தாராபுரம் பொதுக்கூட்டத்தில் ஓ.பி.எஸ் பேசியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மோடி முன்னிலையில் மைக்பிடித்த ஓ.பி.எஸ், “எல்லோரும் என்னை ஜல்லிக்கட்டு நாயகன் என்று அழைக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி காளை மாடுகளை காட்சிப்படுத்தத் தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலில் சேர்த்ததால்தான் நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்தது. நான் முதல்வராக இருந்த போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான இளைஞர் திரண்டனர்.
நான் உடனடியாக டெல்லி சென்று பிரதமர் மோடியைச் சந்தித்தேன். அவரிடம் விவரத்தை எடுத்துக் கூறினேன். அவர் 24 மணி நேரத்தில் 4 துறைகளின் அனுமதி பெற்று ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவு பெற்றுத் தந்தார். ஜல்லிக்கட்டு தடையை உடைத்தெறிந்த பெருமை மோடியையே சாரும். உண்மையான ஜல்லிக்கட்டு கதாநாயகன் பிரதமர் மோடிதான்” என்று ஓ.பி.எஸ் பேசியிருந்தார்.
ஓ.பி.எஸ் சார்பில் இதுவரை கொடுக்கப்பட்டு வந்த விளம்பரங்களில் அவரை ஜல்லிக்கட்டு நாயகன் என்றே அழைத்து வந்தனர். ஆனால், ஓ.பி.எஸ் திடீரென இப்படி பேசியிருப்பது தமிழக அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
என்று ஸ்டாலின் ஓ.பி.எஸ் போட்டியின் போடி தொகுதி பிரசாரத்தில் பேசினார்.
"உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் மோடி தான் என்று ஓ.பன்னீர்செல்வம் சொல்கிறார். இவ்வளவு நாட்களாக ஓ.பன்னீர்செல்வம் தான் ஜல்லிக்கட்டு நாயகன் என்று விளம்பரம் கொடுத்துக் கொண்டு இருந்தார். இது என்ன நடிப்பு. சினிமாவில் தான் ஒரு வசனம் வரும்.
உலகமகா நடிப்புடா இது’ என்பார்கள். அதுமாதிரி இது. ஜல்லிக்கட்டு வந்ததற்கு காரணமே நம்முடைய இளைஞர்கள். அரசியல்வாதிகள் யாரும் கிடையாது. அவர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாகத்தான் ஜல்லிக்கட்டு வந்தது. அப்படிப்பட்ட இளைஞர்களை ஓ.பன்னீர்செல்வம் தயவு செய்து கொச்சைப்படுத்தாதீர்கள். அந்தப் போராட்டத்தை எப்படியாவது கலைக்க வேண்டும், கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று சொல்லி போலீசை வைத்து தடியடி நடத்தி, அங்கிருந்த ஆட்டோக்களை எரித்து கொடுமை படுத்தியதை எல்லாம் மக்கள் மறந்து விட்டார்களா?”
அதேபோல், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், `அந்தப் பட்டம் பிரதமர் மோடிக்குப் பொருந்தாது’ என்று விமர்சித்திருக்கிறார்.
ஜல்லிக்கட்டு – தடையும் அவசரச் சட்டமும்!
காட்சிப்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் காளையையும் மத்திய அரசு கடந்த 2011ம் ஆண்டு சேர்த்தது. காங்கிரஸ் அரசில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் காளை மாடுகளையும் அந்தப் பட்டியலில் சேர்த்து 2011 ஜூலை 11-ல் அறிவிப்பு வெளியிட்டார். அதன்பிறகு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தவே மிகவும் சிரமம் ஏற்பட்டது.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பால் 2017ம் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து `வாடிவாசல் திறக்கும்வரை வீடு திரும்பமாட்டோம்’ என்ற கோஷத்தோடு 2017 ஜனவரி 16-ம் அலங்காநல்லூரில் சிறிய அளவில் தொடங்கிய போராட்டம் தமிழகம் முழுவதும் தீ போல பரவியது.
சென்னை மெரீனா கடற்கரையில் லட்சக்கணக்கில் தன்னெழுச்சியாகத் திரண்ட இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கும்வரை போராட்டம் ஓயாது என்று அறிவித்தனர். அமைதியாக நடைபெற்ற அந்தப் போராட்டக் களத்தில் இருந்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. இதனால், தேசிய அளவில் மட்டுமல்லாது சர்வதேச அளவில் ஜல்லிக்கட்டுப் போராட்டம் கவனம் பெற்றது.
அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டெல்லி சென்று ஜல்லிக்கட்டு சிறப்பு சட்டத்துக்கு மத்திய அரசிடம் அனுமதி கோரினார். வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால், இந்த விவகாரத்தில் மத்திய அரசால் எதுவும் செய்ய முடியாது என பிரதமர் மோடி கைவிரித்தார். அதேநேரம், தமிழகத்துக்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என்று முதல்வர் ஓ.பி.எஸ்-சிடம் தெரிவித்தார். தொடர்ந்து டெல்லியில் முகாமிட்ட ஓ.பி.எஸ் உள்ளிட்ட தமிழகக் குழு, சட்ட வல்லுநர்களோடு ஆலோசித்து அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க முடிவெடுத்தது. அதன்படி, அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
அலங்காநல்லூரில் 2017ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்படும், அதை நானே தொடங்கிவைப்பேன் என்று அறிவித்து, ஓ.பி.எஸ் அங்கு சென்றார். ஆனால், நிரந்தரத் தீர்வு கிடைக்கும்வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என போரட்டக்காரர்கள் அறிவித்தனர். இதனால், திட்டமிட்டபடி ஜனவரி 22-ல் திட்டமிட்டபடி ஜல்லிக்கட்டு நடத்த முடியவில்லை. அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தொடங்கிவைக்க முடியாமல் ஓ.பி.எஸ் திரும்பிச் சென்றார். அதையடுத்து, 2017 ஜனவரி 23-ம் தேதி தொடங்கிய தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் சிறப்பு சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
சட்டப்பேரவையில் சட்டம் நிறைவேற்றப்பட்ட அதேநாளின் அதிகாலை வேளையில் போராட்டக்களத்தில் உறக்கத்தில் இருந்தவர்களிடையே புகுந்த போலீஸார், உடனடியாக கலைந்து செல்லும்படி எச்சரித்தனர். அதையடுத்து, கூட்டத்தில் புகுந்து தடியடியில் ஈடுபட்டனர். இதில், ஏராளமானோர் காயமடைந்தனர். அப்போது வன்முறை வெடித்தது. சென்னை ஐஸ்ஹவுஸ் காவல்நிலையத்துக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதில், அங்கிருந்த வாகனங்களும் தீயில் கருகின. ஐஸ்ஹவுஸ், திருவல்லிக்கேணி போன்ற கடற்கரையை ஒட்டியுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்த போலீஸார் தடியடி நடத்தினர். இதனால், அப்பகுதி மக்கள் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகினர்.