மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் சஞ்சு சாம்சனின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. டெல்லி நிர்ணயித்த 148 ரன்கள் டார்க்கெட்டை அந்த அணி 19.4 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து எட்டியது.
-
1 எழுச்சிபெற்ற உனத்கட்!
ஐபிஎல் தொடரில் 2011-க்குப் பிறகு பவர் ப்ளேவில் 3 ஓவர்கள் பந்துவீச கிடைத்த வாய்ப்பை ராஜஸ்தான் வீரர் உனத்கட் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டார். பிரித்வி ஷா, ஷிகர் தவான், ரஹானே என டெல்லியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை சீக்கிரமே பெவிலியனுக்குத் திருப்பி அனுப்பினார். இது டெல்லி அணியின் ரன் ரேட் வேகத்தை மட்டுப்படுத்தியது. நான்கு ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த உனத்கட், 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 3 விக்கெட்டுகளோடு பேட்டிங்கிலும் ஒரு சிக்ஸர் உள்பட 11 ரன்கள் எடுத்த உனத்கட் ஆட்டநாயகானாகத் தேர்வு செய்யப்பட்டார்.
-
2 பண்ட் நிதானம்
7 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், லலித் யாதவுடன் சேர்ந்து அணியை மீட்கும் முயற்சியில் இறங்கினார் கேப்டன் பண்ட். கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய பண்ட், 32 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார். இதில் 9 பவுண்டரிகள் அடங்கும். ரியான் பராக் வீசிய 13-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு பரிதாபமாக ரன் அவுட்டாகி வெளியேறினார் பண்ட். அவர் ஆட்டமிழக்கும்போது 5 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் என்றிருந்த ஸ்கோர், 20 ஓவர்களில் 147/8 என்று முடிந்தது. டெல்லியால் கடைசி 7 ஓவர்களில் 5 பவுண்டரிகளை மட்டுமே அடிக்க முடிந்தது.
-
3 மிரட்டிய டெல்லி வேகக் கூட்டணி!
டெல்லி அணியின் வேகக் கூட்டணியான கிறிஸ் வோக்ஸ் - ரபாடா இருவரும் இணைந்து ராஜஸ்தானின் டாப் ஆர்டரை ஆட்டம்காணச் செய்தனர். ஜோஸ் பட்லர், மனன்வோரா மற்றும் கடந்த போட்டியில் சதமடித்து அசத்திய கேப்டன் சஞ்சு சாம்சன் என முதல் மூன்று விக்கெட்டுகளையும் பவர் ப்ளே ஓவர்களிலேயே வீழ்த்தினர். அடுத்து வந்த அவிஷ் கான், ஷிவம் துபே, ரியான் பராக் என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களையும் அவுட்டாக்கவே, ராஜஸ்தான் அணி தடுமாறியது. அந்த அணியின் ஸ்கோர் 50 ரன்களைத் தொட்டதே 10வது ஓவரில்தான்.
-
4 மில்லர் - கில்லர்
148 ரன்கள் இலக்கோடு விளையாடிய ராஜஸ்தான் இன்னிங்ஸில் நம்பிக்கை ஏற்படக் காரணம் டேவிட் மில்லர். 5-42 என்ற நிலையில், டீவாட்டியாவுடன் கைகோர்த்த மில்லர், ஸ்கோரை மெதுவாக உயர்த்தினார். இந்த ஜோடி ஆறாவது விக்கெட்டுக்கு 48 ரன்கள் சேர்த்தது. ஸ்டோய்னிக்ஸ் வீசிய 14வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரியும் அவிஷ் கான் வீசிய 15வது ஓவரில் தொடர்ந்து இரண்டு சிக்ஸர்களையும் அடித்தார் மில்லர். ஹாட்ரிக் சிக்ஸருக்கு ஆசைப்பட்டு மில்லர் ஆட்டமிழந்தார். இந்த மேட்சில் 35 ஓவர்களுக்குப் பிறகே முதல் சிக்ஸர் அடிக்கப்பட்டது. டேவிட் மில்லர் 43 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
-
5 மோரிஸ் சொன்ன மெசேஜ்
மில்லர் ஆட்டமிழந்த பின்னர் ராஜஸ்தானின் வெற்றிக்கு 25 பந்துகளில் 44 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. 8வது விக்கெட்டுக்கு உனத்கட்டோடு ஜோடி சேர்ந்த ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ், ராஜஸ்தான் வெற்றியை சாத்தியமாக்கினார். இந்தப் போட்டியின் முதல் 35 ஓவர்களில் சிக்ஸர்களே இல்லாத நிலையில், கடைசி ஐந்து ஓவர்களில் மட்டும் 7 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. மில்லர் 2, உனத்கட் ஒரு சிக்ஸர் அடிக்கவே, மோரிஸ் அடித்தது மட்டும் 4 சிக்ஸர்கள். பெங்களூர் அணிக்கெதிரான போட்டியில் சஞ்சு சாம்ஸன் முக்கியமான கட்டத்தில் மோரிஸுக்கு சிங்கிள் மறுத்திருந்தார்.
அந்த போட்டியில் இறுதிவரை சென்று நூழிலையில் வெற்றியைத் தவறவிட்ட நினைவு ராஜஸ்தான் ரசிகர்களுக்கு இந்தப் போட்டியிலும் வந்து போயிருக்கலாம். கடைசி ஓவரில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவை என்ற நிலையில், முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்த மோரிஸ், அடுத்த பந்தை சிக்ஸருக்கு அனுப்பினார். டாம் கரண் வீசிய மூன்றாவது பந்து டாட் பாலாகவே, நான்காவது பந்தை சிக்ஸராக்கி ராஜஸ்தான் வென்றது. 18 பந்துகளைச் சந்தித்திருந்த மோரிஸ் 4 சிக்ஸர்களோடு 36 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.Photo Credits - BCCI
0 Comments