மதுரை மீனாட்சியம்மன் கோயில் சங்க காலம் தொட்டு இன்றளவும் மக்கள் வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் தலம். உலகப் புகழ்பெற்ற இந்த ஆலயம் தமிழகத்தின் பெருமைமிகு அடையாளம்.
-
1 தலபுராணம்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் குலசேகர பாண்டிய மன்னனால் கட்டப்பட்டதாக தல புராணம் சொல்கிறது. குலசேகர பாண்டியன் கனவில் வந்து சொன்னதால், கடம்பவனம் என்ற காட்டை அழித்து மீனாட்சியம்மன் கோயிலை கட்டமைத்திருக்கிறார். கோயிலின் தல விருட்சமாக கடம்ப மரமே இருக்கிறது.
-
2 நான்மாடக் கூடல்
மதுரையில் மீனாட்சி பிறந்ததால் மீனாட்சி சன்னிதி இந்தக் கோயிலில் முதன்மையாகக் கருதப்படுகிறது. கோயிலைச் சுற்றி நான்கு மாடங்கள் இருப்பதால் நான்மாடக் கூடல் என்ற பெயரும் மதுரைக்கு இருக்கிறது.
-
3 பாண்டிய இளவரசி மீனாட்சி
15 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கோயில் கிழக்கு மேற்காக 847 தெற்கு வடக்காக 792 அடியும் கொண்டது. பாண்டிய இளவரசியாக அன்னை மீனாட்சி அவதரித்ததையும், பின்னர் சிவபெருமானை மணமுடித்ததையும் தலபுராணம் சொல்கிறது.
-
4 திருவிழாக்கள்
மீனாட்சியம்மன் கோயில் திருவிழாக்களுக்குப் பெயர் பெற்றது. ஓராண்டில் 274 திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அவற்றில் சித்திரைத் திருவிழா முதன்மையானது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள மக்களால் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சித்திரைத் திருவிழாவில் மீனாட்சியம்மன் திருக்கல்யாணம், திருத்தேர் பவனி, பட்டாபிஷேகம் போன்றவையும் சிறப்பாகக் கொண்டாடப்படும்.
-
5 திருமலை நாயக்கர்
முதலில் திருச்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த திருமலை நாயக்கருக்கு இருந்த உடல் பிரச்னை மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சீரமைத்து வழிபட்டதால் நீங்கியதாக வரலாறு உண்டு. அவர் காலத்துக்குப் பின்னரே சித்திரைத் திருவிழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
-
6 ஆயிரங்கால் மண்டபம்
கலைநயமிக்க வேலைப்பாடுகள் கொண்ட மீனாட்சியம்மன் கோயிலில் 7 ஸ்வரங்களின் ஒலியை எழுப்பும் தூண்கள் இருக்கின்றன. ஆயிரங்கால் மண்டபம் இந்தக் கோயிலின் சிறப்பு. அந்த மண்டபத்தில் 958 தூண்கள் இருக்கின்றன.
-
7 முக்குறுணி விநாயகர்
திருப்பணிகளுக்காக வண்டியூர் தெப்பக்குளத்தில் மண் எடுத்தபோது கிடைத்த முக்குறுணி விநாயகர் சிலை மீனாட்சியம்மன் கோயிலிலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. விநாயகர் சதுர்த்தியன்று 18 படி அரிசி மாவில் ஒரே கொழுக்கட்டை செய்து முக்குறுணி விநாயகருக்குப் படைக்கும் வழக்கம் இன்றும் தொடர்கிறது.
-
8 பொற்றாமரைக் குளம்
கோயிலில் இருக்கும் பொற்றாமரைக் குளம் புகழ்பெற்றது. சிவபெருமானே தரையைக் கீறி குளத்தை ஏற்படுத்தியதாக நம்பப்படுகிறது. குளத்தின் தென்புறத்தில்தான் திருக்குறள் அரங்கேற்றப்பட்டதாக நம்பப்படுகிறது. அதனாலேயே குளத்தைச் சுற்றியுள்ள பிரகாரச் சுவர்களில் 1,330 குறள்களும் எழுதி வைக்கப்பட்டிருக்கின்றன.
-
9 இரட்டை விநாயகர்
மூலதானத்தின் தென்பகுதியில் உச்சிஷ்டர், கூத்தர் என இரட்டை விநாயகர்கள் அருள் புரிகின்றனர். விநாயகரே விநாயகரை வணங்கித் துதிக்கும் தத்துவமாக இந்த சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
-
10 கடைச்சங்கப் புலவர்கள்
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையின் மணம் பரப்பும் விதமாக கோயிலில் சங்கத்தார் சன்னிதி இருக்கிறது. இங்கு சிவபெருமான் உள்பட 49 கடைச்சங்க புலவர்கள் என்று குறிப்பிடப்படுவோரின் சிலைகள் இருக்கின்றன.
-
11 திருக்கல்யாண சுந்தர்
கோயிலில் இருக்கும் திருக்கல்யாண சுந்தர், திருமண தடை நீக்கி அருள்புரிவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஜாதகம் அல்லது ஏதேனும் தடை இருப்பவர்கள் திருமணம் நடைபெறால் துன்பப்படும் பக்தர்கள் இவரை வணங்கினார், தடை நீங்கி திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.
-
12 நாயன்மார்கள்
சைவ சமயத்துக்குத் தொண்டாற்றிய 63 நாயன்மார்களின் சிலைகள் முதல் பிரகாரத்தில் இருந்து தெற்காக நீண்ட வரிசையில் அமைக்கப்பட்டிருக்கின்றன.
-
13 நடராஜர்
சுவாமி சன்னிதியின் வலதுபுறத்தில் நடராஜர் சிலை இருக்கிறது. மற்ற கோயில்களில் இருப்பதைப் போலல்லாமல் இடது காலை ஊன்றி வலதுகாலை தூக்கியபடி நிற்கிறார். `யுகம் யுகமாக வலது காலை ஊன்றி ஆடிக்கொண்டிருக்கும் எம்பெருமான், இடது காலை ஊன்றி ஆசுவாசப்படுத்திக் கொள்ளக் கூடாதா?’ என மதுரைய ஆண்ட ராஜசேகர பாண்டிய மன்னன் மனம் உருகி வேண்டிக் கொண்டதால், அவர் வேண்டுதலை நிறைவேற்றவே நடராஜர் காலை மாற்றி நடனமாடியதாக நம்பப்படுகிறது.
-
14 குங்குமம்
மீனாட்சியம்மன் கோயிலில் குங்குமமும் புட்டும் பிரசாதங்களாக இருக்கின்றன. கஸ்தூரி மஞ்சளுடன், வெங்காரம், படிகாரம், நல்லெண்ணெய் சேர்த்து இயற்கையாகத் தயாரிக்கப்படும் குங்குமம் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடலை நினைவு கூறும் வகையில் புட்டும் பிரசாதமாக இருக்கிறது. கோயிலில் இருக்கும் பிரசாத ஸ்டால்களில் புட்டு பிரசாதத்தைப் பக்தர்கள் வாங்கலாம்.
-
15 மீனாட்சியம்மன்
மூலவர் சுந்தரேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் இருக்கும் மீனாட்சியம்மனின் சிலை மரகதக் கல்லால் ஆனது. அதனால் பச்சை நிறத்தில் மீனாட்சி பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.
-
16 நான்காவது தலம்
சிதம்பரம், காசி, திருக்காளத்தி வரிசையில் சிவபெருமானின் முக்கியமான நான்காவது தலமாகவும் அம்மனின் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் இருக்கிறது.
-
17 கோயில் கோபுரங்கள்
கோயில் எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உள்ளடக்கியது. இந்திர விமானம் என்றழைக்கப்படும் கருவறை விமானங்களை 32 சிங்கங்களும் 64 சிவகணங்களும் 8 வெள்ளை யானைகளும் தாங்குவது போன்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
-
18 கோயில் மண்டபங்கள்
அஷ்டசக்தி மண்டபம், மீனாட்சி நாயக்கர் மண்டபம், முதலி மண்டபம், ஊஞ்சல் மண்டபம், கம்பத்தடி மண்டபம், கிளிக்கூட்டு மண்டபம், மங்கையர்க்கரசி மண்டபம், சேர்வைக்காரர் மண்டபம், திருகல்யாண கல்யாண மண்டபம், ஆயிரங்கால் மண்டபம் போன்ற மண்டபங்கள் சிற்பக் கலைநயத்துடன் அமைக்கப்பட்டிருக்கின்றன.
-
19 தமிழ் மாதங்களின் பெயர்கள்
மீனாட்சியம்மன் கோயிலுக்குள் இருக்கும் வீதிகளுக்கு ஆடி வீதி என்று பெயர். அதைத் தாண்டி கோயிலுக்கு வெளியில் சித்திரை வீதிகள், சித்திரை வீதிகளுக்கு அடுத்த வீதிகள் ஆவணி வீதிகள், அதைத் தாண்டி வெளியே வந்தால் மாசி வீதிகள். அதையும் தாண்டி வெளி வீதிகள் என மதுரை நகர் அமைக்கப்பட்டுள்ளது.
-
20 வெள்ளிசபை
சிவபெருமான் நடனமாடியதாக ஐதீகம் கொண்ட ஐந்து தலங்களில் முக்கியமானது இந்தத் தலம். ஐம்பெரும் சபைகளில் வெள்ளி சபை என்று போற்றப்படுவது மீனாட்சு சுந்தரேஸ்வரர் ஆலயம்.
0 Comments