நட்சத்திரங்கள் என்பது நிலவு சார் அளவு ஆகும். ராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களும் பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பு என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள். ஒவ்வொரு நட்சத்திரங்களும் 4 பாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மனிதன் பிறக்கும் பொழுதே அவனுடன் சேர்ந்து அவனுக்குரிய ராசியும் நட்சத்திரங்களும் தோன்றிவிடுகின்றன. வானில் திங்கள் நிற்கும் நாள் மீன் கூட்டம், அப்பொழுதுக்கான நட்சத்திரம் என எடுத்துக்கொள்ளப்படுவது ஐதீகம்.
எடுத்துக்காட்டாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன், ராசிச் சக்கரத்தில் ரேவதி நட்சத்திரப்பிரிவில் இருந்தால் அந்த நேரத்துக்குரிய நட்சத்திரமாக ரேவதி எடுத்துக்கொள்ளப்படுகிறது. வாழ்வில் இருள் நீங்கி ஒளிபொருந்திய சூழல் உருவாக தங்களின் நட்சத்திரங்களுக்கு உரிய கோயில்களுக்குச் சென்று வழிப்பட்டு வந்தால் நன்மை உண்டாகும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் இன்று உத்திரம் நட்சத்திரத்திற்கு எந்த கோயிலில் வழிபட வேண்டும், என்னென்ன இடங்களைத் தவறாமல் தரிசிக்க வேண்டும் என்பதைப் பற்றித்தான் நாம் இக்கட்டுரையில் தெரிந்து கொள்ளப்போகிறோம்.
உத்திரம் நட்சத்திரம்
உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், மன வலிமை மிக்கவர்களாகவும், உண்மையை பேசும் மனவுறுதி மிக்கவர்களாகவும் இருப்பார்கள். கேள்வி ஞானத்தில் சிறந்து விளங்கி, அறிவாற்றல்மிக்கவர்களாக இருப்பார்கள். உத்திரம் நட்சத்திரத்திரம் தான் ஸ்ரீமகாலெட்சுமி பிறந்தாள். செல்வத்துக்கே உரிய மகாலெட்சுமியே இந்நட்சத்திரத்தில் பிறந்ததினால் இந்நட்சத்திரகாரர்கள் பொதுவாகவே செல்வ செழிப்பு மிக்கவர்களாக இருப்பார்கள். பொருளாதாரத்தில் பிரச்னைகளை சந்திக்காத வண்ணமாக வாழ்கையானது, அமையும். பொதுவாக உத்திர நட்சத்திரத்தில் குழந்தை ஒன்று பிறந்தால் அந்த குடும்பமே செல்வ கடாட்ஷத்தோடு இருக்கும் என்பது நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
உத்திர நட்சத்திரத்தின் நட்சத்திர அதிபதியாக சூரியனும், ராசி அதிபதியாக முதல் பாதத்தில் சூரியனும், மற்ற மூன்று பாதங்களின் ராசி அதிபதியாக புதனும், நவாம்ச அதிபதியாக முதல் மற்றும் நான்காம் பாதத்தில் குருவும், இரண்டாம் மற்றும் மூன்றாம் பாதத்தில் சனியும் வலம் வருகின்றன. உத்திர நட்சத்திரக்காரர்கள் ஸ்ரீ மகாலெட்சுமி மற்றும் ஆஞ்சநேயரை வணங்கி வழிப்பட்டு வர அதிக நன்மைகள் உண்டாகும் என்பது நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
உத்திரம் நட்சத்திரக்காரர்கள் தங்களுடைய வாழ்நாள் முழுவதும் அனைத்து விசயங்களிலும் சிறந்த பலன்களை அடைய வளர்பிறை ஞாயிறுகளில் சூரிய பகவானுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிப்பட்டு வணங்கி வர வேண்டும். அதே போல் வெள்ளிக்மை தோறும், தங்களுக்கு அருகில் இருக்கும் லட்சுமி தேவி கோவிலுக்கு சென்று துளசி மாலை மற்றும் தாமரை பூ மலர்கள் கொண்டு வணங்கி வழிப்பட்டு வந்தால் செல்வ வலம் பெருகும் என்பது நம்பிக்கை. உத்திரம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படுகின்றன துரதிர்ஷ்டங்கள் நீங்க, ஞாயிற்றுக்மை வரும் பிரதோஷ நாட்கள் அன்று, சிவன் கோயிலுக்குச் சென்று சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் பால் மற்றும் தேன் அபிஷேகம் செய்து வழிபட்டு வர வேண்டும்.
பொதுவாகவே உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு, செவ்வாய், புதன் மற்றும் குரு ஆகிய காலங்கள் சாதகம் அற்றவைகளாக இருக்கும். அத்தகைய காலங்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள சூரிய சாந்தி ஹோமம், சந்திர சாந்தி ஹோமம் அகிய ஹோமங்களை பரிகாரங்களாக செய்ய வேண்டும்.
லால்குடி ஸ்ரீமாங்கல்யேஸ்வரர் திருக்கோவில்
ஸ்ரீமாங்கல்யேஸ்வரர் திருக்கோவிலானது, திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி பகுதியில் அமைந்துள்ளது. இத்திருத்தலம் உத்திரம் நட்சத்திரக்காரர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று வணங்கி வழிபட வேண்டிய முக்கிய தலமாகும். மாங்கல்ய மகரிஷி என்பவர், இத்தலத்தில் உள்ள சிவபெருமானை நோக்கி கடும் தவம் கொண்டார். காலையிலும் மாலையிலும் பூஜைகள் பல செய்தார். அதன் விளைவாக சிவபெருமான் அவர் முன் தோன்றி காட்சி அருளினார். தன் முன் தோன்றிய சிவபெருமானிடம் மகரிஷி இத்தலத்துக்கு மாங்கல்ய வரம் வேண்டி வருவோருக்கு அந்த வரத்தினை தந்தருள வேண்டும் என்று கூறினார் என்பது புராண வரலாறாகும். அத்துடன் மாங்கல்ய மகரிஷி இத்தலத்தில் தவம் செய்யும் கோலத்தில் அமர்ந்தபடி காட்சி அளிக்கிறார்.
Also Read – நட்சத்திரக் கோயில்கள் – பூரம் நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபட வேண்டிய கோயில்!
திருமணத்தடை உள்ளோர், மாங்கல்ய வரம் வேண்டுவோர் இத்தலத்துக்கு வந்து மாங்கல்ய மகரிஷியை மனதார வழிபட்டுக் கொண்டால் அத்தடை நீங்கி நன்மை உண்டாகும் என்பது நம்பிக்கை. மாங்கல்ய தோஷத்தை நீக்கி, திருமண வரம் தரும் மாங்கல்யேஸ்வரர் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மேலும் இத்தலத்தில் உள்ள இறைவி மங்களாம்பிகை தெற்கு நோக்கியவாறு காட்சி அளிப்பது இத்தலத்தின் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது.
தடைபட்ட திருமணத்தால் வருந்துவோர் இத்தலத்துக்கு வந்து, மாங்கல்ய மகரிஷிக்கு நெய்தீபம் ஏற்றி, மாலை சாற்றி அத்துடன் அவர் பாதத்தில் ஜாதகத்தை வைத்து வழிப்பட்டு வந்தால், நன்மை உண்டாகும். மேலும் உத்திர நட்சத்திர நாளன்று கன்னிப்பெண்கள் இத்திருத்தலத்துக்கு சென்று அம்மன் மற்றும் மாங்கல்ய மகரிஷிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, மஞ்சள், குங்குமம், சீப்பு, கண்ணாடி, சட்டைத்துணி, பூ, பழம் போன்ற மங்கல பொருட்களை சுமங்கலிபெண்களுக்கு வழங்கி வழிப்பட்டுக் கொண்டால் விரைவில் திருமண பாக்கியங்கள் கிட்டும் என்பது பெரும் நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
இத்திருத்தலமானது திருமண பாக்கியம் தரும் தலமாக மட்டுமில்லாமல் குடும்ப ஒற்றுமை மற்றும் கால் சம்பந்த்தமாக பிரச்சனை உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டு வர நன்மைகள் உண்டாகி பிரச்னைகள் தீரும். விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி பெருவிழா, திருக்கார்த்திகை தீபம், திருவாதிரைப் பெருவிழா, ஆகிய நாட்களில் இத்தலமானது, பிரசித்தி பெற்று விளங்குகிறது. இக்கோயில் நடையானது, காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்கப்படுகிறது.
எப்படி போகலாம்?
ஸ்ரீ மாங்கல்யேஸ்வரர் திருக்கோவிலானது, திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி தாலுகாவில் இருக்கும் இடையாற்று மங்கலத்தில் அமைந்துள்ளது. சென்னை, கன்னியாகுமாரி, திண்டுக்கல், மதுரை, தேனி, பழனி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், கும்பகோணம், ஈரோடு, போன்ற தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பேருந்துகள் திருச்சிக்கு இயக்கப்படுகின்றன. அங்கிருந்து லால்குடி சென்று இடையாற்று மங்கலத்தை அடையலாம். இத்தலத்துக்கு அருகில் உள்ள ரயில் நிலையம் திருச்சி ரயில் நிலையமாகும். அருகில் உள்ள விமான நிலையம் திருச்சி விமான நிலையமாகும்.