சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட் செய்த ஆர்.சி.பி 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட் செய்த கொல்கத்தாவால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் சென்னை பயணத்தை வெற்றியோடு முடித்திருக்கிறது ஆர்.சி.பி.
#RCBvsKKR மேட்சின் 5 திருப்புமுனைகள்!
-
1 வருண் சக்கரவர்த்தியின் டிரீம் ஸ்டார்ட்
கொல்கத்தா அணி ஸ்பின்னர்களோடு பவுலிங்கைத் தொடங்கியது. வருண் சக்கரவர்த்தி வீசிய இரண்டாவது ஓவரிலேயே இதற்கு கைமேல் பலன் கிடைத்தது. விராட் கோலி, ரஜாத் பட்டிடார் என இரண்டு விக்கெட்டுகளை ஒரே ஓவரில் வீழ்த்தினார். இதனால், 2 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் என்ற நிலையில் பெங்களூர் இருந்தது. அதன்பின்னர், வருண் சக்கரவர்த்தியை பவர்பிளேவில் மோர்கன் பயன்படுத்தவில்லை. வருண் வீசிய ஏழாவது ஓவரில் 14 ரன்களும், கடைசி ஸ்பெல்லில் வீசிய இரண்டு ஓவர்களில் 22 ரன்களையும் ஆர்.சி.பி எடுத்தது. வருண் சக்கரவர்த்தியை மோர்கன் பயன்படுத்திய விதம் விவாதத்துக்குள்ளானது.
-
2 மீண்டும் மேக்ஸ்வெல்
மூன்றாவது ஓவரில் பேட் செய்ய வந்த மேக்ஸ்வெல், தேவ்தத் படிக்கல்லுடன் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டார். மேக்ஸ்வெல்லின் அதிரடியால் பவர்பிளே முடிவில் 45/2 என்ற நிலையை எட்டிய ஆர்.சி.பி, 10 ஓவர்களில் 84 ரன்களை எடுத்து பெரிய ஸ்கோருக்கு அடித்தளம் அமைத்தது. இந்த ஐபிஎல் சீசனின் மூன்றாவது போட்டியில் விளையாடும் மேக்ஸ்வெல், இரண்டாவது அரைசதத்தைப் பதிவு செய்தார். 49 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார். இதில், 9 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும். நடப்பு ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து ஆரஞ்சு கேப்பையும் தனதாக்கினார் மேக்ஸ்வெல்.
-
3 ஏபிடி ஷோ
12வது ஓவரில் தேவ்தத் படிக்கல் ஆட்டமிழந்தபோது ஆர்.சி.பி 3 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. 8.5 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் களமிறங்கிய ஏ.பி.டிவிலியர்ஸ் அதிரடியால் ஆர்.சி.பி 200 ரன்களுக்கு மேல் குவித்தது. மேக்ஸ்வெல்லுடன் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 53 ரன்கள் சேர்த்த டிவிலியர்ஸ், அதன்பின்னர் பீஸ்ட் மோடுக்கு மாறினார். மேக்ஸ்வெல் ஆட்டமிழக்கும்போது ஆர்.சி.பியின் ஸ்கோர் 148/4. கடைசி 3 ஓவர்களில் மட்டும் 56 ரன்களை எடுத்தது ஆர்.சி.பி. குறிப்பாக கடைசி 5 ஓவர்களில் மட்டும் டிவிலியர்ஸ் 55 ரன்கள் குவித்தார். அவர் 34 பந்துகளில் 9 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 76 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
-
4 பேட்ஸ்மேன்கள் சொதப்பல்
மிகப்பெரிய ஸ்கோரை சேஸ் செய்த கொல்கத்தா அணிக்கு இந்த முறையும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கைகொடுக்கவில்லை. அதிரடியாக இன்னிங்ஸைத் தொடங்கிய சுப்மன் கில், இரண்டாவது ஓவரிலேயே வெளியேறினார். 9 பந்துகளில் 21 ரன்களுடன் அவர் வெளியேற, அடுத்துவந்த திரிபாதியும் நீண்டநேரம் நிலைக்கவில்லை. பவர்பிளேவில் 2 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்திருந்த கொல்கத்தா, 8.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் என்ற நிலைக்கு சென்றது. திரிபாதி மற்றும் தினேஷ் கார்த்திக் விக்கெட்டுகளை சஹால் வீழ்த்தினார். மூன்றாவது போட்டியில் விளையாடும் சஹால் இந்த சீசனின் முதல் விக்கெட்டை வீழ்த்தியதே இந்தப் போட்டியில்தான்.
சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததால், கொல்கத்தாவால் ரன் ரேட்டை பராமரிக்கமுடியவில்லை. 14வது ஓவரில் கேப்டன் மோர்கன் ஆட்டமிழக்கும்போது, 38 பந்துகளில் வெற்றிக்கு 91 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலையில் இருந்தது கொல்கத்தா. சஹால் வீசிய 17வது ஓவரில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளை ரஸல் அடித்தாலும், ஓவருக்கு 20 ரன்களுக்கு மேல் தேவை என்ற நிலையே கொல்கத்தாவுக்கு இருந்தது. கடைசி ஓவரில் 43 ரன்கள் தேவை என்ற நிலையில், ஹர்ஷல் படேல் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டைப் பறிகொடுத்தார் ரஸல். -
5 ஆர்.சி.பியின் முதல் ஹாட்ரிக்
கொல்கத்தா நைட் ரைடர்ஸை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆர்.சி.பி, ஐபிஎல் 2021 சீசனில் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்தது. இதன்மூலம் முதல்முறையாக ஐபிஎல் சீசன் ஒன்றில் விளையாடிய முதல் மூன்று போட்டிகளிலும் விராட் கோலி படை வெற்றிபெற்றிருக்கிறது.
0 Comments