ஐபிஎல் 2021 தொடரின் மீதமிருக்கும் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19-ல் தொடங்குகின்றன. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியோடு தோனி தலைமையிலான சி.எஸ்.கே விளையாடுகிறது.
இந்தியாவில் கடந்த மே மாதம் நடந்த ஐபிஎல் தொடரின்போது வீரர்கள், பயிற்சியாளர் குழு என பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, தொடரை ஒத்திவைப்பதாக அறிவித்த பிசிசிஐ, தொடரின் மீதமிருக்கும் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் என்று அறிவித்தது. ஐபிஎல் 2021 தொடரின் மீதமிருக்கும் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், கொரோனா சூழலைக் கருத்தில் கொண்டு பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருக்கின்றன. யு.ஏ.இ-யில் மைதானத்துக்குள் குறைந்த அளவு ரசிகர்களை அனுமதிக்கத் திட்டமிடப்பட்டிருக்கும் நிலையில், மைதானத்தை விட்டு வெளியேறி ரசிகர்கள் அமரும் கேலரிக்குச் செல்லும் பந்துகள் உடனடியாக ரீபிளேஸ் செய்யப்படும் என்ற புதிய விதியை பிசிசிஐ அறிமுகப்படுத்தியிருக்கிறது.
சி.எஸ்.கே
ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் சி.எஸ்.கே வீரர்கள் வரும் 13-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தரையிறங்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால், இதுவரை தரையிறங்குவதற்கான அனுமதி யு.ஏ.இ அரசு தரப்பில் இருந்து சி.எஸ்.கே அணி நிர்வாகத்துக்குக் கிடைக்கவில்லை. அதேநேரம், லேண்டிங் அப்ரூவல் 11-ம் தேதிக்குள் கிடைத்து விடும் என சி.எஸ்.கே தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். சி.எஸ்.கே வீரர்கள் பயணிக்க வேண்டிய விமானத்தின் பைலட் உள்ளிட்ட பணியாளர்கள் ஏற்கனவே குவாரண்டீனில் இருந்து வருகிறார்கள்.
இதுகுறித்து காசி விஸ்வநாதன் மேலும் கூறுகையில், “யு.ஏ.இ அரசிடமிருந்து லேண்டிங் அப்ரூவலுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம். இந்த விவகாரம் தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகளிடம் பிசிசிஐ தரப்பிலும் பேசி வருகிறார்கள். அதனால், உரிய அனுமதி நாளைக்குள் கிடைத்து விடும் என்று நம்புகிறோம். அதேபோல், கேப்டன் தோனி, உத்தப்பா உள்ளிட்ட வீரர்கள் சென்னை வந்தடைந்திருக்கும் நிலையில் அவர்களும் குவாரண்டீனில் இருந்துவருகிறார்கள்.
ஐபிஎல் முந்தைய லெக்கில் வீரர்களின் காண்டாக்ட் டிரேஸிங்குக்காக புளூடூத் டிரேஸிங் பேண்ட் பயன்படுத்தப்பட்டது. ஆனால், அந்த பேண்டுகள் சரியான முறையில் பலனளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், இந்த முறை ஒவ்வொரு அணியுடனும் இண்டக்ரிட்டி ஆபிஸர்ஸ் (Integrity Officers) எனப்படும் அலுவலர்கள் நான்கு பேர் இணைந்து பயணிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாசிட்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை ஒருவேளை அதிகரித்தால், அதற்கேற்ப அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இவர்கள் முடிவு செய்வார்கள் என்று தெரிகிறது. ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து 46 பக்க அறிவுறுத்தல்களை பிசிசிஐ சமீபத்தில் அனுப்பியிருந்தது.