Rasi Temples: கும்ப ராசி அதிபதி… அவசியம் வழிபட வேண்டிய கோயில் எது?

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் தங்கள் ராசிக்கு அதிபதி யார் என்பதைத் தெரிந்துகொண்டு, அவர்களின் ராசிக்குரிய கோயில்களில் சென்று வழிபட்டால் நல்ல பலன்கள் கிட்டும் என்பது ஐதீகம். ஒவ்வொருவரும் பிறக்கும்போதே நட்சத்திரமும் ராசியும் உடன் வந்துவிடும். நமது ராசியைத் தெரிந்துகொண்டு அதன் பலன்களுக்கேற்ப நம் வாழ்க்கையைத் திட்டமிட்டுக் கொண்டு இறைவனை சரணடைவது வாழ்வில் எல்லா நற்பேறுகளையும் பெற உதவும் என்கிறார்கள் ஜோதிட சாஸ்திர வல்லுநர்கள். வாழ்வில் மிகப்பெரிய தடைகள் ஏற்படும்போது, தங்கள் ராசிக்குரிய கோயில்களில் சென்று வழிபட்டால் அதிலிருந்து மீண்டு வரலாம் என்பது நம்பிக்கை. அந்த வகையில் இன்று கும்ப ராசி க்கான அதிபதி யார்… அவர்கள் வணங்க வேண்டிய தெய்வம் என்ன என்பது பற்றியெல்லாம் தெரிந்துகொள்ளலாம்.

கும்ப ராசி

கும்ப ராசி

அவிட்ட நட்சத்திரத்தின் மூன்று, நான்காம் பாதங்களும், சதய நட்சத்திரத்தின் நான்கு பாதங்களும், பூரட்டாதி நட்சத்திரத்தின் முதல் மூன்று பாதங்களிலும் பிறந்தவர்கள் கும்ப ராசிக்காரர்களாவர். கும்ப ராசியின் அதிபதி சனீஸ்வர பகவான். இந்த ராசிக்கான கோயில் ராமநாதபுரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தேவிபட்டினம் என்ற ஊரில் உள்ள ஸ்ரீ திலகேஸ்வரர் ஆலயம். கும்ப ராசிக்காரர்கள் குடும்பத்தோடு சென்று வழிபட்டால் சகல செல்வங்களும் கிட்டும் என்பது ஐதீகம்.

Also Read: மகர ராசி கோவில்

கும்ப ராசி அன்பர்கள் வழிபட வேண்டிய ‘அருள்மிகு நவபாஷாண நவக்கிரக கோயில்’

நவபாஷாணம் என்றும் நவகிரஹ கோயில் என்று அழைக்கப்படும் இங்கு ஸ்ரீராமபிரான் ராவண வதம் செல்வதற்கு முன் தனக்கு வெற்றி வேண்டி அங்குள்ள கடலை சாந்தபடுத்தி அங்கு 9 கற்களை நட்டு அதனை நவகிரகங்களாக பூஜை செய்ததாகக் கூறப்படுகிறது. கடலோரத்தில் உள்ள இந்தக் கோயிலுக்குச் செல்வதே புண்ணியம். மதிய நேரத்துக்கு முன் சென்று விட்டால் இங்குள்ள நவகிரகங்களும் கடலுக்குள் மூழ்கும் முன்னர் கண்குளிர தரிசிக்க முடியும்.

அருள்மிகு நவபாஷாண நவக்கிரக கோயில்

இக்கோயிலின் இறைவனாக ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி ஸ்தாபித்த நவகிரகங்களே பிரதான தெய்வங்களாக இருக்கின்றனர். இந்த கோயிலின் புனித தீர்த்தமாக கடல் நீரே இருக்கிறது. இங்கு ராமபிரானுக்கு சனி தோஷம் நீங்கியதாகவும், சிவன் மற்றும் பார்வதி தேவியின் காட்சி கிடைத்து, அவர்களின் ஆசிகளுடன் ராவணனுடனான போரில் ஸ்ரீராமர் வெற்றி பெற்றதாகவும் தல புராணம் கூறுகிறது. பல்லாயிரம் ஆண்டுகள் கடல் நீரில் இருந்தாலும் இன்றும் அந்த நவகிரகங்கள் நல்ல நிலையில் இருக்கின்றன. கடல் தீர்த்தத்தில் நீராடி இங்கிருக்கும் நவகிரகங்களுக்கும் நவதானியங்கள் சமர்ப்பித்து, ஒன்பது முறை வலம் வந்து வழிபட்டு, அன்னதானம் போன்ற தானங்களை செய்வதால் `பிரம்மஹத்தி தோஷம், பித்ரு தோஷம்’ போன்றவை நீங்குகிறது என்பது நம்பிக்கை.

Also Read :

எந்த ராசிக்காரர்கள் எந்த கோவில்களில் வழிபடவேண்டும்?

காலை 4.30 மணி முதல் மாலை 6.30 மணிவரை கோயில் திறந்திருக்கும். இருப்பினும், மதிய வேளைக்கு முன்னர் செல்வது நலம். கரையில் இருந்து 40 மீ தொலைவில் அமைந்திருக்கும் நவகிரகங்களை வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும் என்கிறார்கள் ஆன்மிகப் பெரியவர்கள். இந்தியாவிலேயே கடலுக்குள் நவக்கிரக கோயில்கள் அமைந்திருப்பது இங்கு மட்டும்தான் என்பது சிறப்பு. ஆடி மாத அமாவாசையில் 10 நாட்கள் நடைபெறும் திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த நாட்களில் நாடு முழுவதுமிருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கடலில் புனித நீராடுவர்.

எப்படிப் போகலாம்?

கும்ப ராசிக்கான கோவில்  அருள்மிகு நவபாஷாண நவக்கிரக கோயில்

ராமநாதபுரத்தில் இருந்து 15 கி.மீ தொலைவில் இருக்கிறது தேவிபட்டினம். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ராமநாதபுரத்துக்கு பேருந்து, ரயில் போக்குவரத்து இருக்கிறது. அருகில் இருக்கும் விமான நிலையம் மதுரை சர்வதேச விமான நிலையம். ராமநாதபுரம் சென்று அங்கிருந்து பேருந்து, வாடகை வாகனங்களில் செல்ல முடியும். மதுரையில் இருந்து ராமநாதபுரம் 115 கி.மீ தொலைவில் இருக்கிறது.

மிஸ் பண்ணக் கூடாத இடங்கள்

  • ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில்
  • திலகேஸ்வரர் கோயில்
  • உலகநாயகியம்மன் கோயில்
  • கடலடைத்த பெருமாள் கோயில்
  • மாரியம்மன் கோயில்
  • காளியம்மன் கோயில்
  • சேதுக்கரை
  • திருப்புல்லாணி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top