மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த சென்னை – மும்பை அணிகள் இடையிலான போட்டியில் 1.4 ஓவர்கள் பவர் கட் பிரச்னையால் டி.ஆர்.எஸ் இல்லாதது சர்ச்சையாகியிருக்கிறது… என்ன நடந்தது?
CSKvsMI
ஃபிளேஆஃப் ரேஸில் நீடிக்க இந்த மேட்சில் நல்ல ரன் ரேட்டுடன் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்கிற சூழலில் சி.எஸ்.கே, நேற்றைய போட்டியில் களம்கண்டது. முதலில் பேட் செய்த அந்த அணி முதல் ஓவரிலேயே டேவன் கான்வே விக்கெட்டை இழந்தது. டேனியல் சாம்ஸ் வீசிய பந்து கான்வேயின் பேடில் படவே, மும்பை வீரர்கள் நம்பிக்கையோடு விக்கெட்டுக்காக அப்பீல் செய்தனர். களநடுவர் அவுட் கொடுத்த நிலையில், அது ஸ்டம்புகளைத் தாக்காமல் வெளியே சென்றிருக்கலாம் என்று வர்ணனையாளர்களே விவரித்துக் கொண்டிருந்த நிலையில், எதிர்முனையில் நின்றிருந்த கெய்க்வாட், அம்பயரின் அந்த முடிவை எதிர்த்து டி.ஆர்.எஸ் கேட்கும்படி கான்வேவுக்கு அறிவுறுத்தினார். அவரும் டி.ஆர்.எஸ் செய்ய விரும்பினார். அப்போதுதான் தெரிந்தது பவர் கட் பிரச்னையாள் டி.ஆர்.எஸ் செய்ய முடியாத நிலை இருப்பது. அதை நடுவர்கள் டேவன் கான்வேவிடம் தெரிவிக்கவே, வேறுவழியின்றி அவர் டக் அவுட்டுக்குத் திரும்ப நேரிட்டது.
இதுமட்டுமல்ல, பும்ரா வீசிய இரண்டாவது ஓவரில் உத்தப்பாவுக்கு அம்பயர் அவுட் கொடுக்க, அவரும் அந்த முடிவை எதிர்த்து டி.ஆர்.எஸ் முறையைப் பயன்படுத்த விரும்பினார். அப்போதும், பிரச்னை சரியாகாததால் உத்தப்பாவும் டி.ஆர்.எஸ் செய்ய முடியாமல் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் லீக் என்று சொல்லிக்கொள்ளும் ஐபிஎல் நிர்வாகம், வான்கடே போன்ற இந்தியாவின் முக்கியமான மைதானத்தில் உரிய வசதிகள் செய்யவில்லையா.. இது நம்பும்படியாகவா இருக்கிறது போன்ற விமர்சனங்கள் எழுந்தது.
என்ன நடந்தது?
டி.ஆர்.எஸ் செயல்படாமல் போனதற்கு ஷார்ட் ஷர்க்யூட் பிரச்னைதான் காரணம் என்று சொல்லப்பட்டாலும், இதற்கு மும்பை கிரிக்கெட் சங்கத்தின் தரப்பிலோ அல்லது ஐபிஎல்லை நடத்தும் பிசிசிஐ தரப்பில் இருந்தோ அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் கொடுக்கப்படவில்லை. இரண்டு தரப்பும் மாறிமாறி குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்கள். இதுகுறித்து ஊடகம் ஒன்றிடம் பேசிய பிசிசிஐ நிர்வாகி ஒருவர், ‘’டி.ஆர்.எஸ் சிஸ்டத்தோடு நேரடியாக கனெக்ட் செய்யப்பட்டிருந்த மின் இணைப்பில் ஏற்பட்ட ஷார்ட் ஷர்க்யூட் பிரச்னைதான் இதற்கு அடிப்படையான காரணம். இதனால், அந்த நேரத்தில் டி.ஆர்.எஸ் செய்ய முடியாமல் போனது. 10 பந்துகள் வீசப்பட்ட நிலையில், அந்த பிரச்னை சரிசெய்யப்பட்டது’’ என்று கூறியிருக்கிறார். லைட் பிரச்னையால் டாஸ் போடுவதும் தாமதமானது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், சி.எஸ்.கே அணியின் ஃபிளேஆஃப் சுற்று வாய்ப்பு முடிவுக்கு வந்தது.
இந்த சம்பவம் குறித்து வர்ணனையாளர் ஷர்ஷா போக்ளே ட்விட்டரில் விளக்கம் கொடுத்திருந்தார்.