ஹனுமா விஹாரி

Hanuma Vihari: ஹனுமா விஹாரி எங்கப்பா… விவாதமான பிசிசிஐ முடிவு! #IndVsNZ

நியூசிலாந்து அணிக்கெதிரான 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. 16 பேர் கொண்ட அணியில் `சிட்னி டெஸ்ட் ஹீரோ’ ஹனுமா விஹாரி இடம்பெறாதது விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.

நியூசிலாந்து தொடர்

உலகக் கோப்பை டி20 தொடருக்குப் பின்னர் இந்தியா வரும் நியூசிலாந்து அணி 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டி ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் வரும் 17-ம் தேதி தொடங்குகிறது. டி20 தொடருக்கான ரோஹித் ஷர்மா தலைமையிலான அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தநிலையில், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்தது. டி20 தொடருக்கான அணியில் இடம்பெறாத விராட் கோலி, முதல் டெஸ்டிலும் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. நவம்பர் 25-29 தேதிகளில் கான்பூரில் நடக்கும் முதல் டெஸ்டில் ரஹானே கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம், மும்பையில் டிசம்பர் 03-07 தேதிகளில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி களமிறங்குவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஹனுமா விஹாரி

ஹனுமா விஹாரி
ஹனுமா விஹாரி

பிசிசிஐ அறிவித்திருக்கும் 16 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலில் ஹனுமா விஹாரி இடம்பெறாதது விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க தொடர் வெற்றியைப் பதிவு செய்தது. இதில், சிட்னி டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வினோடு இணைந்து மேட்ச் சேவிங் இன்னிங்ஸ் ஆடி ஹனுமா விஹாரி டிரா செய்ய உதவினார். அந்தப் போட்டியில் காயமடைந்து கடைசி டெஸ்டில் விளையாடாமல் இந்தியா திரும்பினார். அதன்பின்னர், காயத்திலிருந்து மீண்ட அவர் இங்கிலாந்து கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் ஆடினார். இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணியில் இடம்பெற்றிருந்தும், ஒரு போட்டியில் கூட அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதுவரை 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் விஹாரி, இந்திய மண்ணில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார். 21 இன்னிங்ஸ்களில் ஒரு சதம், 4 அரைசதங்கள் உள்பட 624 ரன்கள் குவித்திருக்கும் அவரின் பேட்டிங் ஆவரேஜ் 33. சொந்த மண்ணில் அஷ்வின், ஜடேஜா என இரட்டை சுழற்பந்துவீச்சாளர்கள் காம்பினேஷன் காரணமாக அவருக்கு இதுவரை விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம்

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய ஏ அணியோடு அவர் பயணிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்துக்காக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட அணியில் அவர் இடம்பெறவில்லை. அதேநேரம், கடைசி நேரத்தில் அவரது பெயர் சேர்க்கப்பட்டிருக்கிறது. நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் அவர் தேர்வு செய்யப்படாதது குறித்து விமர்சனம் எழுந்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்திய அணியில் சேர்க்காமல், இந்திய ஏ அணியில் இடம் கொடுக்கப்பட்டதற்காகவும் பிசிசிஐயின் முடிவை ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணியில், ஜெயந்த் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. வாஷிங்டன் சுந்தர் காயமடைந்திருப்பதால் ஜெயந்த் யாதவ் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. ஆனால், மிடில் ஆர்டரில் பலம்வாய்ந்த விஹாரி தேர்வு செய்யப்படாமல் இருப்பது குறித்து விவாதம் எழுந்திருக்கிறது.

இதுகுறித்து வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே, “நான் எதையாவது மிஸ் செய்கிறேனா.. நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் ஹனுமா விஹாரி இடம்பெறாததற்கு சரியான காரணம் தெரியவில்லை. காயமடைந்திருக்கிறாரா? கிரிக்கெட் மைதானத்தில் அவர் காயமடைந்திருப்பதாகத் தெரியவில்லை. எந்தவொரு உள்ளூர் கிரிக்கெட் தொடரும் இல்லை. நிச்சயம் இது நியாயம் கிடையாது. இதற்கு முன்னர் அவர் விளையாடிய இன்னிங்ஸ், சிட்னியில் இந்திய அணியை மீட்ட இன்னிங்ஸ்’’ என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

Also Read – SMAT: டி20 கிரிக்கெட்டில் முதல்முறை… 4 ஓவர்களில் ஒரு ரன் கூட விட்டுக் கொடுக்காத அக்‌ஷய்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top