மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் அணி, ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பஞ்சாப் நிர்ணயித்த 106 ரன்கள் டார்கெட்டை சி.எஸ்.கே 15.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து எட்டியது.
-
1 சஹாரின் மேஜிக் ஸ்பெல்
சென்னை சூப்பர்கிங்ஸின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹாரின் அசத்தல் பந்துவீச்சு பஞ்சாப் அணியின் நம்பிக்கையை தொடக்கத்திலேயே சிதைத்தது. அந்த அணியின் டாப் 5 பேட்ஸ்மேன்களில் நான்கு பேரின் விக்கெட்டை தீபக் சஹார் வீழ்த்தினார். மற்றொருவரான கே.எல்.ராகுல் ரன் அவுட்டாக அந்த அணி 26 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.
தான் வீசிய 24 பந்துகளில் 18 பந்துகளை டாட் பாலாக வீசிய தீபக் சஹார், முதல் ஓவரிலேயே விக்கெட் வேட்டையைத் தொடங்கிவிட்டார். மயங்க் அகர்வாலை முதல் ஓவரிலேயே போல்டாக்கி வெளியேற்றிய அவர், ஐந்தாவது ஓவரில் கெய்லே, பூரன் என இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். பவர் பிளேவைத் தாண்டியும் தீபக் சஹாரை, தொடர்ச்சியாக நான்கு ஓவர்களையும் ஒரே ஸ்பெல்லாக வீச வைத்தார் தோனி. அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. முதல் இன்னிங்ஸின் 7வது ஓவரில் தீபக் ஹூடா விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார் சஹார். 4 ஓவர்களில் 13 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது ஐபிஎல் போட்டிகளில் அவரது சிறந்த பந்துவீச்சாகும். -
2 சி.எஸ்.கே-வுக்காக 200-வது மேட்ச்!
கேப்டன் தோனிக்கு இந்த போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 200-வது போட்டியாகும். ஐபிஎல் தொடரில் ஒரே அணிக்காக 200 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை இதன்மூலம் தோனி பெற்றார். 200வது போட்டியில் கிடைத்த வெற்றி, ஐபிஎல் 2021 சீசனில் சி.எஸ்.கே-வுக்கு முதல் வெற்றியாகவும் அமைந்தது சிறப்பு.
-
3 ஷாருக்கான் அசத்தல்
பஞ்சாப் அணியில் இடம்பெற்றிருக்கும் தமிழக வீரர் ஷாருக்கானின் ஆட்டமே, அந்த அணி 100 ரன்களைக் கடக்க முக்கிய காரணமாக அமைந்தது. ஆறாவது வீரராகக் களமிறங்கிய ஷாருக்கான், 36 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து இரண்டு ரன்களில் தனது முதல் ஐபிஎல் சதத்தை மிஸ் செய்தார். இதில் 4 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கும். ஐந்தாவது ஓவரிலேயே களமிறங்கிவிட்ட ஷாருக்கான், கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.
-
4 மொயின் அலி
சி.எஸ்.கே-வின் நீண்ட நாட்களாக சுரேஷ் ரெய்னாவால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஒன் டவுன் பேட்ஸ்மேன் ஸ்லாட்டைக் கொடுத்ததற்கு இந்தப் போட்டியில் நியாயம் சேர்த்தார் மொயின் அலி. தொடக்க வீரர் ருத்துராஜ் கெய்க்வார் பவர் பிளே ஓவர்களிலேயே ஆட்டமிழந்த நிலையில், டூப்ளசிஸுடன் கைகோர்த்து இரண்டாவது விக்கெட்டுக்கு 7.3 ஓவர்களில் 66 ரன்கள் சேர்த்தார் மொயின் அலி. 31 பந்துகளைச் சந்தித்த மொயின் அலி, ஒரு சிக்ஸர் 7 பவுண்டரிகளுடன் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். 107 என்ற எளிதான டார்க்கெட்டை நோக்கி ஓடிய சி.எஸ்.கே-வின் வெற்றியை மொயின் அலி உறுதிப்படுத்திவிட்டு வெளியேறினார்.
ஷமி வீசிய 15-வது ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் ரெய்னா, அம்பதி ராயுடு ஆட்டமிழந்தாலும், அடுத்துவந்த சாம் கரண் பவுண்டரியோடு போட்டியை முடித்து வைத்தார்.
0 Comments