நட்சத்திர கோயில்கள் – மகம் நட்சத்திரத்துக்கு எந்த கோயில்ல வழிபடணும்?

நட்சத்திரங்கள் என்பது நிலவு சார் அளவு ஆகும். ராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களும் பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பு என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள். ஒவ்வொரு நட்சத்திரங்களும் 4 பாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மனிதன் பிறக்கும் பொழுதே அவனுடன் சேர்ந்து அவனுக்குரிய ராசியும் நட்சத்திரங்களும் தோன்றிவிடுகின்றன. வானில் திங்கள் நிற்கும் நாள் மீன் கூட்டம், அப்பொழுதுக்கான நட்சத்திரம் என எடுத்துக்கொள்ளப்படுவது ஐதீகம்.

எடுத்துக்காட்டாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன், ராசிச் சக்கரத்தில் ரேவதி நட்சத்திரப்பிரிவில் இருந்தால் அந்த நேரத்துக்குரிய நட்சத்திரமாக ரேவதி எடுத்துக்கொள்ளப்படுகிறது. வாழ்வில் இருள் நீங்கி ஒளிபொருந்திய சூழல் உருவாக தங்களின் நட்சத்திரங்களுக்கு உரிய கோயில்களுக்குச் சென்று வழிப்பட்டு வந்தால் நன்மை உண்டாகும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் இன்று மகம் நட்சத்திரத்திற்கு எந்த கோவிலை வழிப்பட வேண்டும், என்னென்ன இடங்களை தவறாமல் தரிசிக்க வேண்டும் என்பதனை பற்றித்தான் நாம் இக்கட்டுரையில் தெரிந்து கொள்ளப்போகிறோம்.

மகம் நட்சத்திரம்

மகத்தில் பிறந்தவர்கள் ஜகத்தை ஆள்வார்கள் என்பது ஜோதிட பழமொழியாகும். ஆனால், மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைவரும் ஜகத்தை ஆள்வார்கள் என்பது சாத்தியம் கிடையாது. அதாவது தன்னை சார்ந்த இடத்தில் தலைமைப் பொறுப்பு ஏற்று விளங்குவார்கள். மகம் நட்சத்திரத்தின் நட்சத்திர அதிபதியாக ஞானகாரகனான கேதுவும், ராசி அதிபதியாக சுக்கிரனும், நவாம்ச அதிபதியாக முதல் பாதத்தில் செவ்வாயும், இரண்டாம் பாதத்தில் சுக்கிரனும், மூன்றாம் பாதத்தில் புதனும், நான்காம் பாதத்தில் சந்திரனும் வலம் வருகின்றன.

மகம் நட்சத்திரக்காரர்கள் விநாயகப்பெருமானையும், சூரிய பகவானையும் வணங்கி வழிபட்டு வர நன்மை உண்டாகும் என்பது நம்பிக்கை. எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு விளங்குபவர்கள். மகம் நட்சத்திரகாரர்கள் தெய்வபக்தி மிகுந்து காணப்படுவர். சாஸ்திரம், சம்பிரதாயங்களில் அதிக நம்பிக்கையுடன் விளங்குவார்கள். இந்நட்சத்திரகாரர்கள் பிடிவாத குணம் மிகுந்து காணப்படுவார்கள். 27 நட்சத்திரங்களில் ஒன்றாக இருக்கும் இந்த மகம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் அதிஷ்டம் மிக்கவர்களாக இருப்பார்கள். அவர்கள் எது செய்தாலும் தனித்துவம் மிகுந்து காணப்படுவார்கள் என்பது நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களிடம் நயந்து கேட்டால் நாட்டையே கொடுப்பார்கள். மிரட்டி கேட்டால் ஓட கூட கொடுக்க மாட்டார்கள் என்பதே ரகசியம் ஆகும். இந்நட்சத்திரக்காரர்கள் இறை வழிபாடு செய்யும் பொழுது இறைவனுக்கு மல்லிகை மலரை வைத்து வழிப்பட்டால் நன்மை உண்டாகும். இந்நட்சத்திரக்காரர்கள் எள் தானம் செய்வதன் மூலம் தங்களுடைய அதிர்ஷ்டத்தை அதிகரித்துக்கொள்ளலாம்.

மகம் நட்சத்திரக்காரர்களுக்கு சூரியன், செவ்வாய், வியாழன் ஆகிய காலங்கள் சாதகம் அற்றவையாக பார்க்கப்படுகின்றன. எனவே அத்தகைய காலங்களில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள சூரிய சாந்தி ஹோமம், கேது சாந்தி ஹோமம் ஆகிய ஹோமங்களை செய்து வர துன்பங்கள் வராமல் காத்துக்கொள்ளலாம். மகம் நட்சத்திரக்காரர்கள் சூரிய மந்திரம், கேது மந்திரம், மற்றும் கணபதி மந்திரங்களை தினந்தோறும் கேட்டு துதித்து வர புத்துணர்ச்சியுடன் இருக்கலாம் என்பது நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது. அரச மரத்தடியில் அமர்ந்திருக்கும் விநாயகரை வெள்ளிக்கிழமை தோறும் மகம் நட்சத்திரக்காரர்கள் வழிப்பட்டு வர எதிபார்க்காத நன்மைகளை அனுபவிப்பார்கள். அதே போல் சனிக்கிழமை தோறும் ஸ்ரீமன் நாராயணணை வழிப்பட்டு கண் பார்வை சம்பந்தமாக கஷ்டப்படும் ஏழை எளிய மக்களுக்கு பண உதவிகளை செய்து வந்தால் தடைப்பட்ட தொழில்கள் எல்லாம் விருத்தி அடைவதை கண்கூடாக காண முடியும்.

மகாலிங்கேஸ்வரர் கோயில்

விராலிப்பட்டி விலக்கு ஸ்ரீமகாலிங்கேஸ்வரர் கோயில்

ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் திருக்கோயிலானது திண்டுகல்லில் இருந்து நத்தம் செல்லும் வழியில் உள்ள விராலிப்பட்டியில் அமைந்துள்ளது. இக்கோவிலானது, நூற்றாண்டுகள் பழமை வாய்ந்ததாக திகழ்கிறது. இத்தலத்தின் சிறப்பாக பார்க்கப்படுவது, சிவராத்திரியை ஒட்டி 30 நாட்களும் சூரிய ஒளி மூலவர் மீது படும். அதாவது, காலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவன் மீதும், மாலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் பைரவர் மீதும் விழுகிறது. இத்திருத்தலத்தின் நடையானது காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்கப்படுகிறது.

ராமயணத்தில் சீதையை மீட்டு வந்த ராமர் வரும் வழியில் தேவ குருவின் புத்திரரான பரத்வாஜரை சந்தித்தார். அவருடைய உபசரிப்பை ஏற்றுக்கொண்டார். இத்தகைய சிறப்பு வாய்ந்த பரத்வாஜர் இத்தலத்தினுள் உள்ள மகாலிங்கேஸ்வரரை வழிபட்டதாக தல புராணங்கள் கூறுகின்றன. தேவ குருவின் புத்திரரான பரத்வாஜர் மகம் நட்சத்திரத்தில் பிறந்ததால், இத்தலமானது மகம் நட்சத்திரக்காரர்களுக்கு விஷேசமாகப் பார்க்கப்படுகிறது. மகம் நட்சத்திரக்காரர்கள் இத்தல இறைவனை தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது சென்று வழிப்பட்டு வணங்கி வர வேண்டும்.

Also Read – நட்சத்திரக் கோயில்கள் – ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபட வேண்டிய கோயில்!

இத்திருத்தலத்தில் மகாலிங்கேஸ்வரர் கிழக்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கிறார். மகாலிங்கேஸ்வரருக்கு வலது பக்கத்தில் உள்ள சன்னதியில், மரகதவள்ளி, மாணிக்கவள்ளி ஆகிய அம்பாள்கள் தெற்கு நோக்கி மதில் ஓரத்தில் காட்சி அளிக்கின்றன. இவர்களின் சன்னதியை எட்டி பார்த்துதான் வழிப்பட வேண்டும். இத்தகைய அமைப்பு எங்கும் காணமுடியாத அரிதான தரிசனம் ஆகும். இவ்விரு அம்பாள்களும் இச்சா சக்தியாகவும், கிரியா சக்தியாகவும் அருள்பாலிக்கின்றனர். இத்தகைய சக்தி வாய்ந்த அம்பாள்களை தரிசித்தால், ஞான சக்தியான இறைவனை எளிதாக அடையலாம் என்பது நம்பிக்கை. பரத்வாஜர் இத்தலத்தில் ஒரு தவமேடையில் யோகத்தில் மனதை ஒடுக்கி சிவனை வழிப்பட்டதால், இத்தலத்திற்கு ஒடுக்கம் தவசி மேடை என்ற மறு பெயரும் உண்டு. இத்தலம் மாசி மகத்தன்று விஷேச பிரசித்திப் பெற்று விளங்குகிறது. மகம் நட்சத்திரக்காரர்கள், தங்களுக்கு உண்டான நோய்கள் நீங்க சிவன் சன்னதியில் நெய்தீபம் ஏற்றி வைத்து வழிப்பட்டு வர நன்மைகள் உண்டாகும். வீடுகளில் வாஸ்து குறைபாடு உள்ளவர்கள் அந்த குறைகளை நீக்க சிறப்பு பூஜைகள் செய்யலாம். இந்நட்சத்திரக்காரர்கள் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும் வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திகடன் செலுத்தலாம்.

இத்திருத்தலத்தின் கோயில் முகப்பில் இரண்டு பீடங்கள் உள்ளன. சிவனை தரிசிக்க வரும் அடியார்களின் பாதம், தன் மீது பட வேண்டும் என்பதற்காக பரத்வாஜர் இந்த நிலையில் இங்கு இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.

எப்படி போகலாம்?

ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் திருக்கோவிலானது, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. திண்டுகல்லில் இருந்து, நத்தம் செல்லும் வழியில் 12 கி.மீ தூரத்தில் விராலிப்பட்டி விலக்கு உள்ளது. அங்கிருந்து 2 கி.மீ தொலைவில் சென்றால் இவ்வாலயத்தை அடையலாம்.

திருச்சி, மதுரை, பழனி, விருதுநகர், தேனி, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்துகள் திண்டுக்கல்லுக்கு இயக்கப்படுகின்றன. இத்திருத்தலத்துக்கு அருகில் உள்ள விமான நிலையம் மதுரை விமான நிலையம். அருகில் உள்ள ரயில் நிலையம் திண்டுக்கல் ரயில் நிலையம் ஆகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top