மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் தங்கள் ராசிக்கு அதிபதி யார் என்பதைத் தெரிந்துகொண்டு, அவர்களின் ராசிக்குரிய கோயில்களில் சென்று வழிபட்டால் நல்ல பலன்கள் கிட்டும் என்பது ஐதீகம். ஒவ்வொருவரும் பிறக்கும்போதே நட்சத்திரமும் ராசியும் உடன் வந்துவிடும். நமது ராசியைத் தெரிந்துகொண்டு அதன் பலன்களுக்கேற்ப நம் வாழ்க்கையைத் திட்டமிட்டுக் கொண்டு இறைவனை சரணடைவது வாழ்வில் எல்லா நற்பேறுகளையும் பெற உதவும் என்கிறார்கள் ஜோதிட சாஸ்திர வல்லுநர்கள். வாழ்வில் மிகப்பெரிய தடைகள் ஏற்படும்போது, தங்கள் ராசிக்குரிய கோயில்களில் சென்று வழிபட்டால் அதிலிருந்து மீண்டு வரலாம் என்பது நம்பிக்கை.
அந்த வகையில் இன்று மிதுன ராசிக்கான அதிபதி யார்… அவர்கள் வணங்க வேண்டிய தெய்வம் என்ன என்பது பற்றியெல்லாம் தெரிந்துகொள்ளலாம்.
மிதுன ராசி

மிருகசீரிஷம் 3, 4-ம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ம் பாதங்கள் வரை உள்ளவர்கள் மிதுன ராசிக்காரர்களாவர். இரட்டை ராசி என்றழைக்கப்படும் மிதுன ராசிக்கு அதிபதி புதன். சூரியனைச் சுற்றி நிலையில்லாமல் சுற்றிக் கொண்டிருக்கும் கிரகம். புதன் என்றால் புத்திசாலித்தனத்தைக் குறிப்பது. புதனின் அம்சமான பெருமாளை வணங்கி வர வாழ்வில் எல்லா வளங்களும் பெறுவர். மிதுன ராசிக்காரர்கள் திருநெல்வேலி அருகே அமைந்துள்ள இரட்டை திருப்பதி எனப்படும் திருத்தொலைவில்லி மங்கலம் ஆலயம் சென்று வழிபட்டால் குடும்பம் செழிக்கும் என்பது ஐதீகம்.
இரட்டைத் திருப்பதி ஆலயம்

திருநெல்வேலி அருகே உள்ள ஆழ்வார் திருநகரியில் இருந்து வடகிழக்கு திசையில் திருத்தொலைவில்லி மங்கலம் அமைந்திருக்கிறது. அங்கு தேவபிரான் திருக்கோயில் இருக்கிறது. மூலவரான தேவபிரான் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். தாயார் உபநாச்சியார். தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கும் இந்த ஆலயத்தில் அதன் நீரே தீர்த்தமாக அளிக்கப்படுகிறது. பாண்டிய நாட்டு நவதிருப்பதி தலங்களில் இது கேது தலமாகக் கருதப்படுகிறது. இரட்டை திருப்பதி ஆலயங்களில் மற்றொன்று செந்தாமரைக் கண்ணன் திருக்கோயில். மூலவர் செந்தாமரைக் கண்ணன் ஆதிசேஷன் மீது வீற்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். தாயார் அருந்தடங்கண்ணியார். இரட்டை திருப்பதி ஆலயங்கள் பற்றி நம்மாழ்வார் 11 பாசுரங்களைப் பாடியிருக்கிறார். இங்குள்ள பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர். தாமரை, துளசி மாலை அல்லது முத்துமாலை சாற்றி ஏகாதசி திதி அல்லது புதன், சனிக்கிழமைகள் பெருமாளை வணங்கிவர பூரண அருள் கிட்டும் என்பது நம்பிக்கை. குறிப்பாக பஞ்சமி, அஷ்டமி தினங்களில் வழிபட்டால் பன்மடங்கு பலன் கிட்டும் என்பது ஐதீகம்.
Also Read – Rasi Temples: கடக ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய கற்கடேஸ்வரர் திருக்கோயில்!
எப்படி செல்லலாம்?
தூத்துக்குடி மாவட்டத்தில் தென் திருப்பேரை அருகே இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. இரண்டு கோயில்கள் இருந்தாலும் ஒரு ஆலயமாகவே கருதப்படுகிறது. காலை 8 மணி முதல் 12 மணி வரை, மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். அருகில் வீடுகள் அதிகம் இல்லை. இதனால், கோயில் நடை திறந்திருக்கும் நேரம் அறிந்து செல்வது நல்லது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருநெல்வேலிக்குப் பேருந்து, ரயில் போக்குவரத்து இருக்கிறது. அங்கிருந்து ஆழ்வார் திருநகரி சென்று, தென் திருப்பேரை வழியாக திருத்தொலைவில்லி மங்கலத்தை அடையலாம். அருகிலிருக்கும் விமான நிலையம் மதுரை.

மிஸ் பண்ணக் கூடாத இடங்கள்
பாண்டிய நாட்டு நவதிருப்பதி ஆலயங்களை தரிசித்துவிட்டு வரலாம். தவிர, நெல்லையப்பர் – காந்திமதி ஆலயம், கிருஷ்ணாபுரம் வெங்கடாச்சலபதி கோயில், சங்காணி அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோயில், மேலமாட வீதியில் உள்ள நரசிங்கப் பெருமாள் கோயில், நவதிருப்பதி போலவே நவகயிலாயங்கள் உள்ளிட்ட கோயில்களுக்கும் மறக்காம ஒரு விசிட் அடிங்க.
0 Comments