மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை, ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பஞ்சாப் கிங்ஸ் நிர்ணயித்த 196 ரன்கள் டார்கெட்டை 18.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எளிதாக எட்டிப்பிடித்தது டெல்லி கேப்பிடல்ஸ்.
#DCvsPBKS 5 பாயிண்ட் மேட்ச் ரிப்போர்ட்
-
1 அகர்வால் - ராகுல் செஞ்சுரி பாட்னர்ஷிப்
முதல் விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்து பஞ்சாப் அணிக்கு அசத்தல் தொடக்கம் கொடுத்தது மயங்க் அகர்வால் - கே.எல்.ராகுல் ஜோடி. முதல் ஓவரில் 5 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட, டெல்லியின் அறிமுக வீரர் லுக்மன் மேரிவாலா வீசிய இரண்டாவது ஓவரில் 20 ரன்கள் எடுத்து டாப் கியருக்கு மாறியது இந்த ஜோடி. 31 பந்துகளில் 50 ரன்களை எட்டிய பஞ்சாப், 10.2 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்தது. 25 பந்துகளில் அரைசதமடித்த மயங்க் அகர்வால், 36 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் எடுத்து 13வது ஓவரில் ஆட்டமிழந்தார்.
-
2 ராகுலுக்குக் கிடைத்த பர்த்டே கிஃப்ட்
தனது 29வது பிறந்தநாளைக் கொண்டாடிய கே.எல்.ராகுல், இந்தப் போட்டியில் 51 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிறந்தநாளில் ராகுல் கொடுத்த 3 கேட்சுகளை நழுவவிட்டது டெல்லி அணி. இரண்டாவது ஓவரில் ரன் எதுவும் எடுக்காமல் இருந்தபோது ஸ்மித்தும், 42, 50 ரன்கள் என்ற ஸ்கோரில் இருந்தபோது இரண்டு கேட்சுகளையும் டெல்லி வீரர்கள் நழுவவிட்டனர். இறுதியாக 16வது ஓவரில் ரபாடா பந்துவீச்சில் ராகுல் ஆட்டமிழந்தார்.
-
3 ஹூடா - ஷாருக் அதிரடி
மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல் ஆட்டமிழந்தபின்னர் களமிறங்கிய கிறிஸ் கெய்லே, நிகோலஸ் பூரன் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறவே ஹூடா - தமிழக வீரர் ஷாருக்கான் கைகோர்த்தனர். ஹூடா 13 பந்துகளில் 22 ரன்களும், ஷாருக்கான் 5 பந்துகளில் 15 ரன்களும் விளாச, பஞ்சாப் அணியின் ஸ்கோர் 200-ஐ நெருங்கியது. கிறிஸ் வோக்ஸ் வீசிய கடைசி ஓவரில் மட்டும் ஷாருக்கான் இரண்டு பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடித்தார்.
-
4 தவான் - பிரித்வி ஷா
196 ரன்கள் இலக்கோடு களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸுக்கு தவான் - பிரித்வி ஷா ஜோடி வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. நான்கு பவுலர்கள் வீசிய முதல் நான்கு ஓவர்களில் சராசரியாக பத்து ரன்களுக்கு மேல் குவித்த இந்த ஜோடி, 29 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தது. 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் எடுத்திருந்தது டெல்லி. ஆறாவது ஓவரின் மூன்றாவது பந்தில் பிரித்வி ஷா ஆட்டமிழந்தார். அவர் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 17 பந்துகளில் 32 ரன்களுடன் வெளியேறினார்.
-
5 தவான் சரவெடி
மூன்றாவது மேட்சில் விளையாடும் தவானுக்கு இரண்டாவது முறையாக செஞ்சுரி அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இந்தமுறையும் அது நழுவிப் போனது. பிரித்வி ஷா 32 ரன்களுடனும் அடுத்துவந்த ஸ்டீவன் ஸ்மித், 9 ரன்களிலும் வெளியேறினாலும் மறுமுனையில் ஆங்கரிங் இன்னிங்ஸ் ஆடிக்கொண்டிருந்தார் தவான். 31 பந்துகளில் அரைசதம் கடந்த தவான், பவர் ஷாட்டுகளால் மிரட்டிக்கொண்டிருந்தார்.
மெரிடித் வீசிய 14வது ஓவர் டெல்லிக்குத் திருப்புமுனையாக அமைந்தது. அந்த ஓவரின் முதல் 3 பந்துகளையும் பவுண்டரிக்கு தவான் விரட்டவே, அடுத்த பந்தில் வொய்ட் ஃபோராக 5 ரன்கள் கிடைத்தது. தவான் 90 ரன்களைக் கடந்த நிலையில், டெல்லியின் வெற்றிக்குக் கடைசி 6 ஓவர்களில் 53 ரன்கள் தேவை என்று சூழல் மாறியது. 8 விக்கெட்டுகள் கைவசம் இருந்தது. தவான் 15வது ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 49 பந்துகளில் 13 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 92 ரன்கள் எடுத்தார். அடுத்துவந்த கேப்டன் ரிஷப் பண்ட், 15 ரன்களில் வெளியேற ஸ்டாய்னிக்ஸ், லலித் யாதவ் ஜோடி டெல்லியின் வெற்றியை உறுதிப்படுத்தியது. ஸ்டாய்னிக்ஸ் 13 பந்துகளில் 27 ரன்களும் லலித் யாதவ் 6 பந்துகளில் 12 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
0 Comments