வரலட்சுமி விரதம்

வரங்களை அள்ளித் தரும் வரலட்சுமி விரதம்… நேரம், பூஜை செய்யும் முறை!

Varalakshmi Viratam 2021: பதினாறு வகை செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டி சுமங்கலிப் பெண்கள் கடைபிடிக்கும் விரதமே வரலட்சுமி விரதம்.

மகாலட்சுமியே நேரில் வந்து பக்தர்களுக்கு அருளிய மகாலட்சுமி விரதமுறை பெண்கள் அனுசரிக்கும் முக்கியமான விரதமாகும். இதை வரலட்சுமி நோன்பு என்றும் அழைப்பார்கள். திருமணமான பெண்கள் கணவனின் ஆயுள் பெருகவும், மணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கைகூடவும் வரலட்சுமி நோன்பு இருப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வரும் பௌர்ணமி நாளுக்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு இன்று (20-08-2021) வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

பூஜை செய்யும் முறை

வரலட்சுமி விரதம்
வரலட்சுமி விரதம்

வரலட்சுமி விரத நாளில் பெண்கள் மகாலட்சுமி வணங்கி, விரதமிருந்து குங்குமம், பூ உள்ளிட்ட மங்கலப் பொருட்களைப் பெண்களுக்குக் கொடுத்து வழிபாடு நடத்துவார்கள். தேங்காயில் மஞ்சள் பூசி அம்மன் திருமுகத்தை வைக்க வேண்டும். சந்தனம் அல்லது வெள்ளியாலான அம்மன் திருமுகத்தை வீட்டு வாசல் அருகே முதல் நாள் இரவே வைப்பது வழக்கம். இதன்மூலம் மகாலட்சுமியை வீட்டுக்கே அழைக்கலாம் என்பது ஐதீகம். விரத நாளின் அதிகாலை எழுந்து குளித்து மகாலட்சுமியை வணங்கி விரதத்தைத் தொடங்க வேண்டும். கலசம் வைத்து வழிபட முடியாதவர்கள் மகாலட்சுமியின் படத்தை வைத்து வணங்கி வழிபடலாம். மகாலட்சுமியை முந்தைய நாள் வீட்டுக்கு அழைக்கலாம் அல்லது விரத நாளில் பூஜையைத் தொடங்கலாம்.

வீட்டில் எந்த இடத்தில் பூஜை செய்ய நினைக்கிறீர்களோ, அந்த இடத்தை கோலமிட்டு அலங்காரம் செய்து மகாலட்சுமியை பிரதிஷ்டை செய்யுங்கள். வெள்ளிக்கிழமை மகாலட்சுமி அழைப்பவர்கள் இதே முறையில் அழைத்து வந்து பூஜைகளை மேற்கொள்ள வேண்டும். முந்தைய நாள் அழைப்பவர்கள் வெண் பொங்கல் நைவேத்தியம் வைத்து எளிமையான முறையில் அன்று பூஜைகளை முடித்து கொள்ளலாம். லட்சுமியை வழிபட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலன் உண்டாகும். வீடுகளில் மகாலட்சுமி படத்தை வைத்து வழிபடலாம். உப்பு பாத்திரத்தில் உப்பு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பூஜை செய்ய உகந்த நேரம்

வரலட்சுமி விரதம்
வரலட்சுமி விரதம்

காலையில் பூஜை செய்பவர்கள் 9:15 மணி முதல் 10:15 மணி வரை மேற்கொள்ளலாம். மாலையில் 6:30 மணி முதல் 7:30 மணி வரையிலான காலகட்டத்தில் பூஜைகளை செய்வது நல்லது. பூஜையின் போது உங்களுக்கு விருப்பமான நைவேத்தியங்களைப் படைக்கலாம். பொங்கல், சர்க்கரைப் பொங்கல், இடலி, சுண்டல், கலவை சாத வகைகளைப் படைக்கலாம். பின்னர், 9 நூல் இலைகள் கொண்ட நோன்புக் கயிறு வாங்கி பூ ஒன்றை கட்டி வைத்துக் கொள்ளுங்கள். பூஜை நிறைவு செய்யும்போது வீட்டுக்கு வந்திருக்கும் சுமங்கலிப் பெண்களுக்கு தாம்பூலம் கொடுத்து வழியனுப்ப வேண்டும். தாம்பூலத்தில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு ஆகியவற்றுடன் ரவிக்கை வைத்துக் கொடுக்கலாம். பரம்பரையாக செய்து வருபவர்கள் வீட்டு பெண்களுக்கு புடவை வாங்கி வைத்துக் கொடுப்பது உண்டு. அப்போது தான் பூஜை நிறைவு பெறும்.

Also Read – மதுரை மீனாட்சியம்மன் கோயில் பற்றி இந்த 20 தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top