`நாங்கள் கார்கள் அல்ல’ – பென் ஸ்டோக்ஸ் ஓய்வு எழுப்பியிருக்கும் கேள்விகள்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியோடு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஓய்வு பெற்றுவிட்டார். ஓய்வு பெறுவதற்கான காரணமாக அவர் சுட்டிக்காட்டியிருப்பது, கிரிக்கெட் உலகில் பல்வேறு விவாதங்களை எழுப்பியிருக்கிறது.

பென் ஸ்டோக்ஸ்

இங்கிலாந்து அணியின் முக்கியமான ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். சமீபத்தில், அந்த அணியின் டெஸ்ட் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டார். இயான் மோர்கன் சமயத்திலேயே வொயிட் பால் கிரிக்கெட்டுக்கு ஒரு கேப்டன், டெஸ்ட் போட்டிகளுக்கு ஒரு கேப்டன் என்கிற ஃபார்முலாவை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கடைபிடித்து வருகிறது. அவரும் ஓய்வு அறிவித்துவிட்ட நிலையில், அந்த அணியின் வொயிட் பால் டீம் கேப்டனாக ஜோஸ் பட்லர் இருந்து வருகிறார்.

Ben Stokes
Ben Stokes

நியூஸிலாந்து சீரிஸ், இந்திய அணிக்கெதிரான ஒரு டெஸ்ட், 2 டி20, 3 ஒருநாள் போட்டி சீரிஸ் முடிந்த கையோடு, இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்க அணியுடனான ஒருநாள் சீரிஸில் விளையாடத் தொடங்கியிருக்கிறது. துர்ஹாமில் நடைபெற்ற முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தப் போட்டிக்கு முன்னதாக, ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் திடீரென அறிவித்தது அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அதேபோல், அதற்கு அவர் காரணமாக சுட்டிக்காட்டியிருக்கும் விஷயமும் கிரிக்கெட் உலகில் விவாதங்களை எழுப்பியிருக்கிறது. டெஸ்ட் மேட்ச் ஸ்பெஷல் ஊடகத்திடம் பேசிய ஸ்டோக்ஸ், நாங்கள் கார்கள் அல்ல; எரிபொருளை நிரப்பி அனுப்பிய பிறகு, மீண்டும் எரிபொருள் நிரப்பத் தயாராக இருப்பதற்கு... டெஸ்ட் மேட்ச் சீரிஸ் விளையாடிக் கொண்டிருக்கும்போதே, ஒருநாள் போட்டி தொடரும் நடந்துகொண்டிருந்தது.. அது சிறுபிள்ளைத்தனமானது. மூன்று ஃபார்மேட்டுகளிலும் விளையாடுபவர்கள், அளவுக்கு அதிகமாக கிரிக்கெட் விளையாட வேண்டிய சூழல் ஏற்பட்டது’’ என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார். மேலும்,அடுத்த ஆறு மாதத்துக்கான திட்டங்களைப் பார்க்கும் போது, ஒரு கட்டத்தில் நின்று திரும்பிப் பார்த்தால், உங்களது செயல்பாடுகள் அவ்வளவு திருப்திகரமாக இருக்காது’ என்று வொர்க் லோட் பற்றி விமர்சிக்கும் வகையில் அவர் கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தார். அதேநேரம், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்றும் அவர் கூறியிருந்தார்.

ஒருவகையில் இங்கிலாந்து அணி வீரர்களின் வொர்க் லோட் பற்றி பென் ஸ்டோக்ஸ் கூறிய கருத்துகளுக்கு வலு சேர்க்கும் வகையில், நடப்பு ஜூலை மாதத்தில் மட்டுமே 17 நாட்கள் கிரிக்கெட் விளையாட வேண்டிய நிலையில் வீரர்கள் இருக்கிறார்கள். ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோரின் கரியர், இதுவரை நீடித்திருக்கக் காரணமே, அவர்கள் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடுவதுதான் என்றும் ஸ்டோக்ஸ் கூறியிருக்கிறார்.

Ben Stokes
Ben Stokes

ஓவர் வொர்க் லோட் கொடுப்பது வீரர்களுக்கு அழுத்தத்தை அதிகரிக்கும் என்கிறரீதியிலான விவாதங்கள் சமீபகாலமாகவே அழுத்தமாக எதிரொலிக்கத் தொடங்கியிருக்கின்றன. இந்தநிலையில், இதுகுறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி, “இதுபோன்ற நெருக்கடியான கிரிக்கெட் காலண்டர்களைத் திட்டமிடுவதைத் தவிர்க்க வேண்டும். இந்த விவகாரத்தில் கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இருநாடுகள் இடையிலான தொடர்கள், குறிப்பாக இப்படியான டி20 தொடர்களைத் தவிர்க்கலாம். பிரான்சைஸ் கிரிக்கெட்டுகளை நாம் ஊக்குவிக்க வேண்டிய இடத்தில் இருக்கிறோம். அது, இந்தியாவோ, வெஸ்ட் இண்டீஸோ, பாகிஸ்தானோ… அவற்றையெல்லாம் ஆதரிக்க வேண்டிய நிலை இருக்கிறது. இருநாடுகள் இடையிலான கிரிக்கெட் தொடர்கள் குறைவாக நடத்தப்படும்போது, ஐசிசி தொடர்களுக்காக நீங்கள் ஒன்றிணைவீர்கள். அப்போது, அதுமாதிரியான தொடர்களுக்கான மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்’’ என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார். அதேபோல், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாஸர் ஹூசைன், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தை விமர்சனம் செய்திருக்கிறார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top