மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் வீழ்த்தியது. முதலில் பேட் செய்த சி.எஸ்.கே, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்த நிலையில், கொல்கத்தா அணி 19.1 ஓவர்களில் 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்த வெற்றி மூலம் சி.எஸ்.கே ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது.
-
1 முதல் செஞ்சுரி பார்ட்னர்ஷிப்
சென்னை அணியின் தொடக்க வீரர்கள் டூப்ளசி - கெய்க்வாட் ஜோடி, இந்தப் போட்டியில் வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. முதல் மூன்று இன்னிங்ஸ்களில் 5,5,10 என ஏமாற்றிய கெய்க்வாட், இந்தப் போட்டியில் அரைசதம் அடித்து அசத்தினார். 42 பந்துகளில் 64 ரன்கள் எடுத்த அவர், 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் விளாசினார். ஓபனிங் இறங்கி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த டூப்ளசி, 60 பந்துகளில் 95 ரன்கள் குவித்தார். இதில், 4 சிக்ஸர்களும் 9 பவுண்டரிகளும் அடங்கும். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 12.2 ஓவர்களில் 115 ரன்கள் சேர்த்தது. இந்த ஐபிஎல் சீசனில் சி.எஸ்.கே தொடக்க வீரர்கள் முதல்முறையாக செஞ்சுரி பார்ட்னர்ஷிப் கொடுத்தார்கள்.
-
2 சர்ப்ரைஸ் தோனி
ருத்துராஜ் கெய்வாட் ஆட்டமிழந்த பின்னர், களமிறங்கிய மொயின் அலி 12 பந்துகளில் 25 ரன்களோடு பெவிலியன் திரும்பினார். நான்காவது பேட்ஸ்மேனாக வழக்கமாகக் களமிறங்கும் சுரேஷ் ரெய்னாவுக்குப் பதில் இந்தப் போட்டியில் தோனி இறங்கினார். கடந்த போட்டியில் முதல் ஆறு பந்துகளை வீணடித்தது பற்றி பேசிய தோனி, முதல் பந்திலேயே பேட்டைச் சுழற்றத் தொடங்கிவிட்டார். 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 8 பந்துகளில் 17 ரன்களை அவர் எடுத்தார். 19வது ஓவரின் கடைசி பந்தில் தோனி ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் ஒரே ஒரு பந்தை சந்தித்த ஜடேஜா, அதை சிக்ஸராக்கினார். சி.எஸ்.கே 200 ரன்களுக்கு மேல் குவித்த நிலையில், ரெய்னா களமிறங்கவே இல்லை. கொல்கத்தாவின் முக்கிய வேகப்பந்துவீச்சாளரான கம்மின்ஸ், 4 ஓவர்கள் வீசி விக்கெட் எதுவும் எடுக்காமல் 58 ரன்களை விட்டுக்கொடுத்திருந்தார்.
-
3 சஹார் மிரட்டல்
பவர்பிளேவில் சஹார் மீண்டும் மேஜிக் நிகழ்த்தினார். 220 ரன்கள் டார்க்கெட்டோடு களமிறங்கிய கொல்கத்தா அணியின் டாப் ஆர்டரை சிதைத்த சஹார், பவர்பிளேவில் மட்டும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சென்னை அணிக்காக பவர்பிளேவில் 4 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் சஹார்தான். சுப்மன் கில், நிதிஷ் ராணா, மோர்கன், சுனில் நரைன் என பவர்பிளேவில் கொல்கத்தாவின் டாப் ஆர்டரை பேக் செய்தார் சஹார். மறுமுனையில் ராகுல் திரிபாதி, லுங்கி இங்கிடி பந்துவீச்சில் ஆட்டமிழக்க 5.2 ஓவர்களில் கொல்கத்தா 5 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் என்ற நிலைக்குச் சென்றது.
-
4 ரஸல் புயல்
ஏழாவது பேட்ஸ்மேனான ரஸல் பவர்பிளே முடிவதற்குள் களத்துக்கு வந்துவிட்டார். முதல் பந்திலேயே பேட்டைச் சுழற்றத் தொடங்கிய ரஸல், சி.எஸ்.கே பவுலர்களை மிரட்டினார். இங்கிடி வீசிய ஆறாவது ஓவரில் 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என இன்னிங்ஸை அதிரடியாகத் தொடங்கினார் ரஸல். சஹார், ஜடேஜா ஓவர்களை பவுண்டரி, சிக்ஸர் என ரஸல் - தினேஷ் கார்த்தி டீல் செய்தது. 10வது ஓவரை வீசிய ஷர்துல் தாக்குர், ஒரே ஓவரில் 24 ரன்கள் விட்டுக்கொடுத்தார். அந்த ஓவரில் தலா 2 சிக்ஸர், பவுண்டரி என ரஸல் ஆட்டம் வேற லெவலில் இருந்தது. ஜடேஜா வீசிய 11வது ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸரடித்த ரஸல், 21 பந்துகளில் அரைசதமடித்து மிரட்டினார். 12வது ஓவரில் ரஸல் விக்கெட்டை வீழ்த்தி சி.எஸ்.கே ரசிகர்களுக்கு ஆறுதல் கொடுத்தார் சாம் கரண். அவர் லெக் சைடில் வீசிய பந்தை வொய்டாக இருக்கலாம் என ரஸல் விலக, அது லெக் ஸ்டம்பைப் பதம் பார்த்தது. மிஸ் கால்குலேஷனால் விக்கெட்டை பறிகொடுத்த ரஸல், அந்த ஏமாற்றத்தைத் தாங்க முடியாமல் நீண்ட நேரம் பெவிலியன் படிக்கட்டுகளிலேயே அமர்ந்திருந்ததைப் பார்க்க முடிந்தது. 5.2-வது ஓவரில் கைகோர்த்த ரஸல் - தினேஷ் கார்த்திக் ஜோடி 11.2வது ஓவரில் பிரிந்தது. மொத்தம் 36 பந்துகளை சந்தித்த இவர்கள் 6வது விக்கெட்டுக்கு சேர்ந்த ரன்கள் 81 ரன்கள். இதில், ரஸலின் பங்களிப்பு, 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் உள்பட 52 ரன்கள்.
-
5 அசத்தல் கம்மின்ஸ்
ரஸல் அவுட்டானா என்ன, நான் இருக்கேன்ல என்று தினேஷ் கார்த்திக் சாம்கரணின் அதே ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்து மிரட்டினார். எட்டாவது பேட்ஸ்மேனாக உள்ளே வந்த ஆல்ரவுண்டர் கம்மின்ஸ் மிகப்பெரிய இன்னிங்ஸ் ஆடி போட்டியை கொல்கத்தா பக்கம் திருப்பினார். 15வது ஓவரில் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்தார். அவர் 24 பந்துகளில் 40 ரன்களைத் தன் பங்குக்கு சேர்த்தார். கடைசி 5 ஓவர்களில் கொல்கத்தா வெற்றிக்கு 75 ரன்கள் தேவை என்ற நிலையில், கம்மின்ஸ் தனியாளாக மேட்சின் போக்கையே மாற்றினார். சாம்கரண் வீசிய 16வது ஓவரில் 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உள்பட 30 ரன்கள் சேர்க்கவே, 4 ஓவருக்கு 45 ரன்கள் என்று போட்டியின் போக்கே மாறியது. அடுத்த ஓவரில் நாகர்கோட்டி விக்கெட்டை வீழ்த்திய இங்கிடி, 5 ரன்கள் கொடுத்து சிக்கனமாகப் பந்துவீசினார். மொயின் அலி பந்துவீசாத நிலையில், இங்கிடி, சஹாரின் 4 ஓவர் கோட்டா முடிந்துவிட்டது.
இதனால், கடைசி 3 ஓவர்களை ரன்களை வாரி வழங்கியிருந்த ஷர்துல் தாக்குர், சாம் கரண் பந்துவீச வேண்டிய நிலை. தாக்குர் வீசிய 18வது ஓவரில் 3 வொய்டுகள் உள்பட 12 ரன்கள் எடுக்கப்பட்டது. இதனால், கடைசி 2 ஓவர்களில் 28 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்தது கொல்கத்தா. சாம் கரணின் 19வது ஓவரில் ஒரு விக்கெட் உள்பட 8 ரன்கள் எடுக்கப்பட்டது. கொல்கத்தாவை 20 ரன்கள் எடுக்கவிடாமல் கடைசி ஓவரை வீச வேண்டிய சூழலில் தாக்குர் வீசிய முதல் பந்தில் பிரஷித் கிருஷ்ணா ரன் அவுட்டாகவே, சி.எஸ்.கே 18 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. கடைசி இரண்டு பேட்ஸ்மேன்களான வருண் சக்கரவர்த்தி, பிரஷித் கிருஷ்ணா ஆகிய இருவருமே பேட் கம்மின்ஸுக்கு ஸ்டிரைக் கொடுப்பதற்காக ஓடி விக்கெட்டைப் பறிகொடுத்தனர். ஒருவேளை கொல்கத்தா கைவசம் விக்கெட்டுகள் இருந்தால், போட்டியின் முடிவே மாறியிருக்கலாம். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பேட் கம்மின்ஸ், 34 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார். இதில், 4 பவுண்டரிகளும் 6 சிக்ஸர்களும் அடக்கம். 31-5 என்ற நிலையில் இருந்த கொல்கத்தா, 19.1 ஓவர்களில் 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
0 Comments