மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.
-
1 தோனியின் நான்காவது டக்!
ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் கேப்டன் மகேந்திரசிங் தோனி ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழப்பது இது நான்காவது முறையாகும். 108 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு அவர் டக் அவுட்டாகியிருக்கிறார். 2015 ஐபிஎல் சீசனில் தோனி ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்திருந்தார். டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 145 இன்னிங்ஸ்களில் டக் அவுட்டாகாத சாதனையை கிறிஸ் கெய்ல், தன்வசம் வைத்திருக்கிறார்.
-
2 தவானின் சாதனை!
தவான் 54 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 10 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களும் இதில் அடங்கும். இதன்மூலம் ஐபிஎல் போட்டிகளில் தவானின் பவுண்டரி கவுண்ட் 601 ஆக இருக்கிறது. இதன்மூலம் ஐபிஎல் போட்டிகளில் 600 பவுண்டரிகள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை தவான் பெற்றார்.
-
3 ரெய்னாவின் முதல் அரைசதம்
டெல்லிக்கு எதிராக ரெய்னா அடித்த அரைசதம்தான் ஐபிஎல் 2021-ன் முதல் அரைசதம். அதேபோல், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற ஐபிஎல் 2020 சீசனை முழுமையாக மிஸ் செய்த ரெய்னா, தனது ஸ்டைலில் கம்பேக் கொடுத்தார். 36 பந்துகளில் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்பட ரெய்னா 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஐபிஎல்லில் சுரேஷ் ரெய்னாவுக்கு இது 39வது அரைசதமாகும். இதன்மூலம் அதிக அரைசதமடித்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்திருக்கிறார் ரெய்னா.
-
4 முதல் விக்கெட் பாட்னர்ஷிப்
சி.எஸ்.கேவுக்கு எதிராக பிரித்வி ஷா - தவான் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 138 ரன்கள் சேர்த்தது. ஐபிஎல் வரலாற்றில் சி.எஸ்.கேவுக்கு எதிராக எந்தவொரு விக்கெட்டுக்கும் எடுக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச பாட்னர்ஷிப் இதுவாகும். அதேபோல், டெல்லி அணியின் மூன்றாவது அதிகபட்ச ஓபனிங் பாட்னர்ஷிப் இதுதான்.
-
5 மூன்றாவது வெற்றி
2020 ஐபிஎல் சீசனில் சி.எஸ்.கேவை இரண்டு லீக் போட்டிகளிலும் வீழ்த்தியிருந்த டெல்லி, தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது.
-
6 சி.எஸ்.கே சோகம்
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் போட்டியில் சி.எஸ்.கே தோல்வியடைந்திருக்கிறது. இதற்கு முன்பாக 2013 ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான முதல் போட்டியில் சி.எஸ்.கே தோல்வியடைந்திருந்தது.
-
7 முதல் வெற்றி
டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விளையாடாத நிலையில், முதல்முறையாக ரிஷப் பண்ட் தலைமையில் அந்த அணி களம்கண்டது. கேப்டனாக முதல் போட்டியிலேயே தனது குருவாகக் கருதும் தோனிக்கு எதிராக வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார் ரிஷப் பண்ட்.
Photo Credits: IPL (BCCI)
0 Comments