மதுரை வைகையாற்றில் அழகர் பச்சைப் பட்டாடையுடன் இறங்கி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆண்டுதோறும் அவர் உடுத்தும் பட்டாடையின் நிறம் எப்படி தேர்வு செய்யப்படுகிறது….
சித்திரைத் திருவிழா
மதுரையில் ஆண்டுதோறும் நடக்கும் சித்திரைத் திருவிழா, ’திருவிழாக்களின் திருவிழா’ என்று போற்றப்படும் நிகழ்வு. இரண்டு ஆண்டுகளாக கொரோனாவால் பக்தர்களுக்கு அனுமதியில்லாமல் நடந்தது. இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா, ஏப்ரல் 5-ம் தேதி மீனாட்சியம்மன் கோயில் கொடியேற்றத்தோடு தொடங்கியது. ஏப்ரல் 12-ம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகமும் 14-ம் தேதி மீனாட்சி – சொக்கநாதர் திருக்கல்யாண வைபோகம் மற்றும் 15-ம் தேதி தேரோட்ட நிகழ்வும் பக்தர்களை பக்திக் கடலில் ஆழ்த்தியது. விழாவின் உச்சமாக அழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வு ஏப்ரல் 16-ம் தேதி காலையில் நிகழ்ந்தது. இந்த ஆண்டு அழகர் பச்சை நிற பட்டாடை உடுத்தி வைகையாற்றில் எழுந்தருளினார்.
சரி, அழகர் உடுத்தும் பட்டாடையின் நிறம் எப்படி தேர்வு செய்யப்படுகிறது… அழகர் உடுத்திவரும் பட்டாடையை வைத்து மக்களின் நம்பிக்கை என்ன தெரியுமா?
அழகரின் பட்டாடை
அழகர் மலையிலிருந்து தன் தங்கை மீனாட்சியின் திருமணத்தில் கலந்துகொள்ள கீழிறங்கி வரும் அழகர், வைகையாற்றைக் கடந்து தெற்குப் பகுதிக்கு வரவே மாட்டார். அவர் வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே, மீனாட்சியின் திருமணம் முடிந்துவிடும். சைவ-வைணவ சமயங்களின் இணைவாக இந்த திருவிழாவை 16-ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் மாற்றியதாகக் குறிப்பிடுகிறார் தொல்லியல் அறிஞர் தொ.பரமசிவன்.
அழகர் ஆண்டுதோறும் வைகையாற்றில் இறங்குகையில், அவர் என்ன நிறத்தில் பட்டாடை அணிந்து வருகிறார் என்பதைக் காண பக்தர்கள் ஆர்வமுடன் இருப்பது வழக்கம். இந்த ஆண்டு பச்சைப் பட்டாடை உடுத்தி வந்தது போலவே அழகர் கடந்த சில ஆண்டுகளாக பச்சை பட்டாடையுடனே வைகையாற்றில் எழுந்தருளி வருகிறார். அழகரின் பட்டாடை நிறத்தை எப்படி தேர்வு செய்கிறார்கள்?
அழகர் மலையிலிருந்து கீழிறங்கி வரும் கள்ளழகரின் ஆடைகள், ஆபரணங்கள் அடங்கிய பெட்டிகளும் அவருடன் கொண்டு வரப்படும். அதில், பட்டாடைகள் இருக்கும் பெட்டியில் பட்டர் ஒருவர் கையை விட்டு ஒரு ஆடையை எடுப்பாராம். அப்போது, எந்த நிற பட்டாடை வருகிறதோ, அதையே வைகையாற்றில் இறங்கும்போது அழகருக்கு உடுத்துவது வழக்கம். அந்தப் பெட்டியில், வெள்ளை, நீலம், மஞ்சள், சிவப்பு மற்றும் பச்சை நிறத்தில் பட்டாடைகள் இருக்குமாம்.
மக்களின் நம்பிக்கை
வைகையாற்றில் இறங்கும் அழகர் எந்த நிறத்தில் பட்டாடை உடுத்தி வருகிறாரோ, அதற்கேற்றார்போல் அடுத்த ஆண்டு இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. பச்சை நிற ஆடை உடுத்தியிருந்தால், அந்த ஆண்டு விளைச்சல் தொடங்கி மக்கள் வாழ்வு வரை அனைத்தும் பசுமையாக இருக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள். அதேபோல், வெள்ளை, நீலப்பட்டு கட்டி வந்தால் அந்த ஆண்டு இடைப்பட்ட நிலையில் இருக்கும் என்றும் சிவப்புப் பட்டு கட்டி வந்தால், அந்த ஆண்டு பேரழிவு நிகழும் என்பதும் மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. அதேநேரம், மஞ்சள் பட்டுடுத்தி வந்தால் அந்த ஆண்டில் மங்களகரமான நிகழ்வுகள் நடக்கும் என்றும் மக்கள் நம்புகிறார்கள்.
0 Comments