Uncapped Players

IPL Retention 2022: உம்ரான் மாலிக் டு யாஷ்வி ஜெய்ஸ்வால் – கவனம் ஈர்த்த 4 Uncapped Players!

2022 ஐபிஎல் தொடரில் புதிதாக இரண்டு அணிகள் பங்கேற்கும் நிலையில், தற்போதிருக்கும் 8 அணிகளும் தக்கவைத்துக் கொண்ட வீரர்கள் பட்டியல் வெளியாகியிருக்கிறது. இந்திய அணிக்காக விளையாடாத வீரர்கள் சிலரும் ரீடென்ஷனில் கவனம் ஈர்த்திருக்கிறார்கள்.

ஐபிஎல் ரீடென்ஷனில் கவனம் ஈர்த்த 4 Uncapped Players!

ஐபிஎல் தொடரில் இப்போது இருக்கும் 8 அணிகளும் சில மூத்த வீரர்களை விட சர்வதேச போட்டிகளில் விளையாடாத இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன. அப்படியான 4 இளம் வீரர்கள்…

யாஷ்வி ஜெய்ஸ்வால் (ராஜஸ்தான் ராயல்ஸ்)

யாஷ்வி ஜெய்ஸ்வால்
யாஷ்வி ஜெய்ஸ்வால்

2020 ஜூனியர் உலகக் கோப்பையின் தொடர் நாயகனாக ஜொலித்த இந்த இடது கை பேட்ஸ்மேனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ரூ.2.40 கோடிக்கு ஏலம் எடுத்தது. 2021 சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யாஷ்வியை ராஜஸ்தான் அணி, ரூ.4 கோடிக்குத் தக்கவைத்துக் கொண்டது. இங்கிலாந்து ஆல்ரவுண்டர்களான பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோரை அந்த அணி விடுவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அப்துல் சமத் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)

அப்துல் சமத்
அப்துல் சமத்

உள்ளூர் கிரிக்கெட்டில் ஜம்மு காஷ்மீர் அணிக்காக பல சிறப்பான இன்னிங்ஸ்கள் விளையாடி கவனம் ஈர்த்த 20 வயது அப்துல் சமத்தைக் கடந்த 2020 சீசனுக்கு முன்னதாக ஹைதராபாத் அணி ஏலம் எடுத்தது. அவருக்கு ஐபிஎல் தொடரில் பிளேயிங் லெவனில் போதிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இருப்பினும், கிடைத்த வாய்ப்புகளில் தனது திறமையை நிரூபித்தார். இதனாலேயே, வார்னரை விடுவித்திருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, அப்துல் சமத்தைத் தக்கவைத்துக் கொண்டது.

அர்ஷ்தீப் சிங் (பஞ்சாப் கிங்ஸ்)

அர்ஷ்தீப் சிங்
அர்ஷ்தீப் சிங்

மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப், கடந்த 2018-ல் ஜூனியர் உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றிருந்தார். அதன்பின்னர், பஞ்சாப் அணியில் இடம்பிடித்த அர்ஷ்தீப் அறிமுகமான முதல் சீசனிலேயே அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இரண்டாமிடம் பிடித்தார். சமீபத்தில் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியோடு நெட் பௌலராகப் பயணித்திருந்தார். ஆனால், இந்திய அணிக்காகக் களமிறங்க வேண்டும் என்ற அவரது கனவு இதுவரை நனவாகவில்லை. தொடர்ந்து 3 சீசன்களாக பஞ்சாப்போடு பயணித்து வரும் அர்ஷ்தீப்பை அந்த அணி தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.

உம்ரான் மாலிக் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)

உம்ரான் மாலிக்
உம்ரான் மாலிக்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் கடந்த ஆண்டு வாங்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் வீரர் உம்ரான் மாலிக், அறிமுகமான முதல் போட்டியிலேயே 150 கி.மீ வேகத்துக்கு மேல் பந்துவீசி அசத்தினார். ஆர்சிபிக்கு எதிரான முதல் போட்டியில் தொடர்ச்சியாக 5 பந்துகளை அந்த வேகத்தில் வீசிய உம்ரானை ஐபிஎல் இருகரம் கூப்பி வரவேற்றது. கொரோனா பாதித்த நடராஜனுக்கு மாற்றுவீரராக இவரைக் கொண்டுவந்திருந்தது சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம். இந்த வேகப்புயலை 4 கோடி ரூபாய்க்குத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது அந்த அணி.

Also Read – IPL 2022 Retention: 4 அணிகளுக்கு புதிய கேப்டன்; ஏலத்துக்குப் போகும் ராகுல், ரஷீத் – ஐபிஎல் ரீடென்ஷன் ஹைலைட்ஸ்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top