இந்திய கிரிக்கெட்டின் அடையாளம் மாற்றிய 2007 டி20 உலகக் கோப்பை – 4 காரணங்கள்!

இந்தியாவில் கிரிக்கெட் பிரபலமாக 1983 உலகக் கோப்பை வெற்றி எப்படி முக்கியமான காரணமாக இருந்ததோ, அப்படி இந்திய கிரிக்கெட்டின் அடையாளத்தை மாற்றி எழுதியதில் 2007 டி20 உலகக் கோப்பைக்கு முக்கியமான பங்கிருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் நடந்த முதல் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி கையிலேந்தி 15 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது…

2007 உலகக் கோப்பை

டி20 உலகக் கோப்பை தொடரை, அதே ஆண்டில் நடந்த ஒருநாள் உலகக் கோப்பை சீரிஸில் இருந்துதான் தொடங்க வேண்டும். இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கிரேக் சேப்பல் – கேப்டன் கங்குலி இடையிலான பனிப்போர் 2005-ல் இருந்தே உச்சம் பெற்று வந்த சமயம். ஒரு கட்டத்தில் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்ட கங்குலி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியில் இருந்தும் கழற்றிவிடப்பட்டார். அவருக்குப் பதிலாக ராகுல் டிராவிட் கேப்டனானார். கிரேக் சேப்பல் எடுத்த பல முடிவுகள் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகின. இந்த சூழலில் வெஸ்ட் இண்டீஸில் நடந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி, வங்கதேசம், இலங்கை அணிகளிடம் தோற்று லீக் சுற்றோடு வெளியேறியது. இதையடுத்து கிரேக் சேப்பல் அந்தப் பதவியில் இருந்து விலகினார். உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்த டிராவிட் தலைமையிலான இந்திய அணி, அந்நாட்டு மண்ணில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரை வென்றது. ஆனால், ஒரு நாள் தொடரை 3-4 என்ற கணக்கில் இழந்தது.

Sachin - Dravid - Ganguly
Sachin – Dravid – Ganguly

இளரத்தம்

இப்படியான சூழலில் தென்னாப்பிரிக்காவில் முதல் டி20 உலகக் கோப்பை தொடருக்காக இந்திய அணி தயாரானது. அப்போது, இந்திய அணியின் முக்கியமான மூன்று தூண்களாக இருந்த சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் தொடரில் விளையாட வேண்டாம் என்று முடிவெடுத்தனர். 26 வயதே ஆன இளம் வீரர் எம்.எஸ்.தோனி தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது, அது கிரிக்கெட் உலகில் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியது. முக்கியமான 3 வீரர்களை டி20 உலகக் கோப்பை தொடருக்குத் தேர்வு செய்யாதது ஏன் என்ற கேள்வி எழுந்தது. ஆனால், டி20 உலகக் கோப்பையில் விளையாட வேண்டாம் என முடிவெடுத்த ராகுல் டிராவிட், இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் சச்சின், கங்குலியையும் இந்த முடிவை எடுக்க வைத்ததாகப் பின்னாட்களில் தெரியவந்தது. டிராவிட் எடுத்த அந்த முடிவு இந்திய கிரிக்கெட்டின் அடையாளத்தையே மாற்றும் என்பதை அப்போது அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

Underdogs டு Champions

சச்சின், கங்குலி, டிராவிட் இல்லாத நிலையில், சேவக், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் போன்ற சில சீனியர்களுடன் பெரும்பாலும் இளம் வீரர்களுடனும் ஜோஹன்னஸ்பர்க் சென்றது தோனி தலைமையிலான இந்திய அணி. அந்த அணியில் இருந்த வீரர்களின் சராசரி வயது 23 தான். அதேநேரம், அதன்பிறகு நடந்த டி20 உலகக் கோப்பை தொடர்களை வென்ற அணிகளுடைய வீரர்களின் சராசரி வயதை எடுத்துப் பார்த்தீர்கள் என்றால், அது 26-28-க்குள் இருக்கும். அப்படியான ஒரு இளம் படையை கிரிக்கெட் விமர்சகர்கள் Underdogs என்றே கணித்தனர். 2007 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாட வேண்டிய ஸ்காட்லாந்துக்கு எதிரான முதல் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது.

2007 T20 World Cup

முக்கியமான இரண்டாவது போட்டியில் இந்தியா, தங்களது பரம வைரியான பாகிஸ்தானை எதிர்க்கொண்டது. அந்தப் போட்டியில் பௌல் அவுட் முறையில் வெற்றிபெற்றது. அதன்பிறகு, சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெற்ற இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் இருந்த பிரிவில் இடம்பெற்றது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் 10 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியைத் தழுவியது. சூப்பர் 8 சுற்றின் இரண்டாவது போட்டியில் இந்தியா, இங்கிலாந்தை எதிர்க்கொண்டது. இந்திய கிரிக்கெட்டின் எவர்கிரீன் மேட்சாக வரலாற்றில் பதிவாகிப் போன அந்தப் போட்டியில்தான் யுவராஜ் சிங்கின் 6 சிக்ஸர்கள் மேஜிக் நிகழ்ந்தது. அந்தப் போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்திலும் அடுத்து நடந்த தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்திலும் வென்று இந்திய அணி, அரையிறுதிக்குத் தகுதிபெற்றது.

MS Dhoni
MS Dhoni

Mighty ஆஸ்திரேலிய அணியை இந்தியா அரையிறுதியில் எதிர்க்கொண்டது. போட்டிக்கு முன்பாகப் பேசிய வர்ணனையாளர் ரவிசாஸ்திரி, ஆஸ்திரேலியாதான் ஃபேவரைட்’ என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், அந்தப் போட்டியில் யுவராஜ் சிங்கின் 70 ரன்கள், ஸ்ரீசாந்தின் கடைசி நேர மிரட்டலோடு இந்தியா 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. பிரசண்டேஷனின்போது ரவி சாஸ்திரி குறிப்பிட்டிருந்ததைச் சுட்டிக்காட்டிய தோனி,Boys proved that you are Wrong’ என்று பதிலடி கொடுத்திருந்தார். இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதிய இந்தியா, முதலில் பேட் செய்து 157 ரன்கள் ஸ்கோர் செய்தது. இதை சேஸ் செய்த பாகிஸ்தான் ஒரு கட்டத்தில் 77-6 என்று திணறிக்கொண்டிருந்தது. இதனால், எளிதாக இந்தியா வெற்றி பெற்றுவிடும் என்று கருதப்பட்டது. ஆனால், ஆபத்பாந்தவனாக வந்த மிஸ்ஃபா உல் ஹக் ஒரு முனையில் மிரட்டவே, கடைசி ஓவர் வரை போட்டி சென்றது. கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற சூழலில் சீனியரான ஹர்பஜனுக்குப் பதிலாக ஜோஹீந்தர் ஷர்மாவிடம் பந்தைக் கொடுத்தார் தோனி. முதல் பந்து வைடாகவும் அடுத்த பதை டாட் பாலாவும் ஜோஹீந்தர் வீச, மூன்றாவது பந்தை சிக்ஸருக்கு அனுப்புவார் மிஸ்ஃபா. இதனால், 4 பந்துகளில் 6 ரன்கள் என்ற நிலைக்கு பாகிஸ்தான் அணி வரும். ஆனால், ஓவர் கான்பிடன்ஸோடு மிஸ்ஃபா ஸ்கூப் ஷாட் ஆட, அது ஸ்ரீசாந்திடம் தஞ்சம் புகும். அந்த நேரத்தில் அண்டர் டாக்ஸான இந்திய அணி சாம்பியனாகி கிரிக்கெட் உலகை அதிரவைத்தது. 1983-க்கு பிறகு முதல் முறையாக உலகக் கோப்பையை இந்தியா வென்ற அந்தத் தருணம் இந்தியாவில் கிரிக்கெட்டின் அடையாளத்தையே மாற்றிப்போட்டது.

ஐபிஎல்

2007 டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு இளம் வீரர்கள் தேவை என்கிற குரல் பிசிசிஐ-யில் வலுவாக ஒலிக்கத் தொடங்கியது. அதேபோல், உலக கிரிக்கெட்டில் இந்தியா பொருளாதாரரீதியாக ஒரு முன்மாதிரி என்கிற ஸ்டேட்டஸையும் பெற்றது. கால்பந்தைப் பின்பற்றி லீக் தொடராக பிசிசிஐ தொடங்கிய ஐபிஎல் தொடர், இந்தியாவில் இருக்கும் இளம் வீரர்களை மட்டுமல்ல, உலகின் பல நாடுகளுக்கு வீரர்கள் பலரை அடையாளம் காட்டியது என்றே சொல்லலாம். இன்றளவும் உலகின் பல நாடுகளில் கிரிக்கெட் லீக்குகள் நடந்தாலும், ஐபிஎல் தொடரில் விளையாடுவதே கிரிக்கெட் வீரர்கள் ஒவ்வொருவரின் கனவாக இருக்கிறது. இதற்கு விதை போட்டது 2007 டி20 உலகக் கோப்பை தொடர்தான் என்றே சொல்லலாம்.

Also Read – இந்திய மகளிர் அணியின் ’தோர்’ – ‘Incredible’ ஹர்மன்ப்ரீத் கவுர்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top