மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் தங்கள் ராசிக்கு அதிபதி யார் என்பதைத் தெரிந்துகொண்டு, அவர்களின் ராசிக்குரிய கோயில்களில் சென்று வழிபட்டால் நல்ல பலன்கள் கிட்டும் என்பது ஐதீகம். ஒவ்வொருவரும் பிறக்கும்போதே நட்சத்திரமும் ராசியும் உடன் வந்துவிடும். நமது ராசியைத் தெரிந்துகொண்டு அதன் பலன்களுக்கேற்ப நம் வாழ்க்கையைத் திட்டமிட்டுக் கொண்டு இறைவனை சரணடைவது வாழ்வில் எல்லா நற்பேறுகளையும் பெற உதவும் என்கிறார்கள் ஜோதிட சாஸ்திர வல்லுநர்கள். வாழ்வில் மிகப்பெரிய தடைகள் ஏற்படும்போது, தங்கள் ராசிக்குரிய கோயில்களில் சென்று வழிபட்டால் அதிலிருந்து மீண்டு வரலாம் என்பது நம்பிக்கை.
அந்த வகையில் இன்று மகர ராசிக்கான அதிபதி யார்… அவர்கள் வணங்க வேண்டிய தெய்வம் என்ன என்பது பற்றியெல்லாம் தெரிந்துகொள்ளலாம்.

மகர ராசி
உத்திராரம் 2-ம் பாதம், திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் வரையிலான நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மகர ராசிக்காரர்களாவர். ராசியின் அதிபதி சனி பகவான். இதன் குறியீடு ஆடு ஆகும். இதுவொரு பூமி ராசியாகும். மகர ராசிக்காரர்கள் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சென்று சிவபெருமானை மனமுருக வேண்டினால், தடைகள் நீங்கி வாழ்வில் வளம் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் தில்லை நடராஜர் பாதங்கள் சரணடைந்தால், அவை சூரியனைக் கண்ட பனியைப் போல் சிதறி ஓடும்.

சிதம்பரம் நடராஜர் கோயில்
தமிழகம் மட்டுமல்லாது நாட்டின் முக்கியமான சிவாலயங்களுள் ஒன்று சிதம்பரம் நடராஜர் கோயில். பஞ்சபூத தலங்களில் இது ஆகாயத் தலமாகும். கோயிலின் கட்டிடக்கலை கலைக்கும் ஆன்மீகத்திற்கும் இடையில் உள்ள தொடர்பை பிரதிபலிக்கிறது. சோழ ஆட்சிக் காலத்தில் சிதம்பரத்தில் பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சோழர்கள் தங்கள் குலதெய்வமாக சிதம்பரம் நடராஜரைக் கருதினர். இந்தக் கோயிலில் ஐந்து முக்கிய சபாக்கள் உள்ளன. அவை கனக சபா, சித்த சபை, நிருட்டா சபா, தேவா சபா மற்றும் ராஜசா. சிவனின் மிக முக்கியமான வடிவங்களில் நடராஜர் அம்சம் ஒன்று. தேவாரப் பாடல்பெற்ற காவிரி வடகரை தலங்களுள் ஒன்று.

பஞ்ச பூத ஆலயங்களில் ஆகாயத்தைக் குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றைக் குறிக்கும் காளஹஸ்தி ஆலயம், நிலத்தைக் குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 டிகிரி, 41 நிமிட கிழக்கு தீர்க்க ரேகையில் (LONGITUTE) அமைந்திருக்கின்றன. சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் கோலம் ஆனந்தத் தாண்டம் என்றழைக்கப்படுகிறது. தினசரி காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் கோயிலில் நடராஜரைத் தரிசிக்கலாம். தினசரி ஆறுகால பூஜைகள் நடராஜருக்கு செய்யப்படுகின்றன. மார்கழியில் நடைபெறும் 10 நாள் திருவிழா, சித்திரை தொடங்கி பங்குனி வரையிலான 12 மாதங்களில் மாதப்பிறப்பு நாட்கள், பிரதோஷம், தைப்பூச நாட்களில் நடைபெறும் திருப்பாவாடை உற்சவம் போன்ற நாட்களில் விசேஷமாக இருக்கும்.
Also Read – Rasi Temples: தனுசு ராசியின் அதிபதி யார்… கட்டாயம் வழிபட வேண்டிய கோயில் எது?
எப்படிப் போவது?

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்திருக்கிறது நடராஜர் கோயில். தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து பேருந்து, ரயில் போக்குவரத்து இருக்கிறது. அருகிலிருக்கும் விமான நிலையம் புதுச்சேரி. பேருந்து அல்லது ரயில் மூலம் கடலூர் சென்று அங்கிருந்து எளிதாக சிதம்பரத்தை அடைய முடியும். கடலூரில் இருந்து 43 கி.மீ தூரத்தில் சிதம்பரம் அமைந்திருக்கிறது. சென்னையிலிருந்து கிழக்குக் கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூரைக் கடந்து சிதம்பரத்தை அடையலாம். சிதம்பரத்தில் தங்கும் விடுதிகளும் இருக்கின்றன.
மிஸ் பண்ணக் கூடாத இடங்கள்!
- கடலூர் பாடலீஸ்வரர் கோயில்
- தில்லை காளியம்மன் கோயில்
- பிச்சாவரம்
- வீராணம் ஏரி
- நெய்வேலி அனல்மின் நிலையம்
0 Comments