாடுபட்டு வருகிறேன்’ என உருகினார். அவரது பேச்சை நிர்வாகிகள் பெரிதும் வரவேற்றனர்” என்கின்றனர்.
* பொதுக்குழுவில், `தினகரனின் தலைமையில் அம்மாவின் உண்மைத் தொண்டர்களாகிய நாம் பயணிப்போம்’ எனக் கூறப்பட்டிருந்தது குறித்து அரசியல் விமர்சகர்களிடம் பேசுகையில், “ சட்டமன்றத் தேர்தலில் தினகரனின் தலைமையில் சசிகலா செயல்படப் போவதையே இது காட்டுகிறது. `அதிமுகவை மீட்டெடுக்கும் வகையில் ஜனநாயக் கருவியாக அ.ம.மு.க உள்ளது’ என்றொரு பிரசாரத்தையும் அவர் முன்வைக்க வாய்ப்புள்ளது. பெங்களுருவில் இருந்து சசிகலா வந்தபோது, தனது காரில் தினகரனை சசிகலா ஏற்றவில்லை. பின்னால் உள்ள காரில்தான் அவர் பயணித்து வந்தார். எனவே, தினகரனை முன்னிறுத்தி அவர் தேர்தலை சந்திக்க மாட்டார் என நினைத்தோம்.
* நேற்று சசிகலா பேசியதற்கு மாறாக, இன்றைய கூட்டத்தைப் பார்க்க முடிகிறது. அ.ம.மு.கவின் தலைவராக தினகரன் பேசினாலும், அவர் சசிகலா பக்கத்தில் இருந்து கொண்டுதான் செயல்படுத்துகிறார். வேறு யாரையும் நம்பாமல் தினகரனையே முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி அ.ம.மு.வாக செயல்படுவோம் என்பதையே சசிகலா தரப்பு உணர்த்துவதாகவும் புரிந்து கொள்ள முடிகிறது. காரணம், `சசிகலாவின் நல்வாழ்த்துகளுடன் செயல்படும் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை தமிழக முதல்வர் அரியணையில் அமரவைக்க அயராது உழைப்பது என பொதுக்குழு சூளுரை ஏற்கின்றது’ எனவும் குறிப்பிட்டுள்ளதுதான். இதுபோன்று குழப்பும் வேலைகளை எதற்காக செய்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை” என்கின்றனர்.
[zombify_post]