ஆஸ்திரேலிய ஸ்பின் லெஜண்ட் ஷேன் வார்னே, திடீர் ஹார்ட் அட்டாக்கில் உயிரிழந்திருக்கிறார். லெக் ஸ்பின் எனும் மடிந்துகொண்டிருந்த கலையைத் தனது தனித்திறமையால் வளர்த்தெடுத்த பெருமைக்குரிய வார்னேவின் மறைவு கிரிக்கெட் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
வார்னே புகழ்பெற்ற ஸ்பின்னரான பின்னர், அவர் செய்த சாதனைகள், அவரது கரியரின் ஏற்ற, இறக்கங்கள் எல்லாமே நாமறிந்ததுதான்.. ஆனால், அவர் கரியரின் ஆரம்ப காலகட்டம் எப்படி இருந்தது… 40 வயதுக்குப் பிறகு கிரிக்கெட் விளையாடத் தொடங்கி மகனோடு ஒரே கிளப்புக்காக விளையாடிய வார்னேவின் தந்தை ஜேசன் பத்தி தெரியுமா… அவரை ஆளாக்குனதுல முன்னாள் 70ஸ் ஸ்பின்னரும் முன்னாள் சிறைக்கைதியுமான டெர்ரி ஜென்னரோட பங்கு என்னனு தெரியுமா.. ஆஸ்திரேலிய அணிக்குள் வந்த கதை… கொழும்பு டெஸ்டில் கேப்டன் பார்டரின் நம்பிக்கையைக் காப்பாத்துன தருணம்… இப்படி, வார்னே எப்படி ஒரு லெஜண்டா உருவெடுத்தார்ங்கிறதப் பத்திதான் நாம இந்த வீடியோல தெரிஞ்சுக்கப் போறோம்…
ஷேன் வார்னே
ஷேன் வார்னேனு சொன்னவுடனே நமக்கு என்ன நினைவுக்கு வரும்… மெதுவா நடக்க ஆரம்பிச்சு, அந்த கடைசி மூணு ஸ்டெப்ஸை மட்டும் ஓடிவந்து பந்துவீசுற அவரோட ஐகானிக் பௌலிங் ஸ்டைல்தான் 3 தலைமுறை ஸ்பின்னர்களுக்கு இன்ஸ்பிரேஷன்… லெக் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆகுற பால், அப்படியே தலைகீழா தன்னோட திசையை மாற்றி பேட்ஸ்மேனை அப்படியே நிலைகுலைய வைச்சுடும்.. அப்படியான வார்னே, தனது ஆரம்பகாலகட்டங்கள்ல லெக் ஸ்பின் போடச்சொல்றப்ப அவர் போடுற பந்து எல்லாமே பிட்ச்க்கு வெளியிலதான் பிட்சே ஆகுமாம். ஆரம்ப நாட்கள்ல வார்னேவுக்கு பேட்டிங் மேலதான் அவ்ளோ பிரியம். வார்னேவோட அப்பா ஜேசன் பயங்கரமான கிரிக்கெட் வெறியர். ஆனால், 40 வயசுக்கு மேல கிரிக்கெட் ஆட ஆரம்பிச்ச அவர், தன்னோட டீனேஜ் மகன் வார்னேவோட சேர்ந்து East Sandringham Boys Cricket Club-க்காக விளையாடியிருக்கார். தன்னோட அப்பாவோட சேர்ந்து ஆஸ்திரேலியாவுல நடக்குற சர்வதேச போட்டிகளையும் நேர்ல போய் பார்த்திருக்கார். அவர் பார்த்த முதல் டெஸ்ட், 1982-ல மெல்போர்ன்ல நடந்த ஆஸ்திரேலியா – இங்கிலாந்து டெஸ்ட். பிரபலமான அந்தப் போட்டியில இங்கிலாந்து 3 ரன்கள் வித்தியாசத்துல த்ரில் வெற்றிபெறும்.
AIS அகாடமி
வார்னேவோட கிரிக்கெட் கனவு நனவாக முக்கியமான காரணம், 1987-ல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தொடங்கின Australian Institute of Sport (AIS) திட்டம்தான். 1980-கள்ல நடந்த ஆஷஸ் சீரிஸ்ல 4 போட்டிகள்ல 3ல தோத்துடுறாங்க.. அதேமாதிரி, Frank Worrell டிராபி சீரிஸ்லயும் 5-ல 4 போட்டிகள்ல தோல்வி. தேசிய விளையாட்டா கிரிக்கெட்டை வைச்சிருக்க ஆஸ்திரேலியாவுல இந்தத் தோல்விகள் பெரிய அளவுல விமர்சனத்துக்கு உள்ளாகுது. என்னடா பண்றதுனு யோசிச்ச கிரிக்கெட் போர்டு, இளம் வீரர்களைக் கண்டுபிடிச்சு, அவங்களை வளர்த்தெடுத்தாதான் எதிர்காலம்னு முடிவுபண்ணி 1987-ல தொடங்குனது AIS. அவங்க நடந்துன கேம்ப்ல செலக்ட் ஆனது வார்னே லைஃப்ல மிகப்பெரிய டர்னிங் பாயிண்ட். ஆஸ்திரேலிய கோச்சா இருந்து சமீபத்துல ரிசைன் பண்ண ஜஸ்டிங் லாங்கர், முன்னாள் பேட்ஸ்மேன் டேமியன் மார்ட்டின் இவங்களலாம் அந்த கேம்ப்ல வார்னே கூட இருந்தவங்க. சின்ன வயசுல ரொம்ப கேசுவலா, எந்தப் பெரிய கட்டுப்பாடுகளுக்கும் சிக்கிக்காம இருந்த வார்னே, தன்னோட சேட்டைகளால கேம்ப்ல இருந்து வீட்டுக்கு அனுப்பப்படுற நிலைமை பல நேரங்கள்ல வந்திருக்கு. நல்லவேளையாக அப்படி எதுவும் நடக்கல.
அங்க இருந்த மேனேஜர்கள்ல ஒருத்தரான Jack Potter மூலமா பேமஸான `the flipper’ எப்படிப் போடுறதுனு கத்துக்குறாரு நம்ம 20 வயசு வார்னே. 1970கள்ல 7 டெஸ்ட் போட்டிகள் ஆஸ்திரேலியாவுக்கான விளையாடுனவரு Terry Jenner. பெர்சனல் லைஃப்ல நிலையான வேலை எதுவும் இல்லாம, ரொம்ப கஷ்டப்பட்ட ஜென்னர், தான் வேலைபார்த்த நிறுவனத்துல செஞ்ச மோசடிக்காக 18 மாத சிறைதண்டனை அனுபவிச்சவர். ஜெயில்ல இருந்து வெளில வந்த கொஞ்ச நாட்கள்ல அவரை வார்னே சந்திக்கிறார். அகாடமியில அப்பப்போ செய்யுற சின்ன சின்ன சேட்டைகளால தண்டனை வாங்குற வார்னேவுக்கு கடைசி வார்னிங் கொடுக்குறாங்க.. அப்படியாக Sand hill எனப்படும் மணல் மூட்டையை மலைமேல் தூக்கிச் செல்லும் தண்டனை அதிகம் பெற்றவர் வார்னே. இந்த சூழலில் ஜென்னரை சந்திக்கும் வார்னே, அவருடன் நெருக்கமாகிறார். ஜென்னரின் உதவியோடு லெக் ஸ்பின்னில் திறனை வளர்த்துக் கொள்கிறார்.
Terry Jenner
டிஜே என பாசத்தோடு அவரை அழக்கும் வார்னே, பெரும்பாலும் தனிப்பட்ட முறையில் கோச் என்ற வட்டத்துக்குள் யாரையும் அனுமதிக்காதவர். ஆனால், அதில் ஒரே ஒரு விதிவிலக்கு ஜென்னர் மட்டும்தான். கடந்த 2011-ல் அவர் மறைந்தபோது, `உலகின் எந்த மூலையில் இருந்தாலும் டிஜே-வுக்கு போன் அடித்துவிடுவேன். பேட்ஸ்மேனை எப்படி அவுட் செய்வது என்பது பற்றி மணிக்கணக்கில் நாங்கள் விவாதிப்போம். எப்போதெல்லாம் நான் ஃபீலிங் டவுனாக நினைக்கிறேனோ, அப்போதெல்லாம் டிஜேவுடன் பேசுவேன். பேசி முடிக்கும்போது ஒரு புது நம்பிக்கையே எனக்கு வந்திருக்கும். அவர் எனக்கு ஊக்கமளிக்கும் மருத்துவர் போன்றவர்’ என்று வார்னே இரங்கல் தெரிவித்திருந்தார். ஜென்னருடனான பயிற்சி வார்னேவுக்குக் கைகொடுக்கவே, ஜிம்பாப்வே செல்லும் ஆஸ்திரேலிய பி அணியில் தேர்வானார் வார்னே. அவரின் ஸ்பின் ஜாலத்தைக் கண்ட ஆஸ்திரேலிய செலக்ஷன் போர்டு, 7 ஃபர்ஸ்ட் கிளாஸ் மேட்சுகள் மட்டுமே விளையாடிய நிலையில், அவரை சீனியர் டீமுக்கு செலக்ட் செய்தது. 1992-ல் சிட்னி மைதானத்தில் அவர் தனது முதல் சர்வதேச டெஸ்டில் விளையாடியது இந்திய அணிக்கு எதிரான போட்டியில்தான்.
ஆலன் பார்டரின் நம்பிக்கை
இலங்கைக்கு எதிரான கொழும்பு டெஸ்டில் அந்த அணி 150/7 விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்தபோது, பார்டர் ஷேன் வார்னேவை பந்துவீச அழைத்தார். டெயில் எண்டர்கள் 3 பேரையும் அடுத்தடுத்து வீழ்த்தவே, ஆஸ்திரேலியா அந்தப் போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதற்கு முன்னர் வார்னேவின் பௌலிங் ரெக்கார்டு எப்படியிருந்தது என்று பார்த்தீர்களானால், 93 ஓவர்கள் பந்துவீசி 346 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரே ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தியிருந்தார். அன்றைய போட்டியில் வார்னே வீழ்த்திய 3 வீரர்களுமே டெஸ்ட் பேட்டிங் ஆவரேஜ் 6-ஐக் கூட தாண்டாதவர்கள்தான். ஆனால், கேப்டன் தன்மீது வைத்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் என்ற அவரது துடிப்புதான் அங்கே முக்கியமானது. முதல்முறையாக இங்கிலாந்து சென்றபோது, தொடருக்கு முன்னதாக நடந்த Worcester Trophy போட்டியிலோ அல்லது Texaco Trophy போட்டிகளிலோ பார்டர், வார்னேவுக்குப் பந்துவீச வாய்ப்புக் கொடுக்கவே இல்லை. நேரடியாக ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடந்த போட்டியில்தான் இங்கிலாந்து வீரர்கள் வார்னே பந்துவீச்சை எதிர்க்கொண்டனர்.
அந்தப் போட்டியில் Mike Gatting-க்கு வார்னே வீசிய பந்தை கிரிக்கெட் உலகம் என்றும் பத்திரமாக நினைவில் வைத்திருக்கும். லெக் ஸ்டம்புக்கு வெளியே பிட்சாகி ஆஃப் ஸ்டம்பின் ஓரத்தைப் பதம் பார்த்த அந்தப் பந்து எப்படி டர்ன் ஆனது என்று இன்றுவரை விவாதங்கள் நடப்பதுண்டு. அந்த பந்தை கிரிக்கெட் உலகம், `The Ball of the Century’ என்று வரலாற்றில் பதிவு செய்துகொண்டது. அதன்பிறகு, 2007-ல் சர்வதேச போட்டிகளில் இருந்து விடைபெறும் வரை டெஸ்டிலும் ஒருநாள் போட்டிகளிலும் வார்னே, லெஜண்டாகவே போற்றப்பட்டார். ஐபிஎல்-லின் முதல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அவரது தலைமையில்தான் சாம்பியன் பட்டம் வென்றது.
கிரிக்கெட் உலகின் அழியாத அடையாளம் ஷேன் வார்னே… லெஜண்ட் வார்னேவுக்கு இதயப்பூர்வமான அஞ்சலிகளை உரித்தாக்குகிறது Tamilnadu Now.