Dhayalu Ammal

தனிமையில் தயாளு அம்மாள்… கருணாநிதி பிறந்த நாளில் எப்படி இருக்கிறது கோபாலபுரம்? #HBDKarunanithi

தி.மு.க-வின் முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் 98-வது பிறந்த நாள் இன்று. 10 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி உள்ள, தி.மு.க இந்தாண்டு கருணாநிதி பிறந்தநாள் விழாவை விமரிசையாகக் கொண்டாடத் திட்டமிட்டு இருந்தது. ஆனால், கொரோனா பெருந்தொற்றுக் காலம் என்பதால், அது நடக்கவில்லை. மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்திலும், தி.மு.க எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்கள் அவர்கள் தொகுதியிலும் சிறிய அளவில் நலத்திட்ட உதவிகளை வழங்கி கருணாநிதி பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றனர். கருணாநிதியின் குடும்பத்தினர் அனைவரும், மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

MK Stalin
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அதோடு, தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா பாதிப்பு நிவாரண உதவிகளை வழங்கி கருணாநிதியின் பிறந்த நாளைக் கொண்டாடினார். பத்திரிகைகள் கருணாநிதியின் பெருமைகள் குறித்த கட்டுரைகளைப் பிரசுரித்துள்ளன; ஊடகங்கள் சிறப்புச் செய்திகளை ஒளிபரப்புகின்றன. ஆனால், தமிழகத்தின் 50 ஆண்டு கால அரசியலைத் தீர்மானித்த கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் வீடும்… அங்கு தங்கியிருக்கும் தயாளு அம்மாளும், கருணாநிதியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அங்கம் வகிக்கவில்லை.

கோபாலபுரம் இல்லம்…  

Gopalapuram house
கோபாலபுரம் இல்லம்

கருணாநிதி வசித்த கோபாலபுரம் வீட்டிற்கு வராத அகில இந்தியத் தலைவர்களே இல்லை எனலாம். இந்தியாவில் பிரதமர் பொறுப்பை வகித்தவர்களில் பாதிக்கும் மேற்பட்ட பிரதமர்கள் கால்பதித்து, கருணாநிதியைச் சந்தித்துவிட்டுச் சென்ற வீடு அது. ஒட்டு மொத்த இந்தியாவையே தமிழகம் நோக்ககி திரும்பி பார்க்க வைத்த பல அரசியல்-அதிகார முடிவுகள், அந்த வீட்டில்தான் எடுக்கப்பட்டன. தமிழகத்தின் ஒவ்வொரு நகர்வும் எப்படி இருக்க வேண்டுமென தீர்மானித்த வீடு அது. கருணாநிதி முதல்வராக இருந்த நேரத்தில், தலைமைச் செயலகத்திற்கு இணையான அதிகாரம் கோபாலபுரம் இல்லத்திற்கும் இருந்தது. தி.மு.க ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், தி.மு.க-வினருக்கு மற்றொரு அறிவாலயமாக, கோபலபுரம் இல்லமும் இருந்தது. கருணாநிதி உயிருடன் இருந்தவரை, பொங்கல் விழா, கருணாநிதியின் பிறந்த நாள் விழா, புத்தாண்டு தினம் மற்றும் முக்கியமான அரசியல் நிகழ்வுகள் நடைபெறும்போதெல்லாம் கோபாலபுரம் இல்லமும் திருவிழாக் கோலத்துடன் திகழும்.  

Shanmuganathan
கருணாநிதி உதவியாளர் சண்முகநாதன்

கருணாநிதி தீவிர அரசியல் செயல்பாடுகளில் இருந்து ஓய்வுபெற்று, சிகிச்சைக்குச் சென்றபிறகே, கோபாலபுரம் வீடு கொஞ்சம் கொஞ்சமாக தன் பொலிவை இழக்கத் தொடங்கியது. 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி கருணாநிதி இறந்தபிறகு, 50 ஆண்டு கால தமிழக அரசியலின் அதிகார பீடமாகத் திகழ்ந்த அந்த இல்லம், ஒரு சம்பிராதாய நினைவிடமாகச் சுருங்கித் தொடங்கியது. கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் அவ்வப்போது அங்கு வந்து, சில வேலைகளைச் செய்துவிட்டுப் போகிறார். கலைஞரின் மற்றொரு உதவியாளரான நித்யா, தினமும் சென்று வருகிறார்.

Nithya
கருணாநிதி – நித்யா

அவ்வப்போது பொதுமக்களும், வெளியூர்களில் இருந்து வரும் தொண்டர்களும், கோபாலபுரம் இல்லத்தின் முன் நின்று செல்பி எடுத்துக் கொள்கின்றனர். கருணாநிதியின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளில் அவரது புகைப்படம் அங்கு வைக்கப்பட்டு மரியாதை செய்யப்படுகிறது. அதைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளும், அவரது சமையல்காரர் ருக்கு அம்மையாரும் அந்த வீட்டில் தங்கி உள்ளனர் என்பது மட்டும்தான் தற்போது கோபாலபுரம் வீட்டிற்கான முக்கியத்துவமாக சுருங்கி உள்ளது.

கருணாநிதியின் பிறந்த நாளில் தயாளு அம்மாள்!

Dhayalu Ammal
தயாளு அம்மாள்

2012-ஆம் ஆண்டு 2ஜி வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்றபோது, தயாளு அம்மாளுக்கு அல்சைமர் நோய் அறிகுறிகள் தென்பட்டன. அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவிலும் தெரிவிக்கப்பட்டது. அதற்கான மருத்துவச் சான்றிதழும் இணைக்கப்பட்டது. அதன்பிறகு அந்தநோய் கொஞ்சம் கொஞ்சமாக முற்றியநிலையில், 2016 காலகட்டத்தில் அவர் முற்றிலுமாக நினைவை இழக்கத் தொடங்கினார். ஒருநாளைக்கு எப்போதாவது அவருக்கு நினைவு திரும்புவதும், மீண்டும் மறந்து போவதுமாக இருந்தது. அந்த நேரத்தில் கருணாநிதி, தயாளு அம்மாளுக்காக தனியாக நேரம் ஒதுக்கி அவரிடம் உரையாடி உற்சாகப்படுத்துவார். ஆனால், 2017-ஆம் ஆண்டுக்குப் பிறகு, கருணாநிதியின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், செல்வி என குடும்பத்தினர் யாரும் கோபாலபுரத்தில் இல்லை.

கருணாநிதி மறைவுக்குப் பிறகு சில மாதங்கள் செல்வி கோபாலபுரத்தில் தங்கி இருந்து, தயாளு அம்மாளைக் கவனித்துக் கொண்டார். ஆனால், பின்பு  அவரும் கர்நாடகா சென்றுவிட்டார். அதன்பிறகு, கோபாலபுரம் இல்லத்தில் ருக்கு அம்மையாரின் பராமரிப்பில் தயாளு அம்மாள் தனிமையில் வசித்து வருகிறார். அவருக்கு இப்போது யாரையும் அடையாளம் தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால், கருணாநிதி இறந்ததே தயாளு அம்மாளுக்கு இன்னும் தெரியாது. மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றதும் அவருக்குத் தெரியாது. குடும்ப நிகழ்வுகள், முக்கியமான தினங்களில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினர் அந்த வீட்டிற்குச் சென்று தயாளு அம்மாளைப் பார்த்து வருகின்றனர். மற்றபடி, அவரை யாரும் தொந்தரவு செய்வதில்லை.

ஸ்டாலின் மரியாதை

கருணாநிதியின் 98-வது பிறந்தநாள் விழாவை, தமிழ்நாடு அரசு கொண்டாடுகிறது. தி.மு.க விமரிசையாகக் கொண்டாடுகிறது. கருணாநிதியின் வாரிசுகள் அனைவரும் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்துகின்றனர். தி.மு.க தொண்டர்கள் வரிசையில் நின்று மெரீனாவில் கருணாநிதியின் நினைவிடத்தைப் பார்த்துச் செல்கின்றனர். ஆனால்,  கருணாநிதியின் வாழ்விலும், தாழ்விலும் அவருடைய சரிபாதியாகத் திகழ்ந்த தயாளு அம்மாள் தனிமையில் எதையும் புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கிறார்.

Also Read – முதல் மேடைப்பேச்சு முதல் லண்டன் பிரஸ்மீட் வரை… கருணாநிதி குறித்த 13 துளிகள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top