Rasi Temples: மேஷ ராசிக்காரர்களுக்கு உகந்த தெய்வம்… வழிபட வேண்டிய கோயில் எது?

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் தங்கள் ராசிக்கு அதிபதி யார் என்பதைத் தெரிந்துகொண்டு, அவர்களின் ராசிக்குரிய கோயில்களில் சென்று வழிபட்டால் நல்ல பலன்கள் கிட்டும் என்பது ஐதீகம். ஒவ்வொருவரும் பிறக்கும்போதே நட்சத்திரமும் ராசியும் உடன் வந்துவிடும். நமது ராசியைத் தெரிந்துகொண்டு அதன் பலன்களுக்கேற்ப நம் வாழ்க்கையைத் திட்டமிட்டுக் கொண்டு இறைவனை சரணடைவது வாழ்வில் எல்லா நற்பேறுகளையும் பெற உதவும் என்கிறார்கள் ஜோதிட சாஸ்திர வல்லுநர்கள். வாழ்வில் மிகப்பெரிய தடைகள் ஏற்படும்போது, தங்கள் ராசிக்குரிய கோயில்களில் சென்று வழிபட்டால் அதிலிருந்து மீண்டு வரலாம் என்பது நம்பிக்கை.

அந்த வகையில் இன்று மேஷ ராசிக்கான அதிபதி யார்… அவர்கள் வணங்க வேண்டிய தெய்வம் என்ன என்பது பற்றியெல்லாம் தெரிந்துகொள்ளலாம்.

மேஷ ராசி

பழநி முருகன் கோயில்
பழநி முருகன் கோயில்

அஸ்வினி, பரணி மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தின் முதல் பாகம் வரை உள்ளவர்களுக்கு மேஷ ராசி. இந்த ராசியின் அதிபதி செவ்வாய். இந்த கிரகத்தின் அதிதேவதை முருகன். மேஷ ராசியின் அஸ்வினி ஞானத்தையும் பரணி அரச யோகத்தையும் குறிப்பவை. இந்த இரண்டு கோலங்களிலும் அருளாசி புரிபவர் அருள்மிகு பழனியாண்டவர். மேஷ ராசிக்காரர்கள் பழநியாண்டவரை நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நலம் பெறுவர். நெய் தீபம் ஏற்றுவதோடு செம்பருத்தி உள்ளிட்ட மலர்களை முருகன் திருவடிகளில் சமர்ப்பித்து வேண்டினால் தடைகள், நோய் நொடிகள் நீங்கி வளம் கிட்டும் என்பது ஐதீகம்.

கார்த்திகை மாதம், முருகனுக்கு உகந்த நாட்களில் பழநியாண்டவரை வழிபட்டால் விசேஷ பலன்கள் கிட்டும். பழனிக்கு செல்ல முடியாதவர்கள் அருகிலிருக்கும் முருகன் ஆலயங்களுக்குச் சென்று வழிபடலாம். முருகனை முழு மூச்சாய் நம்பி மனமுருகி வேண்டினால், மேஷ ராசிக்காரர்களுக்கு வேண்டிய வரங்களை அருள்வார் பழநியாண்டவர்.

பழநி கோயில்

பழநி முருகன் கோயில்
பழநி முருகன் கோயில்

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் மலை உச்சியில் ஸ்ரீதண்டாயுதபாணியாக அருள் பாலிக்கிறார் முருகன். மலை மேல் இருக்கும் இந்த ஆலயத்துக்கு 600 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். குடும்பத்தோடு பழநி மலைப் படியேறினால் குடும்பம் செழித்தோங்கும் என்பது நம்பிக்கை. மலைமேல் செல்ல ரோப் கார் வசதியும் இந்து சமய அறநிலையத் துறையால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

Also Read – மதுரை மீனாட்சியம்மன் கோயில் பற்றி இந்த 20 தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா?

எப்படி செல்லலாம்?

ராஜ அலங்காரத்தில் முருகன்
ராஜ அலங்காரத்தில் முருகன்

சென்னையில் இருந்து பழநிக்குப் பேருந்து வசதி இருக்கிறது. ரயிலில் செல்ல விரும்புவர்கள் திண்டுக்கல் சென்று அங்கிருந்து பேருந்தில் செல்லலாம். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசு, தனியார் பேருந்துகள் பழனிக்கு இயக்கப்படுகின்றன. காரில் செல்லத் திட்டமிடுபவர்கள் விழுப்புரம் வழியாக திண்டுக்கல், ஒட்டன்சத்திரத்தை அடைந்து அங்கிருந்து பழநி (495 கி.மீ) செல்லலாம். கோவை, திருச்சிக்கு விமானத்தில் சென்று, அங்கிருந்தும் பழநி செல்லலாம். தைப்பூசம், கார்த்திகை போன்ற விழா நாட்களில் பழநிக்குச் செல்வதாக இருந்தால், முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வது நல்லது. பழநியைச் சுற்றி தங்கும் விடுதிகள் நிறைய இருக்கின்றன. தவிர அரசு சார்பிலும் தங்கும் விடுதி கட்டப்பட்டிருக்கிறது.

மிஸ் பண்ணக் கூடாத இடங்கள்

பழநியாண்டவரை தரிசித்துவிட்டு, அருகிலிருக்கும் போகர் குகை, சரவண பொய்கை, குதிரையாறு அணை நீர்வீழ்ச்சி, வரதமனதி அணை, இடும்பன் ஆலயம், திரு ஆவினன்குடி, பெரிய நாயகி அம்மன் ஆலயம் போன்றவற்றை சுற்றிப்பார்த்து விட்டு வரலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top