ரவிச்சந்திரன் அஸ்வின்

ரவிச்சந்திரன் அஸ்வின்: `எனக்கா ரெட் கார்டு… எடுத்துப் பாரு ரெக்கார்டு’ – சர்ச்சையான கோலியின் முடிவு!

டெஸ்ட் போட்டிகளில் 413 விக்கெட்டுகளுடன் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இரண்டாம் நிலையில் இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படாதது சர்ச்சையாகியிருக்கிறது.

இங்கிலாந்து தொடர்

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் இருக்கிறது. தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி லண்டன் கியா ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று இங்கிலாந்து பௌலிங் தேர்வு செய்தது. முதல்நாளில், விராட் கோலி, ஷ்ரதுல் தாக்குரின் சாதனை அரைசதங்கள் நிகழவே 191 ரன்களில் இந்தியா ஆட்டமிழந்தது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து முதல்நாள் ஆட்டநேர முடிவில் 53 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருக்கிறது.

விராட் கோலி - ஜோ ரூட்
விராட் கோலி – ஜோ ரூட்

ரவிச்சந்திரன் அஸ்வின்

இந்தியாவின் முக்கியமான சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இந்தப் போட்டியிலும் வாய்ப்பளிக்கப்படவில்லை. ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நான்காவது போட்டி வரையிலும் முக்கியமான ஸ்பின்னரை பிளேயிங் லெவனில் ஆட வாய்ப்பளிக்காத இந்திய கேப்டன் விராட் கோலி, தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரின் முடிவு விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.

அஸ்வின் - விராட் கோலி
அஸ்வின் – விராட் கோலி

ஆறு மாதங்களுக்கு முன்னர் சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தியதில் முக்கியப் பங்கு வகித்தவர் அஸ்வின். அந்தத் தொடரில் மொத்தமாக 32 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனையும் படைத்தார். நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 30 அல்லது அதற்கு மேல் விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் அந்தத் தொடரில் அவர் படைத்தார். வேகமாக 400 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியர் என்ற மைல்கல்லையும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவர் எட்டினார். பிஷன்சிங் பேடி, ஹர்பஜன் சிங், பி.எஸ்.சந்திரசேகர், கபில் தேவ் ஆகியோர் இருநாடுகள் இடையிலான டெஸ்ட் தொடர்களில் ஒரே ஒருமுறை மட்டுமே 30 அல்லது 30-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்கள்.

அஸ்வின் தேர்வு செய்யப்படாதது ஏன்?

இந்திய அணியின் பேட்டிங் டெப்த் போதுமான அளவு இருப்பதால் அவர் தேர்வு செய்யப்படவில்லையா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. பந்துவீச்சில் மட்டுமல்ல பேட்டிங்கிலும் அஸ்வின் சாதகமான ரெக்கார்டுகளைத் தன்வசம் வைத்திருக்கிறார். யோசித்துப் பாருங்கள், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிரான சதம் உள்பட டெஸ்ட் போட்டிகளில் அவர் இதுவரை 5 சதங்களைப் பதிவு செய்திருக்கிறார். இப்போதைய இங்கிலாந்து அணியில் ஜோ ரூட், ஜானி பேரிஸ்டோவ் ஆகிய இருவர் மட்டுமே அஸ்வினை விட அதிக சதங்கள் அடித்தவர்கள்.

ரவிச்சந்திரன் அஸ்வின்
ரவிச்சந்திரன் அஸ்வின்

இங்கிலாந்து ஆடுகளங்களை விட இந்தியத் துணைக்கண்ட பிட்சுகளே ஸ்பின்னர்களுக்குக் கைகொடுக்கும் என்ற வாதம் உண்மைதான். இருப்பினும், சௌதாம்ப்டனில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அஸ்வின் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். அதேபோல், இங்கிலாந்தில் இருக்கும் ஆடுகளங்களிலேயே ஸ்பின்னர்களுக்கு சொர்க்கபுரியாகக் கருதப்படுவது இந்தியா – இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் நடந்துவரும் லண்டன் ஓவல் மைதானம்தான். இதுதவிர, கடந்த ஒரு மாதத்துக்கு முன்பாக கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் சர்ரே அணிக்காக சோமர்செட் அணிக்கெதிரான போட்டியில் 6-27 என்ற பந்துவீச்சை அஸ்வின் இதே மைதானத்தில் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஓவல் மைதானத்தில் ஸ்பின்னர்கள் சாதித்த முந்தைய வரலாறுகளும் நிறையவே இருக்கின்றன. 1998-ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இலங்கையின் முத்தையா முரளிதரன் 9-65 என்ற பந்துவீச்சைப் பதிவு செய்தார். அதேபோல் 1997-ல் ஆஸ்திரேலியாவை 104 ரன்களில் ஆல் அவுட்டாக்கி இங்கிலாந்துக்கு வெற்றி தேடித்தந்ததில் சுழற்பந்துவீச்சாளர் டஃப்னலின் பங்கு மறக்க முடியாதது.

என்ன நடக்கிறது?

இந்தியாவின் லீடிங் ஸ்பின்னரை பிளேயிங் லெவனிலேயே சேர்க்காமல் இருப்பது வேறுவிதமான கேள்விகளையும் எழச் செய்திருக்கிறது என்றே சொல்லலாம். அஸ்வின் – கோலி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதா என்றும் ஒரு சில விமர்சகர்கள் கேள்வியை முன்வைத்திருக்கிறார்கள். வழக்கமாக, வலது கை பேட்ஸ்மேன்களுக்கு ஆப் ஸ்டம்புக்கு வெளியே போவது போல் ஆஃப் ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஸ்வினால் பந்துவீச முடியாது என்ற ஒரு கருத்து முன்வைக்கப்படுவதுண்டு. ஆனால், இந்தப் போட்டியில் அஸ்வின் சேர்க்கப்படாதது குறித்த கேள்விக்கு விராட் கோலி சொன்ன பதில் நகை முரண் என்றே சொல்லலாம்.

அஸ்வின் - ஜடேஜா
அஸ்வின் – ஜடேஜா

`இங்கிலாந்து அணியில் நான்கு இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். வேகப்பந்து வீச்சாளர்கள் ஓவர் தி விக்கெட் பந்துவீசும்போது, ஜடேஜாவுக்கு இது நல்ல வாய்ப்பாக இருக்கும். நம்பர் 7 பேட்ஸ்மேனாகவும் அவர் கைகொடுப்பார். எங்களைப் பொறுத்தவரை பாட்னர்ஷிப்தான் முக்கியம். குறிப்பிட்ட தனிநபர்கள் பற்றி நாங்கள் சிந்திப்பதில்லை’ என்று விராட் கோலி குறிப்பிட்டிருந்தார். முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு, உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்குருக்கு இந்திய அணியில் வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.

விமர்சனம்

ரவிச்சந்திரன் அஸ்வின்
ரவிச்சந்திரன் அஸ்வின்

நான்காவது டெஸ்டின் பிளேயிங் லெவனில் அஸ்வின் இடம்பெறாதது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், கிரிக்கெட் விமர்சகர்களும் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். இதுகுறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், நான் அதிர்ந்துவிட்டேன். இங்கிலாந்தில் இதுவரை நடந்திருக்கும் நான்கு டெஸ்ட்களில் முக்கியமான வீரர் ஒருவரை பிளேயிங் லெவனில் சேர்க்கப்படாதது முதல்முறையாக நடந்திருக்கிறது என்று சொல்லலாம். டெஸ்ட் போட்டிகளில் 413 விக்கெட்டுகள் மற்றும் 5 அரைசதங்களை அவர் அடித்திருக்கிறார். இது முட்டாள்தனமானது’என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார். அவரது ட்விட்டர் பதிவில் பதிலளித்திருக்கும் ஆஸ்திரேலிய முன்னாள் பேட்ஸ்மேன் மார்க் வாக்,இந்திய அணியினர் என்னவிதமாக சிந்திக்கிறார்கள் என்று வியப்புதான் ஏற்படுகிறது’ என்று கூறியிருக்கிறார்.

இங்கிலாந்தின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளரான பில் டஃப்னல், `என்னால் நம்பவே முடியவில்லை. தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் ஒரு பந்துவீச்சாளரைத் தேர்வு செய்யாமல் பெஞ்சில் எப்படி நீங்கள் அமரவைக்கலாம்? எந்தவிதமான ஆடுகளமாக இருந்தாலும் நிச்சயம் எந்தவொரு அணியின் பிளேயிங் லெவனிலும் இடம்பெறக் கூடிய வீரர் அவர்’ என்று அதிர்ச்சி தெரிவித்திருக்கிறார். ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளருமான டாம் மூடி, “இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அஸ்வின் இடம்பெறாதது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இரண்டு ஸ்பின்னர்களுடன் பிளேயிங் லெவனைத் தேர்வு செய்ய நல்ல வாய்ப்பு இருந்தது. இந்த விஷயத்தில் ஜோ ரூட் மீண்டும் ஒருமுறை சிறப்பாக பௌலிங் யூனிட்டைக் கட்டமைத்திருக்கிறார்’’ என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

அஸ்வினை பிளேயிங் லெவனில் சேர்க்காத விராட் கோலி அண்ட் கோவின் இந்த முடிவை எப்படிப் பார்க்கிறீர்கள்… கமெண்டில் சொல்லுங்கள் மக்களே!

Also Read – விராட் கோலி – ரோஹித் ஷர்மா இடையே பிரச்னையா… முதல்முறையாக மனம்திறந்த ரவிசாஸ்திரி!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top