ஐபிஎல் அணிகளில் பெரிய ரசிகர் பட்டாளத்துடன் இருக்கும் அணிகளுள் முக்கியமானது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 2016, 2017 என இரண்டாண்டுகள் தடைக்குப் பின்னர் 2018 சீசனில் கம்பேக் கொடுத்த சி.எஸ்.கே, சாம்பியன் பட்டத்தை வென்று பழைய பன்னீர்செல்வமாக வீறுநடை போட்டது. 2019 சீசனில் ஃபைனல் வரை சென்ற சி.எஸ்.கே-வுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த 2020 சீசன் இனிப்பானதாக அமையவில்லை.
-
1 தோனியின் 200 மேட்ச்!
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் 2021 லீக் போட்டி கேப்டன் மகேந்திர சிங் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகக் களமிறங்கிய 200-வது போட்டியாகும். இதன்மூலம் ஒரு ஐபிஎல் அணிக்காக 200 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை தோனி படைத்தார்.
-
2 ஃபேர் பிளே அவார்டு சாதனை
கிரிக்கெட்டை ஜென்டில்மேன் கேம் என்பார்கள். அந்த வகையில் ஐபிஎல் தொடரில் நடுவரின் தீர்ப்பை மதிப்பது, எதிரணி வீரர்களுக்கு மரியாதை அளிப்பது என போட்டிகளை அணுகுவதைப் பொறுத்து ஒவ்வொரு சீசனிலும் ஃபேர் பிளே அவார்டு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சி.எஸ்.கே இதுவரை 6 ஃபேர் பிளே அவார்டுகளை வென்றிருக்கிறது. ஐபிஎல் தொடர்களில் அதிக முறை இந்த விருதைப் பெற்ற சாதனையைத் தன்வசம் வைத்திருப்பது சி.எஸ்.கேதான்.
-
3 பர்ப்பிள் கேப்
ஐபிஎல் அணிகளிலேயே அதிக முறை பர்ப்பிள் கேப் வென்றது சி.எஸ்.கே வீரர்கள்தான். ஒவ்வொரு சீசன் முடிவிலும் அந்த சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரருக்கு வழங்கப்படும் பர்ப்பிள் கேப்களை இதுவரை 4 முறை சி.எஸ்.கே வீரர்கள் வென்றிருக்கிறார்கள். 2013 சீசனில் பிராவோவும், அதற்கடுத்த இரண்டு சீசன்களில் முறையே மோஹித் ஷர்மா, பிராவோவும் பர்ப்பிள் கேப் வின்னர்களாக ஜொலித்தனர். அதன்பின்னர், 2019 சீசனில் சி.எஸ்.கே வீரர் இம்ரான் தாஹிர் பர்ப்பிள் கேப் வின்னரானார்.
-
4 ஒரே சீசனில் அதிக விக்கெட்
ஒரே சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் சி.எஸ்.கே வீரர் டிவைன் பிராவோவே தன்வசம் வைத்திருக்கிறார். 2013 சீசனில் 18 போட்டிகளில் விளையாடிய டிவைன் பிராவோ 32 விக்கெட்டுகள் வீழ்த்தியதே ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகளாகும்.
-
5 வெற்றி சதவிகிதம்
ஐபிஎல் அணிகளிலேயே அதிக வெற்றி சதவிகிதத்தைக் கொண்ட அணியும் சி.எஸ்.கேதான். 2020 சீசன் வரை 179 போட்டிகளில் விளையாடிய சி.எஸ்.கே, அதில் 106 போட்டிகளில் வெற்றிபெற்றது. 71 போட்டிகளில் தோல்வியும் தலா ஒரு போட்டி டை மற்றும் முடிவில்லாமல் இருக்கும் டிராக் ரெக்கார்டைக் கொண்டது சி.எஸ்.கே. ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே-வின் வின் பெர்சன்டேஜ் எனப்படும் வெற்றி சதவிகிதம் 59.83.
-
6 2008 முதல் ஒரே கேப்டன்
ஐபிஎல் தொடங்கிய 2008ம் ஆண்டு முதல் ஒரே கேப்டனின் கீழ் விளையாடி வரும் அணியும் சி.எஸ்.கே மட்டுமே. மிகவும் அரிதாக ரெய்னா சில போட்டிகளில் சி.எஸ்.கே கேப்டனாகப் பொறுப்பேற்றிருக்கிறார். ஆனால், அவர் தற்காலிகமாக அந்தப் போட்டிகளுக்கு மட்டுமே கேப்டனான நிலையில், கேப்டனை மாற்றாத ஒரே ஒரு ஐபிஎல் அணி சி.எஸ்.கேதான்.
-
7 குறைந்த ஸ்கோரை டிபண்ட் செய்த அணி
ஐபிஎல் தொடரில் குறைந்தபட்ச ஸ்கோரை டிபண்ட் செய்த அணி என்ற பெருமையும் சி.எஸ்.கே வசம்தான் இருக்கிறது. 2009 ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட் செய்த சி.எஸ்.கே 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்தது. ஆனால், அந்த ஸ்கோரை வெற்றிகரமாக டிபண்ட் செய்து 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை அணி. அந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 92 ரன்களை மட்டுமே எடுத்தது.
-
8 அதிக ஃபைனல்கள்
2020 சீசன் வரை நடந்த 13 சீசன்களில் 11 தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியிருக்கிறது. அவற்றில் 8 முறை இறுதிப் போட்டிக்கு சி.எஸ்.கே தகுதி பெற்றது. இதன்மூலம் அதிகமுறை இறுதிப் போட்டியில் விளையாடிய ஐபிஎல் அணி என்ற சாதனையும் சி.எஸ்.கே படைத்திருக்கிறது. 2009 சீசனில் அரையிறுதியில் ஆர்.சி.பிக்கு எதிரான போட்டியில் தோல்வி, 2014 சீசனில் குவாலிஃபையர் 2 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான தோல்வி என இரண்டு முறை இறுதிப்போட்டியை நெருங்கியிருந்தது சி.எஸ்.கே. 2020 சீசன்தான் சி.எஸ்.கே பிளே ஆஃப் சுற்றுக்கே தகுதி பெறாத ஒரே ஐபிஎல் சீசன்.
0 Comments