சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை அணி மீண்டும் ஒரு டெத் ஓவர் மேஜிக்கை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது. டாஸ் வென்று பேட் செய்த மும்பை அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. ஆனால், சிறப்பான டெப்த் ஓவர் பவுலிங்கால் அந்த ஸ்கோரை வெற்றிகரமாக டிபண்ட் செய்து மற்ற அணிகளுக்கு இன்னொருமுறை பாடமெடுத்திருக்கிறது மும்பை இந்தியன்ஸ். 151 ரன்கள் இலக்கோடு விளையாடிய ஹைதராபாத் அணி கடைசி ஓவரில் 137 ரன்கள் ஆல் அவுட்டானது. இதன்மூலம் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற மும்பை புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.
-
1 அசத்தல் தொடக்கம்
சென்னை பிட்சில் பவர்பிளேவில் ரன்கள் சேர்ப்பதை விட விக்கெட் விழாமல் பார்த்துக்கொள்வது முக்கியம். அந்தவகையில் மும்பை அணி பவர்பிளேவில் விக்கெட் இழப்பின்றி 53 ரன்களை சேர்த்தது. ஆனால், மிடில் ஆர்டர் சொதப்பலால் அந்த அணியால் பெரிய அளவில் ஸ்கோர் செய்ய முடியவில்லை. இதே பிரச்னையைத்தான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் எதிர்க்கொண்டது. வார்னர் - ஜானி பேரிஸ்டோவ் ஜோடி பவர்பிளேவில் விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் எடுத்து வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.
-
2 விஜய் ஷங்கர் - ரஷீத் கூட்டணி
பவர்பிளேவில் விக்கெட்டை இழக்காமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை அணியின் சூழல், அதன்பிறகு அப்படியே தலைகீழானது. விஜய் ஷங்கர் பந்துவீச்சில் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தார். அடுத்துவந்த சூர்யகுமார் யாதைவையும் விஜய் ஷங்கர் ஆட்டமிழக்கச் செய்தார். ஹைதராபாத் அணி டெப்த் ஓவர்களைப் பற்றியோ, பொல்லார்ட், ஹர்திக் பற்றியோ யோசிக்காமல் ரஷீத் கானைத் தொடந்து பந்துவீசச் செய்தது. ரஷீத்தின் டைட் ஓவர்களால் மும்பை அணியால் 8 முதல் 12 வரையிலான ஓவர்களில் 17 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. ரஷீத் கானை அடுத்து பந்துவீச வந்த முஜிபுர் ரஹ்மான், டி காக்கை வெளியேற்றினார். தொடக்கம் முதலே திணறிய 39 பந்துகளில் 40 ரன்களுக்கு வெளியேறினார். பவர்பிளேவை வலுவாக முடித்த மும்பை 14 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் என்ற நிலையில் இருந்தது.
-
3 பொல்லார்ட்
சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொதப்பவே, பொல்லார்ட் குவித்த 35 ரன்கள் மும்பை அணி 150 ரன்க்ளை எடுக்கக் காரணமானது. 19வது ஓவரில் பொல்லார்ட் கொடுத்த கேட்சை விஜய் ஷங்கர் தவறவிடவே, அது எஸ்.ஆர்.ஹெச்சுக்குப் பாதகமாக முடிந்தது. கடைசி ஓவரின் 4 பந்துகள் வரையிலான 27 பந்துகளில் மும்பை அணி இன்னிங்ஸில் சிக்ஸரே இல்லை. ஆனால், கடைசி இரண்டு பந்துகளையும் சிக்ஸராக்கினார் பொல்லார்ட். கடைசி நான்கு ஓவர்களில் மட்டும் மும்பை அணி 43 ரன்கள் குவித்தது. அதேபோல், புவனேஷ்குமார் இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் பந்துவீசி விக்கெட் எதுவும் எடுக்காமல் 45 ரன்கள் கொடுத்தார்.
-
4 பேரிஸ்டோவ்
விருத்திமான் சாஹா பிளேயிங் லெவனில் இருந்து கழற்றிவிடப்பட்டு ஜான் பேரிஸ்டோவுக்கு இந்தப் போட்டியில் ஓபனிங் வாய்ப்புக் கொடுத்தது சன்ரைசர்ஸ் அணி. அந்த முடிவுக்கு நியாயம் சேர்த்தார் பேரிஸ்டோவ். முதல் இரண்டு ஓவர்களில் 2 ரன்கள் என்ற சூழலில் அதற்குப் பின்னர் பவர்பிளேவின் 15 பந்துகளில் 3 பவுண்டரிகளையும் 4 சிக்ஸர்களையும் விளாசினார் பேரிஸ்டோவ். நியூஸிலாந்து பவுலர்களான டிரெண்ட் போல்ட், ஆடம் மிலின் ஆகியோரின் பந்துகளை சிதறடித்தார். 151 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய சன்ரைசர்ஸ் அணி, பவர் பிளேவில் விக்கெட் இழப்பின்றி 55 ரன்களை எடுத்து வலுவான நிலையில் இருந்தது.
-
5 மிடில், டெப்த் ஓவர் கிளாஸ்
மிடில் ஓவர்களில் ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் 3 பேரை பார்சல் செய்து பெவிலியனுக்கு அனுப்பினார் ஸ்பின்னர் ராகுல் சஹார். இது அந்த அணிக்குக் கடும் நெருக்கடியைக் கொடுத்தது. 9 முதல் 14 இடையிலான ஐந்து ஓவர்களில் சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்களால் ஒரே ஒரு பவுண்டரிதான் அடிக்க முடிந்தது. 12 ஓவர்கள் முடிந்தபோது 48 பந்துகளில் 59 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்த எஸ்.ஆர்.ஹெச். ஆனால், சஹார், பொல்லார்ட், பும்ரா, மிலின், போல்ட்டின் டைட் ஓவர்களால் நிலைமை மாறியது. கடைசி ஓவரில் சன்ரைசர்ஸ் வெற்றிக்கு 16 ரன்கள் தேவை என்ற நிலையில், 2 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது சன்ரைசர்ஸ் அணி.
-
6 வீணான விஜய் சங்கர் முயற்சி
கடைசி 5 ஓவர்களில் 47 ரன்கள் எடுக்க வேண்டிய சூழலில் அனுபவமில்லாத விராட் சிங், அபிஷேக் ஷர்மா, அப்துல் சமத் என மிடில் ஆர்டரால் இந்த மேட்சைத் தோற்றது சன்ரைசர்ஸ். குர்ணால் பாண்டியா வீசிய ஒரே ஓவரில் 2 சிக்ஸர்களை அடித்து ஹைதராபாத்துக்கு நம்பிக்கையளித்த விஜய் சங்கர், பும்ரா வீசிய ஸ்லோ பாலில் விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 25 பந்துகளில் 28 ரன்களோடு பெவிலியன் திரும்பினார். இந்தப் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற சன்ரைசர்ஸ், ஐபிஎல் 2021-ல் தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியைச் சந்தித்தது. அதேபோல், சென்னை சேப்பாக்கத்தில் தொடர்ச்சியாக அந்த அணிக்கு ஆறாவது தோல்வி இது. 71-1 என்ற நிலையில் இருந்து 137 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி பரிதாபமாகத் தோற்றது சன்ரைசர்ஸ் அணி.
0 Comments