வீரர்களின் ஊதியமும் அதிகம் என்பதால், ஐபிஎல் தொடரில் விளையாட முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பலரும் ஆர்வம் காட்டுவதுண்டு. பதிமூன்று சீசன்களைக் கடந்திருக்கும் ஐபிஎல் தொடரில் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. அந்தவகையில், இதுவரையிலான ஐபிஎல் தொடர்களில் டாப் 5 சர்ச்சைகளைப் பார்க்கலாம்.
-
1 ஸ்பாட் பிக்சிங்
2013 ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் 3 பேர் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ராஜஸ்தான் வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சடீலா, அங்கித் சவான் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர். சி.எஸ்.கே நிர்வாகியும் உரிமையாளர் சீனிவாசனின் மருமகனுமான குருநாத் மெய்யப்பனும் 2013 மே 24-ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் 3 வீரர்களும் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
-
2 ஹர்பஜன் - ஸ்ரீசாந்த் மோதல்
ஐபிஎல் தொடரின் முதல் சீசனான 2008-ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய போட்டியை ரசிகர்கள் அவ்வளவு எளிதாக மறந்திருக்க முடியாது. மும்பை இந்தியன்ஸ் கேப்டனான ஹர்பஜன் - கிங்ஸ் லெவன் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் இடையே நடந்த மோதல்தான் அந்த சீசனின் ஹைலைட். கிங்ஸ் லெவன் பஞ்சாப் வென்ற அந்தப் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசிய ஸ்ரீசாந்த், ஹர்பஜன் உள்பட மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் குறித்து கமெண்டடித்துக் கொண்டிருந்தார். போட்டி முடிந்து வீரர்கள் கைகுலுக்கிக் கொண்டிருந்தபோது, ஸ்ரீசாந்தை கன்னத்தில் அறைந்ததாக ஹர்பஜன் மீது குற்றம்சாட்டப்பட்டது. பின்னர் இந்த விவகாரம் குறித்து இருவரும் சமரசமாக்கிக் கொண்டிருந்தாலும், கண்ணீருடன் மைதானத்தில் இருந்து ஸ்ரீசாந்த் வெளியேறிய போட்டோ வைரலானது.
-
3 ஷாருக்கானின் அத்துமீறல்
2012 ஐபிஎல் சீசனின் மும்பை - கொல்கத்தா அணிகள் மோதிய போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. அப்போது, கொல்கத்தா அணியின் உரிமையாளரான பாலிவுட் நடிகர் ஷாருக்கான் குடித்துவிட்டு வந்து மைதான ஊழியர்களிடம் அத்துமீறியதாகப் புகார் எழுந்தது. குறிப்பாக மும்பை வான்கடே மைதான ஊழியர் விகாஸ் டால்வியை ஆபாசமாகத் திட்டியதாக ஷாருக்கான் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்ட ஷாருக்கானுக்கு, வான்கடேவுக்குள் நுழைய 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. பின்னர் அந்தத் தடை 2015-ல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
-
4 அஷ்வினின் மன்கட்
2019 ஐபிஎல் சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லரை சர்ச்சைக்குரிய முறையில் மன்கட் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. அந்தப் போட்டியின்போது அஸ்வின் பந்துவீசுவதற்கு முன்பே ஜோஸ் பட்லர் கிரீஸை விட்டு வெளியேறுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். சில முறை எச்சரிக்கை செய்து பந்துவீசுவதை நிறுத்திய அஸ்வின், ஒருமுறை கிரீஸுக்கு வெளியே பட்லர் நின்றுகொண்டிருந்தபோதை மன்கட் செய்து அவரை ஆட்டமிழக்கச் செய்தார். பட்லர் ஆட்டமிழந்தபின்னர் ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் கேப்டனான அஸ்வினின் செயல் சர்ச்சையானாலும், அது கிரிக்கெட் விதிகளுக்கு உட்பட்டதுதான் என சகவீரர்கள் பலரும் ஆதரவும் தெரிவித்தனர்.
-
5 கேப்டன் கூலின் நாட் கூல் மொமண்ட்
2019 ஐபிஎல் தொடரின் மற்றொரு சர்ச்சை இது. பொதுவாக மைதானத்தில் எந்தவொரு உணர்ச்சியையும் வெளிப்படுத்தாத கேப்டன் கூலாகக் கருதப்படும் தோனி உணர்ச்சிவயப்பட்ட அரிதான தருணம் இது. சி.எஸ்.கே - ராஜஸ்தான் ராயல்ஸ் இடையிலான போட்டியின் கடைசி ஓவர் அது. 3 பந்துகளில் 8 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் சி.எஸ்.கே இருந்தது. பென் ஸ்டோக்ஸ் வீசிய ஃபுல் டாஸை நோ பால் என்று நடுவர் உல்ஹாஸ் காந்தே அறிவித்தார். பின்னர், லெக் அம்பயர் புரூஸ் ஆக்ஸன்போர்டிடம் கலந்தாலோசித்து அது நோ பால் இல்லை என்று அறிவித்தார். இதனால், உணர்ச்சிவசப்பட்ட சி.எஸ்.கே கேப்டன் தோனி, மைதானத்துக்குள் நுழைந்து நடுவர்களிடம் கேள்வி எழுப்பினார். இதனால், போட்டி சிறிதுநேரம் தடைபட்டது. அந்தப் போட்டியின் கடைசி பந்தில் சாண்ட்னர் பவுண்டரி அடித்து சி.எஸ்.கேவை வெற்றிபெற வைத்தார். நடுவர்களிடம் வாக்குவாதம் செய்த தோனிக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 50 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டது.
0 Comments