மகேந்திர சிங் தோனி

ஆஸ்திரேலியாவை அலறவிட்ட முதல் கேப்டன்… தோனி மரண மாஸ் கேப்டன்சி!

விசாகப்பட்டினத்தில் சவுரவ் கங்குலி தலைமையில் பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையே நடந்த போட்டி அது. இந்தியா சார்பில் சேவாக்கும், சச்சினும் களம் கண்டனர். எட்டு பந்துகளில் சச்சின் பெவிலியன் திரும்ப ஒருமுனையில் சேவாக் நிற்க, மறுமுனையில் வருகிறார் எம் எஸ் தோனி. சச்சின் அவுட் என்றதும் பெரும்பாலான டிவிக்கள் அனைக்கப்பட்டன. கொஞ்சநேரம் கழித்து இந்தியாவின் எல்லா கிராமங்களிலிருந்தும் ‘யாரோ புதுசா வந்தவன், வெளுக்குறான், பொளக்குறான்’ என சத்தங்கள்… சச்சின் அவுட் ஆனதும் ‘அவ்வளவுதான் முடிஞ்சது’னு அணைக்கப்பட்ட டிவிக்கள் தோனியின் அடிக்காக ஆன் செய்யப்பட்டன. தோனி அடித்த அடி இரும்புக்கை கொண்டவனின் டெர்மினேட்டர் அடியா இருந்தது. தோனி அணிக்குள் வந்தது, கேப்டன் ஆனது, உலகக்கோப்பைகளை ஜெயிச்சுக் கொடுத்தது, கூல் கேப்டன் என எல்லாக் கதைகளும் எல்லோருக்குமே தெரியும்ங்குறதால அதைப் பத்தியெல்லாம் சொல்லப்போறது இல்ல. தோனி எப்படி கேப்டன்களோட மாஸ்டர் ஆனார் அப்படிங்குறதைப் பத்தித்தான் சொல்லப்போறேன்.

ஐ.பி.எல்க்கு விதை போட்ட தோனி!

தோனி

ஆரம்பத்துல டி20 போட்டிகள் மேல பெரிய ஆர்வமோ, ஆதரவோ ரசிகர்கள்கிட்ட இல்லை. சச்சின், டிராவிட், கங்குலினு சீனியர்கள் ‘இதெல்லாம் கிரிக்கெட்டா’னு புறக்கணிச்ச காலம். அதனால தென்னாப்பிரிக்காவுல நடந்த முதல் டி20 உலகக்கோப்பைக்கான போட்டியில இருந்து எல்லோருமே விலக, சீனியர்களே இல்லாத புது அணிக்கு தோனி கேப்டனாக்கப்பட்டார். கேப்டனா தோனி விளையாடுன முதல் சீரிஸே டி-20 உலகக்கோப்பைதான். சீனியர்கள் இல்லாதது வசதியாகிட, தான் நினைச்ச மாதிரி டீமை செட் பண்ணி, உலகக்கோப்பையை ஜெயிச்சுட்டு வந்தார். அப்போது டி 20 கிரிக்கெட் விளையாட்டுதான், கிரிக்கெட்டின் புதிய அடையாளமா இருக்க போகுதுனு சொல்லி அப்போவே கணிச்சவர் தோனி. அதுக்குப் பின்னாலதான் இந்தியாவுல ஐ.பி.எல் அப்படிங்குற விதை ஆழமா நடப்பட்டது. அப்படி அந்த மேட்ச் ஜெயிக்காம போயிருந்தா, இன்னைக்கு ஐ.பி.எல் இவ்ளோ அசுர வளர்ச்சியில இருந்திருக்குமானு தெரியுலை.

ஆஸ்திரேலியாவை அலறவிட்ட முதல் கேப்டன்!

தோனி

கேப்டனாக பதவி ஏற்ற பின்னால சிரமங்களுக்கு இடையில தனக்கான அணியை கட்டமைச்சு, ஆஸ்திரேலியா, இலங்கை முத்தரப்பு தொடர்க்கு கூட்டிட்டு போனார். அதுக்கு கேப்டனா தோனி இருந்தார். இதுக்கு முன்னால இந்தியாவுல தன்னையும், தன் டீமையும் இழிவா நடத்துன பான்ட்டிங்குக்கு பாடம் எடுக்க நினைச்சார். அப்போ ஆஸ்திரேலியா அணி தோல்வினா அதை ஒரு அவமானமா நினைக்கும். அதுவும் அவங்க மண்ல தோற்கறதை வாழ்க்கையில உட்சபட்ச அவமானமா நினைப்பாங்க. எதிர்அணி ஜெயிக்கிறதை ‘அதிர்ஷ்டத்தால ஜெயிச்சுட்டாங்க’ அப்படித்தான் பான்டிங் பேசுவார். இந்த ஆட்டிட்யூடைத்தான் உடைக்க நினைச்சார் தோனி. இதுக்கு சரியான தருணமும் அந்த முத்தரப்பு தொடர்லயே அமைஞ்சது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டி ஆஸ்திரேலியாவின் கோட்டையான மெல்போர்ன்ல நடந்தது. ஶ்ரீசாந்த், இஷாந்த் ஷர்மா, இர்ஃபான் பதான் மூணு பார்ஸ்ட் பவுலர்களை வச்சு ஆஸ்திரேலியாவை 159 ரன்னுக்குள் சுருட்டி அவர்களின் கதையை முடித்தார் தோனி. அடுத்ததா பேட்டிங்ல ஜெயிக்கிறதுக்கு 10 ரன்கள் எடுக்கனும், களத்துல தோனி இருந்தார். க்ளவுஸ் வேணும்னு பெவிலியன்ல இருந்து கொண்டுவரச் சொன்னார். அப்படி சொல்றாருன்னா, ஏதோ தகவல் பெவிலியனுக்கு போக போகுதுனு அர்த்தம். நினைச்ச மாதிரியே செய்தியனுப்பினார். ‘இது எளிமையான வெற்றி, ஈஸியா ஜெயிக்கக் கூடிய அணியைத்தான் ஜெயித்திருக்கிறோம். நாம் வெற்றிபெறும்போது யாரும் கொண்டாட வேண்டாம், அமைதியாக கடந்து செல்லுங்கள்’. சொன்னதுபோலவே வெற்றிபெற்றவுடன் யாரும் கொண்டாடவில்லை. இதன் மூலம் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்குடனும், மொத்த டீமுடனும் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தினார். எப்போதுமே தோனிக்கு மனதோடு மோதி விளையாடுவது ரொம்பவே பிடித்த செயல். அதற்கு ஏற்றார்போல, தோனியின் செயல்களால் பான்ட்டிங் கடுப்பாகி, தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராகப் பல தவறான முடிவுகளையும் எடுத்தார்.

மின்னல் வேக ஸ்டெம்பிங்!

தோனி எல்லோரோட கவனத்தை ஈர்த்தது அதிரடி பேட்டிங் மூலமாத்தான். ஆனா விக்கெட் கீப்பரா இவருடைய வேகம் மின்னல் மாதிரி இருந்தது. பந்து தோனி கைக்கு போயிருக்கானு திரும்பிப்பார்த்துதான் ரன் எடுக்கவே ஓட ஆரம்பிச்ச பேட்ஸ்மேன்களே இங்க அதிகம். மைக்ரோ வினாடிகள் கால் ஏர்ல இருந்தாலும், ஸ்டெம்ப் கீழ விழுந்து கிடைக்கும். இன்னும் சொல்லப்போனா கழுகு பார்வையோட இருக்கிற தோனியின் கண்கள் தேர்ட் அம்பையர் தேவையில்ல அப்படிங்குற டோன்லதான் இருக்கும். இந்த உலகத்துலயே தோனி எடுத்த டி.ஆர்.எஸ் என்னைக்குமே தப்பா போனதும் இல்ல. ஒரு இரண்டு தடவை நண்பர்களுக்காக எடுத்திருக்கலாம். மற்றபடி டி.ஆர்.எஸ் கிங் தோனிதான். அதேபோல பந்தை தோனிக்கு எறியும்போது திரும்பி பார்க்காமல் ஸ்டெம்புக்கு பந்தை அனுப்பும் ஸ்டைல் ஆச்சர்யம்தான்.

தோனி

எதிரணியை குழப்பும் கேப்டன்சி!

தோனியின் ப்ளேயிங் லெவனை யாராலும் கணிச்சு சொல்லவே முடியாது. காயம் காரணமா இந்த வீரர் விளையாடமாட்டார்னு செய்திகள் வந்துக்கிட்டே இருக்கும். ஆனா அந்த ப்ளேயர் மேட்ச்சுக்கு முன்னாடி வலைப்பயிற்சியில இருப்பார். அப்போ எதிரணி கேப்டன் ‘ஓஹோ இருக்காரா’னு முடிவெடுத்து தன்னோட ப்ளேயிங் லெவனோட வரும்போது, ‘அந்த ப்ளேயர் எங்களோட ப்ளெயிங் லெவனில் இல்லை’னு அறிவிப்பார் தோனி. இதுமாதிரி பல விஷயங்களை அவர் கேப்டன்சியில கணிக்க முடியாது.

‘Instinctive Captain’

தோனியோட தலைமையில ஆடின வீரர்கள் அவரை ‘Instinctive Captain’ அப்படினு சொல்வாங்க. அது ஏன்னா பொதுவா கிரிக்கெட் ஆடுறதுக்கு முன்னாடி, அந்த மேட்ச்ல நல்ல பவுலர் யாரு, எதிரணியில எது வீக்னு டேட்டா எடுத்து பிரிப்பேர் ஆகி மேட்ச்சுக்கு வருவாங்க. ஆனா தோனி தலைமையில மேட்ச்சுக்கு போகும்போது அது சம்பர்தாயத்துக்கு மட்டுமே நடக்கும். மற்ற முக்கியமான முடிவுகளை க்ரவுண்டுக்கு போன பின்னாலதான் தோனி எடுப்பார். களத்துக்கு போய் முடிவெடுப்பதுதான் தோனி இதுவரைக்கும் ஃபாலோ பண்ணிட்டு வர்ற ‘சக்சஸ்’ பார்முலா.

டிசிஸன் மேக்கிங்!

டெஸ்ட், ஒரு நாள் போட்டினு எல்லா காலக்கட்டத்துலயும் விளையாட்டைப் போலவே அதிரடிதான். ஏன்னா தோனி என்னைக்குமே ரெக்கர்டுகளுக்காக விளையாடினது கிடையாது. ஆட்டத்துக்கு என்ன தேவையோ அதை மட்டுமே கொடுத்து அணியை ஜெயிக்க வைப்பதுதான் டிபிக்கல் தோனியின் ஸ்டைல். ப்ளேயிங் லெவன் மட்டும் அல்ல, அவரோட பர்சனல் முடிவுகளையும் யாராலும் கணிக்க முடியாது. திருமணம் முதல் ஓய்வு வரைக்கும் யாருமே எதிர்பார்க்காத நேரத்தில்தான் செய்தார். இன்ஸ்டாகிராமில் தன் ஓய்வை அறிவித்ததும் அவரோட டிபிக்கல் ஸ்டைல்தான். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், சத்தமே இல்லாமல் நிகழ்த்திவிடுவதுதான் தோனி.

Also Read – தமிழ் சினிமாவின் முதல் ராக்கி பாய்… சரத் குமார்-க்கு இப்போ என்னாச்சு?!

மாஸ் ஹீரோ!

தோனி எங்க அதிகமா கொண்டாடப்பட்டுக்கிட்டு இருக்கார்னு பார்த்தோம்னா, அதிகமா அவரோட பேட்டிங்லதான். நம்ம ஊர் மாஸ்ஹீரோக்களை கொண்டாட காரணம், நம்மால் முடியாததை அவர்கள் திரையில செய்றதாலதான். அதேபோலத்தான் தோனியும் களத்துல இருக்கிற வரைக்கும், சாதாரணமா நினைச்சுப் பார்க்க முடியாத சம்பவங்களை செஞ்சுட்டுத்தான் வருவார். ஆனால், கடைசி வரைக்கும் ப்ரெஷரை எகிற வைக்கிற சம்பவங்களை செய்றார்னு ஒரு குற்றச்சாட்டு இருக்கு. அப்படி குற்றச்சாட்டு வைக்கிறவங்களும் ஒத்துக்கிற விஷயம் இருக்கு. கடைசிவரைக்கும் போனாலும் தோனி பார்த்துக்குவார்ங்குற நம்பிக்கைதான் அது. அதனால்தான் கிரிக்கெட்டின் மாஸ்ஹீரோவாக தோனி கொண்டாடப்படுறார். தோனி பார்ம் அவுட்ல இருந்தாலும் எதிரணிக்கு ஒரு பயத்தை வரவச்சுக்கிட்டே இருந்தார்.

தோனி

நம்பிக்கை நாயகன்!

அதிக சிக்ஸர்களை அடிச்ச விக்கெட்கீப்பர், ஒருநாள் போட்டிகள்ல அதிக முறை ஆட்டமிழக்காமல் இருந்தவர்னு சாதனைகள் மலைக்க வைக்கும். இது எல்லாத்தையும்விட அவர் சம்பாதிச்சது அதிகம், அது மக்களின் நம்பிக்கை. இந்தியாவுக்காக ஆடின போதும், சிஎஸ்கேவுக்காக ஆடின போதும், இறுதிவரைக்கும் போராடுவதுதான் அவர் ஸ்டைல். அதுலயும் அந்த ஹெலிகாப்டர் ஷாட்லாம் சான்ஸே இல்லை. தோனியின் விக்கெட் விழும் வரைக்கும் இந்தியாவின் மேட்ச்சில் உயிர் இருந்து கொண்டேதான் இருக்கும். நீண்டகாலமாக அதை தக்கவைத்து அந்த நம்பிக்கையை கடத்திய நாயகன் தோனி.

சாதனை!

இந்த ஐ.பி.எல் விளையாட்டில் கிரிக்கெட் வாழ்க்கையோட கடைசிக் கட்டத்துல இருக்கிறார். இன்னும் கொஞ்ச நாளில் அவர் விளையாடாமல் ஐ.பி.எல் நடக்கலாம். அப்படி நடக்கும்ங்குற கசக்கிற உண்மையை ஏத்துக்க மனசுக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். டைம்மிஷின் கிடைச்சு எத்தனை வருஷங்கள் முன்னால போய் பார்த்தாலும் இனி தோனி மாதிரி கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை. ஆனால் புதிதாக சாதிக்க எதுவும் இல்லை என்ற நிலையில் எல்லாத்தையும் சாதிச்சுட்டுத்தான் போயிருக்கார், தோனி.

கேப்டன் தோனி ஒரு சரித்திரம்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top