நம்ம எல்லாருக்கும் யுவராஜ் சிங்கை ஒரு கிரிக்கெட்டராத்தான் தெரியும்… ஆனா, ஜூனியர்ஸ் லெவல்லயே அவர் கிரிக்கெட் இல்லாம இன்னொரு விளையாட்டுல நேஷனல் சாம்பியன்றது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்… அது எந்த விளையாட்டு தெரியுமா… சரி, அந்த விளையாட்டுல இருந்து கிரிக்கெட் பக்கம் அவர் கவனம் ஏன் திரும்புச்சு… சினிமா மேல கொள்ளைப் பிரியம் வைச்சிருக்க யுவராஜ் சைல்ட் ஆக்டராவும் சில படங்கள்ல நடிச்சிருக்காருனு நம்புவீங்களா… நீங்க நம்பலைனாலும் அதுதான் நெசம்… கேன்சர்ல இருந்து மீண்டு நம்பிக்கையோட இன்டர்நேஷனல் கிரிக்கெட்டுத் திரும்புன கிரிக்கெட்டர் யுவியோட அப்ஸ் அண்ட் டவுன்ஸ் பத்திதான் இன்னிக்கு நாம பார்க்கப்போறோம்.
யுவராஜ் சிங்
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த யோகராஜ் சிங் – ஷப்னம் தம்பதியோட மகனா 1981 டிசம்பர் 12-ம் தேதி பிறந்தவர் யுவராஜ் சிங். சின்ன வயசுல டென்னிஸ், ரோலர்ஸ்கேட்டிங்னா சுட்டி யுவிக்குக் கொள்ளைப் பிரியம். ஸ்கேட்டிங்கைக் கத்துக்கிட்டதோட அண்டர் 14 ஏஜ் குரூப்ல அந்தப் போட்டியில் நேஷனல் லெவல்ல சாம்பியனாவும் கலக்கியிருக்காரு. ஆனா, முன்னாள் கிரிக்கெட்டரான அவரோட அப்பா, யோகராஜ் சிங்னால கிரிக்கெட் பக்கம் மெல்ல அவரோட கவனம் திரும்பியிருக்கு. ஃபாஸ்ட் பவுலரான யோகராஜ் சிங், இந்தியாவுக்காக ஒரு டெஸ்ட், 6 ஒன்டே மேட்ச்கள்ல விளையாடியிருக்கார். தன்னோட மகனும் ஒரு இன்டர்நேஷனல் லெவல் பிளேயராகணும்னு ஆசைப்பட்ட அவர், யுவியை நேரா சித்துகிட்ட டிரெய்ன் பண்ண அனுப்பிருக்கார். ஆரம்ப நாட்கள்ல யுவி, பேட்டிங் படு மோசமா இருந்திருக்கு. எந்த லெவல்னா, ஃபுல் டாஸ்ல அடிக்கடி போல்டாகி விக்கெட்டை இழக்குற அளவுக்குனு சொல்றாங்க. ஒரு கட்டத்துல சித்து, அவர் மேல நம்பிக்கையை இழந்துட்டாராம். அதுக்கப்புறம், யுவியோட பேட்டிங்கை மெருகேத்துற பொறுப்பை அப்பா யோகராஜே எடுத்துக்கிட்டார். ஃபாஸ்ட் பவுலிங்கை டைமிங்கா எதிர்க்கொள்ள, அவர் ஈரமான டென்னிஸ் பால்ல யுவிக்கு டிரெய்னிங் கொடுத்திருக்கார்.

ஜூனியர் லெவலில் யுவராஜ் சிங்
அப்பாவோட நம்பிக்கையைக் காப்பாத்தணும்ற வெறியோட டிரெய்ன் பண்ண, யுவி சீக்கிரமே பேட்டிங்கில் கலக்க ஆரம்பிச்சிருக்காரு. 13 வயசுலயே பஞ்சாப் அண்டர் 16 டீமுக்கு விளையாடி, அப்படியே அண்டர் 19 டீம்லயும் செலெக்ட் ஆகியிருக்காரு. முதன்முதல்ல அவர் பெரிய ஸ்கோர் அடிச்சது பீகாருக்கு எதிரான அண்டர் 19 Cooch-Behar Trophy மேட்ச்லதான். அந்த மேட்ச்ல 358 ரன் அடிச்ச யுவராஜை கிரிக்கெட் உலகம் வாரியணைத்துக் கொண்டது. யுவியோட கிரிக்கெட் கரியருக்கு அடித்தளம் போட்டது 1999 அண்டர் 19 வேர்ல்டு கப்தான்னே சொல்லலாம். அந்தத் தொடர்ல முகமது கைஃப் தலைமையிலான இந்தியன் டீம் கப் அடிச்சது. அந்த சீரிஸ்ல பேட்டிங்லயும், பவுலிங்லயும் மிரட்டுன யுவராஜ், தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார். அதுக்கப்புறம், 2000-ம் வருஷம் நடந்த நாக்-அவுட் டிராபி சீரிஸில் இந்திய சீனியர் அணிக்காக அறிமுகமானார். கென்யாவுக்கு எதிரான முதல் போட்டியில அவருக்கு பேட்டிங் வாய்ப்பு கிடைக்கலனாலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த மேட்சில் 84 ரன் குவிச்சார் டீனேஜ் யுவி. 2002 நாட்வெஸ்ட் சீரியஸ் யுவியோட ஒன் ஆஃப் தி பெஸ்ட்னே சொல்லலாம். இங்கிலாந்துக்கு எதிரா லண்டன்ல நடந்த மேட்ச்ல, அந்த டீம் செட் பண்ண 326 ரன் டார்கெட்டை எல்லாம் இந்தியா நினைச்சுக்கூட பார்க்க முடியாதுன்னுதான் எல்லாரும் நினைச்சுட்டு இருந்தாங்க. 24 ஓவர் முடியும்போது 146/5-னு இந்தியன் டீம் திணறிட்டு இருந்துச்சு. அப்போலாம், 300 ரன் அடிக்கிறதே பெரிய விஷயம்ன்றபோது, சேஸிங்கெல்லாம் நாட் பாசிபிள். அப்படியான சூழல்ல தன்னோட முன்னாள் கேப்டனும் நண்பனுமான முகமது கைஃபோட கைகோர்த்து ஆறாவது விக்கெட்டுக்கு 121 ரன் சேர்ப்பாரு யுவி. இந்தியாவோட வெற்றி கைகூடப்போற கடைசி நேரம் வரைக்கும் கிரீஸில் இருந்த அவர், 63 பந்துகள்ல 69 ரன் எடுத்து அவுட் ஆவார். அந்தப் போட்டிலதான் 2 விக்கெட் வித்தியாசத்துல இந்தியா ஜெயிச்ச பிறகு பால்கனில இருந்த கேப்டன் கங்குலி, டீசர்ட்டையெல்லாம் கழற்றி சுத்துவார். அது இந்தியன் டீம் ஹிஸ்டரில கிளாசிக்கான மேட்சுகள்ல ஒண்ணாவே நிலைச்சிருச்சு.
2003 வேர்ல்டு கப் சீரிஸ்ல 2 அரை சதங்களை மட்டுமே பதிவு பண்ண யுவி, 2003 பங்களாதேஷ் சீரியஸ்ல தன்னோட முதல் சதத்தை (85 பந்துகளில் 102*) அடிப்பாரு.
Also Read : சச்சின் டெண்டுல்கர் கரியரின் முக்கியமான 7 தருணங்கள்!
முதல் டி20 பிளேயர்
சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு இங்கிலாந்து கவுண்டி டீமான யார்க்ஷைருக்காக விளையாடிய வீரர்ங்குற பெருமை யுவராஜூக்குக் கிடைச்சது. அதேபோல், முதல்முறையா 2003-லயே டி20 ஃபார்மேட்ல விளையாடுன வீரர்கள்ல இவரும் ஒருத்தர். அந்த டைம்ல இங்கிலாந்துல சேவாக், கைஃப் உள்பட மிகச்சில இந்திய வீரர்கள்தான் டி20 போட்டிகள்ல விளையாடுனாங்க.
2003-ல நியூசிலாந்துக்கு எதிரான போட்டி மூலமா டெஸ்ட் ஆட ஆரம்பிச்சாலும், அந்த ஃபார்மேட்ல அவரால பெருசா ஜொலிக்க முடியாமலேயே போயிடுச்சு. டெஸ்ட் ஃபார்மேட்ல 40 மேட்சுகள் விளையாடியிருக்க அவரு, 3 சதங்கள், 11 அரைசதங்களோட 1,900 ரன்கள் எடுத்திருக்கார்.

2007, 2011 வேர்ல்டு கப்கள் யுவி ரசிகர்களால் மறக்க முடியாதது. டி20 ஃபார்மேட்டுக்கான முதல் வேர்ல்டு கப் 2007ல நடந்துச்சு. இந்தியா ஜெயிச்ச அந்த சீரிஸோட ஸ்டார்னா நம்ம யுவிதான். டோர்னமெண்ட் ஃபுல்லாவே பீக் ஃபார்ம்ல இருந்த யுவி, இங்கிலாந்து மேட்சுல செஞ்ச சம்பவம் காலத்துக்கும் அழியாதது. ஸ்டூவர்ட் பிராட் போட்ட ஒரே ஓவர்ல ஆறு பால்லயும் சிக்ஸர் அடிச்சு கிலி காட்டுனார். அத்தோட, 12 பால்ல அரை சதம் பதிவு பண்ணி, Fastest Half Century சாதனையையும் அந்த மேட்ச்ல யுவராஜ் சிங் படைச்சார். அந்த வேர்ல்டு கப் மட்டுமில்லீங்க, 2011ல இந்தியா ஜெயிச்ச ஒன்டே வேர்ல்டு கப் சீரியஸ்லயும் நம்மாளுதான் சூப்பர் ஹீரோ. அந்த சீரியஸ்ல 4 முறை மேன் ஆஃப் தி மேட்ச் அவார்டு வாங்கி அரவிந்த் டி சில்வா, லான்ஸ் குளூஸ்னர் சாதனைகளையும் மேட்ச் பண்ணாரு. பேட்டிங்ல 300 ரன்களுக்கு மேல அடிச்ச அவரு 12 விக்கெட்டையும் எடுத்து மேன் ஆஃப் தி சீரியஸா மின்னுனார். 2000-த்துல அண்டர் 19 வேர்ல்டு கப், 2007ல டி20 வேர்ல்டு கப், 2011ல ஒன்டே வேர்ல்டு கப்னு 3 கப் அடிச்ச இந்திய டீம்ல அவர் மெம்பர். 2007 வேர்ல்டு கப் பெர்பாமென்ஸுக்காக Porsche 911 காரையும் 2011 ஹீரோயிக்ஸுக்காக Audi Q5 காரும் பிசிசிஐ வைஸ் பிரசிடண்ட் தரப்பில் அவருக்குப் பரிசாக அளிக்கப்பட்டன.
கேன்சருடனான போராட்டம்
2011 வேர்ல்டு கப்புக்கு அப்புறம் யுவிக்கு ரொம்பவே அரிதான நுரையீரல் கேன்சர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வலது நுரையீரலில் கடுமையான பாதிப்பு இருக்கவே, அமெரிக்காவின் பாஸ்டன் மற்றும் இண்டியானாபோலீஸில் கீமோதெரபி சிகிச்சை எடுத்துக் கொண்டார். `யுவியோட கிரிக்கெட் கரியர் அவ்ளோதான். இதுக்கு மேல அவரால விளையாட முடியாது’ மாதிரியான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அதையெல்லாம் தவிடுபொடியாக்கி, கேன்சரில் இருந்து மீண்டதோடு கடுமையான உழைப்பு மூலம் 2012-ல் இந்திய அணிக்குத் திரும்பினார். 2012 ஏப்ரல்ல குணமாகி இந்தியா வந்த அவரு, நவம்பர்ல நடந்த போட்டி மூலமா கம்பேக் கொடுத்தார். கேன்சருடனான போராட்டம், இந்தியன் டீமுக்கு அவர் கொடுத்த கம்பேக் பத்தியெல்லாம், 2013-ல ‘The Test of My Life: From Cricket to Cancer and Back’ என்ற பெயரில் சுயசரிதை எழுதினார். தன்னைப் போலவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில், YOUWECAN என்கிற NGO-வைத் தொடங்கி, அவர் பலருக்கு உதவி செய்து வருகிறார். அவர் பிறந்த தேதி, பிறந்த மாசம் ரெண்டுமே 12 என்பதால, அவரோட லக்கி நம்பரும் அதுதான். இதனாலயே அவரோட டீம் ஜெர்சி நம்பரும் 12தான்.

ஐபிஎல்
யுவராஜ் 7 ஐபிஎல் சீசன்கள்ல 4 டீம்களுக்காக விளையாடியிருக்கார். முதல் 3 சீசன்கள் பஞ்சாப் டீம்ல இருந்த அவரை, 2014ல ஆர்.சி.பி 14 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்துல எடுத்துச்சு. அதுக்கு அடுத்த வருஷ ஐபிஎல் ஏலத்துல டெல்லி டீம் அவரை 16 கோடி ரூபாய்க்கு ஏலமெடுத்தது. அந்த டைம்ல Most Expensive Player-ஆ அவர் இருந்தாரு. இன்டர்நேஷனல் கரியர் அளவுக்கு ஐபிஎல்ல அவர் சக்ஸஸை அதிகம் ருசி பார்க்கலைனே சொல்லலாம்.
சின்ன வயசுல அவர் Mehndi Sajda Di மற்றும் Putt Sardara அப்டின்ற இரண்டு படங்கள்ல குழந்தை நட்சத்திரமா சின்ன ரோல்கள்ல நடிச்சிருக்கார். அதேமாதிரி, ஜம்போ என்கிற பாலிவுட் அனிமேஷன் படத்துக்காக ஒரு கேரக்டருக்கு வாய்ஸ் ஓவரும் கொடுத்திருக்கார். ஒரு காலத்துல இந்தியன் டீமோட மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலரா இருந்த யுவராஜ் சிங்கோட பேர், பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டாலும், 2016-ல் பாலிவுட் நடிகையான ஹஸல் கீச்சை காதலித்துக் கரம்பிடித்தார். 2019-ம் ஆண்டு தனது 39 வயதில் இன்டர்நேஷனல் கரியருக்கு விடை கொடுத்த அவர், லட்சக்கணக்கான இளைஞர்களின் ரோல் மாடல்!
யுவியோட கரியர்ல அவரோட பெஸ்ட் Knock-னு நீங்க எதைச் சொல்வீங்க.. மறக்காம அதை கமெண்ட்ல சொல்லுங்க.
0 Comments