ஐபிஎல் 2022 சீசனில் நடப்பு சாம்பியனான CSK, 6 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. இன்னும் 6 போட்டிகள் மீதமிருக்கும் நிலையில், அந்த அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு எப்படியிருக்கிறது?
ஐபிஎல் 2022
நடப்பு சாம்பியனான CSK, நேற்று நடந்த பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதனால், இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் ஆறாவது தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் 9-வது இடத்தில் இருக்கிறது சி.எஸ்.கே. இன்னும் 6 போட்டிகள் மீதமிருக்கும் நிலையில், சி.எஸ்.கேவால் பிளே ஆஃபுக்குத் தகுதி பெற முடியுமா?
CSK-வின் வாய்ப்புகள்!
இதற்கு முந்தைய சீசன்களில் 14 புள்ளிகளைப் பெற்றிருந்தாலே, பிளே ஆஃபுக்குத் தகுதிபெற பிரகாசமான வாய்ப்புகள் இருக்கும். ஆனால், இந்த வரிசையில் புதிதாக இரண்டு அணிகள் இணைந்திருப்பதால், 14-க்கும் அதிகமான புள்ளிகளைப் பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் ரேஸில் இருக்க முடியும் என்கிற நிலை. தற்போதைய நிலையில், இரண்டு வெற்றிகள் மூலம் 4 புள்ளிகளை மட்டுமே பெற்றிருக்கும் சி.எஸ்.கே, மீதமிருக்கும் ஆறு போட்டிகளையும் கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் இருக்கிறது. அப்படி வெல்லும்பட்சத்தில் சி.எஸ்.கே-வின் பிளே ஆஃப் நம்பிக்கை கலைந்துபோகாமல் இருக்கும். ஒருவேளை புள்ளிகள் அடிப்படையில் பிரச்னை ஏற்பட்டால், நெட் ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆஃப் சுற்றுக்கான அணி தேர்வாகும். அப்படிப் பார்த்தால், சி.எஸ்.கேவின் தற்போதைய நெட் ரன் ரேட் -0.538. இதையும் உயர்த்திக் கொள்ள வேண்டும்.
ஏப்ரல் 25 (சிஎஸ்கே Vs பஞ்சாப் போட்டிக்கு முடிவுக்குப் பிறகு) நிலவரப்படி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் (7 போட்டிகள்,6 வெற்றி – 12 புள்ளிகள்) மற்றும் அதற்கடுத்த இரண்டு இடங்களில் இருக்கும் எஸ்.ஆர்.ஹெச் (7 போட்டிகள்,5 வெற்றி – 10 புள்ளிகள்), ராஜஸ்தான் ராயல்ஸ் (7 போட்டிகள்,5 வெற்றி – 10 புள்ளிகள்) அணிகள் முதல் மூன்று இடங்களைப் பிடித்திருக்கின்றன. நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் இருக்கும் லக்னோ மற்றும் ஆர்.சி.பி ஆகிய அணிகள் 8 போட்டிகளில் 5 வெற்றிகளைப் பதிவு செய்திருக்கின்றன. பஞ்சாப் அணி 4 வெற்றிகளையும், டெல்லி, கொல்கத்தா ஆகிய அணிகள் தலா மூன்று வெற்றிகளையும் பதிவு செய்திருக்கின்றன.
மொத்தத்தில் சி.எஸ்.கே பிளே ஆஃபுக்குத் தகுதி பெற வேண்டுமெனில் 16 புள்ளிகளோடு ஆரோக்கியமான நெட் ரன் ரேட்டும் அவசியம்.
Also Read –