மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் தங்கள் ராசிக்கு அதிபதி யார் என்பதைத் தெரிந்துகொண்டு, அவர்களின் ராசிக்குரிய கோயில்களில் சென்று வழிபட்டால் நல்ல பலன்கள் கிட்டும் என்பது ஐதீகம். ஒவ்வொருவரும் பிறக்கும்போதே நட்சத்திரமும் ராசியும் உடன் வந்துவிடும். நமது ராசியைத் தெரிந்துகொண்டு அதன் பலன்களுக்கேற்ப நம் வாழ்க்கையைத் திட்டமிட்டுக் கொண்டு இறைவனை சரணடைவது வாழ்வில் எல்லா நற்பேறுகளையும் பெற உதவும் என்கிறார்கள் ஜோதிட சாஸ்திர வல்லுநர்கள். வாழ்வில் மிகப்பெரிய தடைகள் ஏற்படும்போது, தங்கள் ராசிக்குரிய கோயில்களில் சென்று வழிபட்டால் அதிலிருந்து மீண்டு வரலாம் என்பது நம்பிக்கை.
அந்த வகையில் இன்று கடக ராசிக்கான அதிபதி யார்… அவர்கள் வணங்க வேண்டிய தெய்வம் என்ன என்பது பற்றியெல்லாம் தெரிந்துகொள்ளலாம்.

கடக ராசி
புனர்பூசம் 4-ம் பாகமும், பூசம் மற்றும் ஆயில்யம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் கடக ராசிக்காரர்கள். கடக ராசியின் அதிபதி சந்திரன். கடக ராசியின் சின்னம் நண்டு. கடக ராசிக்காரர்கள் கும்பகோணம் அருகே இருக்கும் கற்கடேஸ்வரர் திருக்கோயிலில் சென்று வழிபட்டால் சகல செல்வங்களும் பெறுவர் என்பது ஐதீகம். சந்திரன் சாப விமோசனம் பெற்ற தலம் என்பது கூடுதல் சிறப்பு. கிரக தோஷங்கள் நீங்க கற்கடேஸ்வரருக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்வார்கள். இந்த எண்ணெய்யை உட்கொண்டால் நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
கற்கடேஸ்வரர் திருக்கோயில்

தஞ்சாவூர் மாவட்டம் கும்போகணத்தை அடுத்த திருவிடைமருதூர் தாலுகாவில் இருக்கும் திருந்துதேவன்குடி எனும் சிறிய கிராமத்தில் அமைந்திருக்கிறது கற்கடேஸ்வரர் ஆலயம். கற்கடகம் என்றால் நண்டு. அதனால், இந்தக் கோயிலை நண்டாங்கோயில் என்று சுற்றுவட்டாரத்தில் அழைக்கிறார்கள். பொதுவாக சிவ தலங்களில் மூலவர் ஒரு அம்பாளுடன் காட்சியளிப்பார். ஆனால், கற்கடேஸ்வரர் திருக்கோயிலில் மூலவர் இரண்டு அம்பாள்களுடன் அருள்பாலிக்கிறார். அபூர்வ நாயகி, அருமருந்து நாயகி என இரண்டு அம்பாள்கள் அடுத்தடுத்த சன்னிநிதிகளில் காட்சியளிக்கின்றனர். கோயிலில் இருக்கும் விநாயகருக்கு கற்கடக விநாயகர் என்று பெயர். மேலும், சுப்பிரமண்யர் வள்ளி, தெய்வானையுடன் தனி சன்னிநிதியில் குடிகொண்டிருக்கிறார்.

தேவாரப் பாடல்பெற்ற 276 சிவ தலங்களில் 96-வது தலம் இது. காவிரி வடகரையில் இருக்கும் சிவாலயங்களில் 42-வது தலம் இது. தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கீழ் கோயில் இருக்கிறது. சகடக ராசிக்காரர்களின் பரிகார தலமாகக் கருதப்படும் இந்த ஆலயம் சந்திர தோஷத்தை நிவர்த்தி செய்யும் கோயிலாகும். விநாயகர் சதுர்த்தி, ஐப்பசி அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை போன்றவை விசேஷமான பண்டிகைகள். பிரதோஷ நாட்களிலும் சிறப்பு பூஜைகள், வழிபாடு மேற்கொள்ளப்படுவதுண்டு. காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும், மாலை 4 – 7 மணி வரையில் கற்கடேஸ்வரரைத் தரிசிக்கலாம்.
Also Read – Rasi Temples: மேஷ ராசிக்காரர்களுக்கு உகந்த தெய்வம்… வழிபட வேண்டிய கோயில் எது?
எப்படி செல்லலாம்?
கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் 10 கி.மீ தூரத்தில் இருக்கிறது திருவிசநல்லூர். இந்த கிராமத்துக்கு அருகே திருந்துதேவன்குடி இருக்கிறது. கும்பகோணத்துக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பேருந்து, ரயில் வசதி உள்ளது. அங்கிருந்து பேருந்துகள், ஆட்டோ, வாடகை வண்டிகள் மூலம் கோயிலை அடையலாம். தஞ்சாவூரில் இருந்து 47 கி.மீ தூரம். அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி (102 கி.மீ). கும்பகோணத்தில் இருந்து நண்டாங்கோயிலுக்கு நேரடியாகப் பேருந்து வசதி இருக்கிறது.

மிஸ் பண்ணக் கூடாத இடங்கள்
நண்டாங்கோயில் தரிசனத்தை முடித்துவிட்டு அருகில் திருவீசநல்லூரில் யோகநந்தீஸ்வரரையும், திருவிடைமருதூரில் மகாலிங்க சுவாமியையும் தரிசித்துவிட்டு வரலாம். சூரியனார் கோயிலுக்கு செல்லும் வழி என்பதால், அந்தக் கோயிலுக்கும் ஒரு விசிட் அடியுங்கள். கோயில் நகரான கும்பகோணத்தில் இருக்கும் மற்ற கோயில்களுக்கும் சென்றுவரலாம்.
0 Comments