“ஸ்ருதி, அக்‌ஷராவை பொதுக்குழுவுக்கு ஏன் அழைக்கவில்லை தெரியுமா?” – ‘ஆவேச’ கமல்

மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் வியாழன் அன்று நடந்தது. இதுவரையில் ம.நீ.மவின் செயற்குழு, நிர்வாகக் குழு கூட்டங்களை மட்டுமே கமல் நடத்தி வந்தார். தேர்தல் ஆணையத்துக்குக் கட்சியின் பொதுக்குழு நடவடிக்கைகளை தெரியப்படுத்துவது கட்டாயம் என்பதால் கூட்டத்தைக் கூட்டினார். இந்தக் கூட்டத்தில் 650 பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். முன்னதாக கூட்டத்தில் பங்கேற்க வந்த கமலுக்கு பறையிசை முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

பொதுக்குழுவில் நிரந்தரத் தலைவராக கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து, தேர்தலில் வேட்பாளர் தேர்வு, கூட்டணிகள் உள்பட அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரத்தை கமல் கையில் ஒப்படைப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவிருப்பதால், 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு, இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்க மத்திய அரசும் மாநில அரசும் ஆவன செய்ய வேண்டும், பொள்ளாச்சி பாலியல் வழக்கின் விசாரணை விரைந்து நடத்தப்பட வேண்டும், இந்தி, சமஸ்கிருத திணிப்பு, ஊர்தோறும் தரமான இலவச குடிநோயாளிகள் மறுவாழ்வு மையங்கள் திறப்பது எனச் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிலும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கான காரணம், அதனைத்தொடர்ந்து கொடநாடு எஸ்டேட்டில் அடுத்தடுத்து நிகழ்ந்த மர்ம மரணங்களின் பின்னணி ஆகியவற்றின் உண்மைகளை வெளிக்கொண்டு வரவேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுதான் ஹைலைட். முடிவில், கமல்ஹாசனை தமிழக முதல்வராக பொறுப்பேற்க செய்வது கட்சியினர் ஒவ்வொருவரின் கடமை என உறுதியான குரலில் தெரிவித்து பொதுக்குழுவின் தீர்மானங்களை நிறைவு செய்தனர்.

இதனை சிரித்தபடியே வரவேற்ற கமல், சுமார் ஒன்றரை மணிநேரங்கள் கூட்டத்தில் ஆவேசம் கொப்பளிக்கப் பேசியுள்ளார்.

கமல் பேசியது என்ன?

  • தி.மு.க, அ.தி.மு.க என இரண்டுமே ஊழல் கட்சிகள்தான். இவர்கள் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். இவர்களோடு கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. இவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் எந்த மாற்றத்தையும் கொடுக்க மாட்டார்கள். ஏனென்றால் பணம் வாங்குவதில் இவர்கள் ஆர்வம் காட்டுவார்கள்.
  • மதவாதக் கட்சி என பாஜகவை சொல்கிறார்கள். இவர்கள் பாஜகவோடு கூட்டணி வைக்கும்போது அது மதவாதக் கட்சி எனத் தெரியவில்லை. இதில் என்னை பி டீம் என்று விமர்சிக்கிறார்கள்.
  • மாணவர்களை வைத்துத்தான் தி.மு.க ஆட்சிக்கு வந்தது. அதன்பிறகு மாணவர்களை மறந்துவிட்டார்கள். நாம் அதனை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நமது கட்சியில் இளைய சமுதாயத்துக்கும் பெண்களுக்கும் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
  • திராவிடக் கட்சிகளோடு கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. லஞ்ச, ஊழல் அரசியலுக்குப் பின் மக்கள் நீதி மய்யம் எப்போதும் செல்லாது. சூட்கேஸ்? ஸ்வீட் பாக்ஸ் அரசியல் எல்லாம் இங்கு எடுபடாது. இதற்கெல்லாம் இசைவு தெரிவிப்பவர்கள் மட்டுமே என்னோடு பயணிக்கலாம். இல்லாவிட்டால் இப்போதே இந்தக் கூட்டத்தில் இருந்து வெளியேறிவிடலாம். அப்படிப்பட்டவர்கள் வெளியேறுவதற்கான கதவுகளும் திறந்தே இருக்கின்றன. இந்த அரங்கத்தை நாங்கள் பூட்டி வைக்கவில்லை.
  • நல்லவர்கள் எல்லாம் திராவிடக் கட்சிகளோடு சேர்ந்து அவர்களும் அப்படியே மாறிவிட்டார்கள். அந்த நல்லவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஓர் அணி அமையும்.
  • வாரிசு அரசியலுக்கும் இங்கு இடமில்லை. நான் பொதுக்குழுவுக்குச் செல்லப் போகிறேன் எனக் கூறியதும், என்னுடைய மகள்களும் வருவதாகச் சொன்னார்கள். வாரிசு அரசியலே வேண்டாம் என்கிறேன். நீங்கள் வரலாமா எனக் கேட்டதும் அமைதியாக இருந்துவிட்டார்கள். அவர்கள் வரும்போது வரட்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top