ஆசிய நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடர் கடந்த 1984-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது… ஆசியக் கோப்பையின் முதல் தொடர் எப்போ நடந்தது… அதோட வரலாறு என்னங்குறதப் பத்திதான் இந்தக் கட்டுரைல நாம தெரிஞ்சுக்கப் போறோம்.
ஆசியக் கோப்பை

ஆசிய நாடுகளிடையே நல்லுறவை ஏற்படுத்தும் வண்ணம் கடந்த 1983-ல் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தொடங்கப்பட்டது. இதையடுத்து, ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் முதல்முறையாக 1984-ம் ஆண்டு நடத்தப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் வகையில், ஆசியக் கோப்பை தொடர் திட்டமிடப்பட்டது. முதல் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஷார்ஜாவில் நடத்தப்பட்டது. ரவுண்ட் ராபின் முறையில் நடத்தப்பட்ட அந்தத் தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிகள் பங்கேற்றன. ஆசியக் கோப்பையின் முதல் போட்டி பாகிஸ்தானுக்கும் அப்போது, ஐசிசியின் புதிய உறுப்பினரான இலங்கைக்கும் நடந்தது. அந்தத் தொடரின் இரண்டு போட்டிகளில் வென்ற இந்தியா சாம்பியன்ஸ் பட்டம் வென்றது. பாகிஸ்தான் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் வெளியேறியது. இலங்கை அணி, இரண்டாவது இடம் பிடித்தது.
இலங்கையில் நடைபெற்ற 1986-ம் ஆண்டு ஆசியக் கோப்பை தொடரை, அந்நாட்டுடனான மோசமான உறவு காரணமாக இந்தியா புறக்கணித்தது. முதல்முறையாக வங்கதேசம் பங்கேற்ற அந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றது. மூன்றாவது ஆசியக் கோப்பை தொடர் 1988-ல் வங்க தேசத்தில் நடந்தது. பல்வேறு நாடுகள் கலந்துகொண்ட அந்தத் தொடர்தான் வங்கதேசத்தில் நடைபெற்ற முதல் மல்டி நேஷனல் கிரிக்கெட் தொடர் ஆகும். அந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா, இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இந்தியாவில் ஆசியக் கோப்பை
1990-91 காலகட்டத்தில் முதல்முறையாக இந்தியாவில் ஆசியக் கோப்பை தொடர் நடந்தது. இந்தியாவுடனான மோசமான அரசியல் உறவு காரணமாக பாகிஸ்தான் பங்கேற்தாக அந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியனாக முடிசூடியது. தற்போதைய சூழலில், ஆசியக் கோப்பை தொடர் ஒருநாள் மற்றும் டி20 என இரண்டு ஃபார்மேட்டுகளில் நடத்தப்பட்டு வருகிறது. முதல்முறையாகக் கடந்த 2016-ல் டி20 ஃபார்மேட்டில் நடத்தப்பட்ட ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா வெற்றி வாகை சூடியது. மூன்று அணிகளோடு தொடங்கிய இந்தத் தொடரில் தற்போது 12 அணிகள் விளையாட ஆர்வம் காட்டியிருக்கின்றன. இதில், நேரடித் தகுதி தவிர தகுதிச் சுற்றின் மூலம் இந்த ஆண்டு ஹாங்காங் அணி பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் சாதனை
2016-ம் ஆண்டு முதல் டி20 மற்றும் ஒருநாள் என சுழற்சி முறையில் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த ஆசியக் கோப்பை தொடர்களில் 7 முறை (6 ஒருநாள் மற்றும் ஒரு டி20) சாம்பியனாகி இந்தியா சாதனை படைத்திருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக இலங்கை அணி, 5 முறை சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது. அதிக தொடர்களில் கலந்துகொண்ட அணி என்கிற வகையில், இலங்கை 14 தொடர்களிலும், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் 13 முறையும் ஆசியக் கோப்பை தொடர்களில் விளையாடி இருக்கின்றன.