இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 3 டி20 – 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் இருக்கும்போது, ஷிகர் தவான் தலைமையில் இந்திய அணியின் பி டீம் இலங்கைக்கு அனுப்பப்பட்டிருப்பதாக விமர்சனம் எழுந்தது. இதுகுறித்து பேசிய இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜூனா ரணதுங்கா, `விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இல்லாத இந்திய அணியோடு தொடரில் விளையாட ஒப்புக்கொண்டது மிகப்பெரிய தவறு’ என இலங்கையின் விளையாட்டுத் துறை அமைச்சர் நமல் ராஜபக்சேவைக் கடுமையாக விமர்சித்தார். இதன்மூலம் இலங்கை கிரிக்கெட் அணியின் கௌரவத்துக்கு இழுக்கு ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கடுமையாகக் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார்.
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியில் வொயிட் பால் ஸ்பெஷலிஸ்டுகளாகக் கருதப்படும் ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், தீபக் சஹார், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் இருக்கும் நிலையில், ரணதுங்காவின் கமெண்ட் சர்ச்சைக்குத் தூபம் போட்டது. ரணதுங்காவின் கருத்துக்கு பல்வேறு தரப்பிலும் கண்டணங்கள் எழுந்திருக்கின்றன. இதுகுறித்து பேசிய இந்திய அணி முன்னாள் வீரர் தீப்தாஸ் குப்தா, “அவரது இந்தக் கருத்து நியாயமற்றது. விராட் கோலி, ரோஹித், பும்ரா, பண்ட் போன்ற வீரர்கள் இல்லை என்ற பாயிண்டைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதேநேரம், தவான், ரோஹித், புவனேஷ்வர் குமார் என இந்திய அணியில் இருக்கும் பெரும்பாலான வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர்கள். எந்தவகையிலும் இந்திய அணியை பி டீம் என விமர்சிப்பது சரியாக இருக்காது. இரண்டாவதாக, ஒரு தேசிய அணியை பி டீம் என்று விமர்சிப்பது மரியாதைக் குறைவானது. ஒரு நாட்டுக்காக விளையாடும்போது, அந்த வீரர்களை அவமதிக்கும் வகையில் பேசுவதற்கு சமமானது இது’’ என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.
ரணதுங்காவின் கருத்துகளை இந்திய அணி புறக்கணித்திருக்கிறது. விர்ச்சுவல் பிரஸ்மீட்டில் பேசிய இந்திய வீரர் சூர்யகுமார் யாதவிடம் இதுகுறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். `எல்லோரும் தொடரில்தான் முழுமையாகக் கவனம் செலுத்தி வருகிறோம். பயிற்சியையும் சிறப்பாக மேற்கொண்டு வருகிறோம். சேலஞ்சிங்கான இந்தத் தொடரில் விளையாட ஆவலோடு இருக்கிறோம். இளம் வீரர்கள் எல்லாருக்கும் இது முக்கியமான வாய்ப்பு. தங்கள் திறமையை வெளிப்படுத்த எல்லாவகையிலும் தயாராகவே இருக்கிறோம்’’ என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்திருக்கிறார்.
லைம்லைட்டில் இருப்பதற்காகவே அர்ஜூன் ரணதுங்கா இப்படி ஒரு கருத்தைக் கூறியிருக்கிறார் என பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா விமர்சித்திருக்கிறார். “ஊடக வெளிச்சத்தில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவர் இப்படி பேசியிருக்கிறார். இந்தியாவைப் பொறுத்தவரை 50-60 வீரர்கள் லைன் அப்பில் தயாராகவே இருப்பார்கள். ஷிகர் தவான், புவனேஷ்வர் குமார் போன்ற நிறைய வீரர்கள் இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள். கிரிக்கெட் உலகில் மரியாதை கொண்ட அவர் போன்ற ஒருவர் இப்படி பேசுவது அநாவாசியமானது’’என்று கூறியிருக்கிறார்.