வொயிட் பால் கிரிக்கெட்டில் கேப்டனாக விராட் கோலியின் அத்தியாயம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வந்திருக்கிறது. ரோஹித் ஷர்மாவின் டேக்டிக்கல் கேப்டன்ஷிப், அவரை தலைவனாக்கியிருக்கிறது. இவர்கள் இரண்டு பேரின் கேப்டன்ஷிப் இடையே இருக்கும் முக்கியமான வித்தியாசம்… அடிலெய்டு டெஸ்டில் 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன ஒரு டீமை எழுச்சியுடன் வழிநடத்தி தொடரை வென்ற ரஹானே கேப்டன்ஷிப் சொல்லும் சேதி தெரியுமா… இந்த 3 கேப்டன்களும் தங்கள் டீமை எப்படி வழி நடத்துகிறார்கள்… வாங்க தெரிஞ்சுக்கலாம்.
இந்திய அணியைப் பொறுத்தவரை ஸ்பிளிட் கேப்டன்ஷிப் எனப்படும் ஒவ்வொரு ஃபார்மேட்டுக்கும் ஒரு கேப்டன் என்ற ஃபார்முலா ரொம்ப நாள் நீடிச்சதில்லைன்றதுதான் வரலாறு. மிகப்பெரிய வெற்றியைப் பதிவு பண்ணினாலும், கன்சிஸ்டன்சி இல்லாட்டி இந்திய கிரிக்கெட்டில் நீடிக்க முடியாது என்பதற்கு பல உதாரணங்கள் சொல்லலாம். இந்திய கிரிக்கெட்டுக்கு 1983-ல் உலகக் கோப்பையை ஜெயிச்சுக் கொடுத்த ஒரு வருஷத்துக்குள்ள கபில்தேவ், கேப்டன்சியை உதற வேண்டிய நிலை வந்துச்சு. லிட்டில் மாஸ்டர்னு கொண்டாடப்படுற கவாஸ்கர் 1985 வேர்ல்டு சாம்பியன்ஷிப்பை வென்ற கையோடு கேப்டன் பொறுப்பில் இருந்து வெளியேறினார். கங்குலியும் கேப்டன்சிக்கு முறையாக குட்பை சொல்லவில்லை. டி20, ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி, ஒருநாள் உலகக் கோப்பை என மூன்று ஐசிசி கோப்பைகளை வென்றிருந்த தோனிக்கும் பிசிசிஐ அழுத்தம் கொடுத்ததைத்தான் நாம் பார்த்தோம். வொயிட் பால் கேப்டன்சியில் மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் எழுந்ததை கோலியால் புரிந்துகொள்ள முடியாமல் போய்விட்டது.
டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு அந்த ஃபார்மேட்டில் கேப்டனாகத் தொடர விரும்பவில்லை என்ற முடிவை கோலி எடுத்திருந்தாலும், 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடக்க இருக்கும் நிலையில், அதில் கேப்டனாகத் தொடரவே கோலி விரும்பியிருக்கிறார். ஆனால், பிசிசிஐ-யின் முடிவு வேறாக இருந்திருக்கிறது. தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய டி20, ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்ட நிலையில், டெஸ்டில் விராட் கோலி தலைமையில் இந்தியா விளையாடுகிறது. டெஸ்ட் அணியில் முக்கியமான இன்னொரு மாற்றம் துணை கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டது. 2021 தொடக்கத்தில் நடந்த ஆஸ்திரேலியா தொடரில் 0-1 என்று பின்தங்கியிருந்த இந்திய அணி, இரண்டாவது போட்டியில் இருந்து வழிநடத்திய ரஹானே அணியில் இருந்தும் பிசிசிஐ இந்த முடிவை எடுத்தது பலரது புருவங்களை உயர்த்தியது.
கேப்டன்சியைப் பொறுத்தவரை விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ரஹானேவின் ஸ்டைல் எப்படி… 3 பாயிண்ட்களில் தெரிஞ்சுக்கலாம் வாங்க..!
விராட் கோலி, ரோஹித் ஷர்மா மற்றும் அஜிங்கியா ரஹானே என்ற 3 கேப்டன்களின் கேப்டன்ஷிப் ஸ்டைல்களைப் பற்றி ஒரே ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் முறையே, புயல், செயல், அமைதியோ அமைதி என்ற வார்த்தைகளில் சொல்லலாம்.
நம்பிக்கை
ஒவ்வொரு கேப்டனும் தங்களது வீரர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை என்பது தடுமாறும்போதும் அவர்களுக்குக் கொடுக்கும் வாய்ப்பின் மீது கட்டமைக்கப்படுவது. இந்த விவகாரத்தில் விராட் கோலியைப் பொறுத்தவரை இன்ஸ்டண்ட் நூடூல்ஸ் போல ரிசல்டும் உடனடியாக வேண்டும் என்பதுதான், அவருடைய தாட் புராசஸாக இருக்கும். உதாரணமாக, 2017-ல் டெஸ்ட் கேப்டன் பொறுப்பேற்ற விராட் கோலி, கேப்டனாக விளையாடிய முதல் 38 டெஸ்டுகளில் பிளேயிங் லெவனில் குறைந்தது ஒரு மாற்றத்தையாவது கொண்டு வந்திருந்தார் என்ற புள்ளிவிவரம் சொல்லிவிடும் நமக்கு அவரைப் பற்றி. கோலி – ரவிசாஸ்திரி கூட்டணி, ஒவ்வொரு மேட்சுக்கும் ஏற்றபடியாக வீரர்களைத் தேர்வு செய்யும் என்பது பற்றி `Horses for Courses’ என்ற புதிய வார்த்தைப் பிரயோகமே பயன்படுத்தப்பட்டது.
ஆனால், ரோஹித் ஷர்மா, ரஹானே இதில் கொஞ்சம் மாற்றுக் கருத்துடையவர்கள். கேமோட முடிவு எப்படி வேணா இருக்கலாம், ஆனா முதல்ல ஒரு பிளேயரை நம்பிக்கையுள்ளவரா உருவாக்கணும். அப்படியான பிளேயர்கள் நம்மளை வெற்றியை நோக்கி கூட்டிட்டுப் போவாங்க – இதுதான் ரோஹித்தோட கான்செப்ட். ரோஹித் கேப்டன்சியில இந்தியா இலங்கையில நடந்த நிதாஹஸ் டிராஃபி, 2018 ஆசியக் கோப்பைனு ரெண்டு கப் அடிச்சிருக்கு. இந்த இரண்டு தொடர்களிலிலுமே பிளேயர்ஸ் மேல நம்பிக்கை வைச்சு, அவங்களுக்குத் தொடர்ந்து வாய்ப்புக் கொடுத்தார் ரோஹித். அம்பாதி ராயுடு, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக்னு மிடில் ஆர்டர் பெரும்பாலும் மாறாமலேயே பார்த்துக்கிட்டார். கத்துக்குட்டி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மட்டுமே எல்லாருக்கும் வாய்ப்புக் கொடுக்கணுமேனு பிளேயிங் லெவன்ல சேஞ்ச் இருந்துச்சு. ரோஹித்தோட இந்த ஸ்ட்ரேட்டஜி அவருக்குக் கை கொடுக்கவும் செஞ்சது. காயத்தோட விளையாடுன கேதர் ஜாதவ் ஒருகட்டத்துல இந்தியா வெற்றிபெற முக்கியமான காரணமா இருந்தார். நிதாஹஸ் டிராஃபி ஃபைனல்ல தினேஷ் கார்த்திக்கோட மிரட்டல் பேட்டிங்கை இன்னும் நிறைய பேரு மறந்திருக்க மாட்டாங்க. ஒவ்வொரு பிளேயர் மேலயும் அவங்க வைச்சிருக்க நம்பிக்கையை விட அதிகமா வைச்சு, மேட்ச் வின்னரா அவங்களை மாத்தணும்ன்றது ரோஹித்தோட வொர்க்கிங் ஸ்டைல்.
ரஹானேவைப் பொறுத்தவரை ரோஹித்தோட பிளானுக்குக் கொஞ்சம் நெருக்கமானதுதான் அவரோட ஸ்டைலும். பிளேயிங் லெவனில் அதிகம் மாற்றம் கொண்டு வருவதை விரும்பாதவர். கடந்த ஐந்து ஆண்டுகளில் விராட் கோலி இல்லாத நிலையில், பெரும்பாலும் டெஸ்ட் போட்டிகளில் ரஹானேவும் ஒருநாள், டி20-களில் ரோஹித்தும் கேப்டனாக இருந்திருக்கிறார்கள். ரஹானே இதுவரை 3 ஒருநாள், 2 டி20 போட்டிகளில் மட்டுமே கேப்டனாகச் செயல்பட்டிருக்கிறார்.
ஸ்டார்டம் கேப்டன்சி
விராட் கோலி கேப்டனாக விளையாடுகிறார் என்றால், மீடியாக்கள் தொடங்கி ரசிகர்கள் ஃபோகஸ் வரை அவரைச் சுற்றியே இருக்கும். ஆஸ்திரேலியாவானாலும் சரி, இங்கிலாந்தாக இருந்தாலும் சரி, ஏன் இந்தியாவில் விளையாடினாலும் சரி, விவாதங்களும் விமர்சனங்களும் அவரைச் சுற்றியே கட்டமைக்கப்படும். களத்தில் ஒவ்வொரு விக்கெட் விழும்போதும் விராட் கோலியின் ஆக்ரோஷமாக ரியாக்ஷனை எல்லா சேனல்களும் மறக்காமல் லைவ் ரிலேவில் காட்டும். களத்தில் ஆக்ரோஷமாகச் செயல்படுவது அவரது இயற்கையான குணம். `எனது பவுலிங்கில் ஒரு விக்கெட் விழுந்தபோது என்னைவிட அதிகமாகவே விராட் கோலி கொண்டாடிவிடுவார். ஒருமுறை அவரிடமே, இதை விளையாட்டாகவே கேட்டிருக்கிறேன்’ என்று ஷமி ஒரு பேட்டியில் பகிர்ந்திருப்பார். காரணம், விராட் கோலியின் கேப்டன்சியைச் சுற்றி எழுப்பப்பட்டிருக்கும் ஸ்டார்டம்.
Also Read:
ஆனால், ரோஹித், ரஹானே ஆகியோரின் கேப்டன்சியில் அவர்களைத் தாண்டி பவுலிங், பேட்டிங்கில் சிறப்பாகச் செயல்படுபவர்கள் அந்தந்த நேரத்தில் கவனம் ஈர்ப்பர். மும்பை இந்தியன்ஸ் டீமின் கேப்டனாக ரோஹித் பொறுப்பேற்ற பின்னரே, ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷான், ராகுல் சஹார் போன்றோரின் எழுச்சி சாத்தியமானது. அதேபோல்தான், ஆஸ்திரேலியாவில் இந்திய அணியின் வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியை ரஹானே கேப்டன்சிக்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம். பேட்டிங், பவுலிங்கின்போது புஜாரா, ஸ்ரதுல் தாக்குர், அஷ்வின், விஹாரி என ஒவ்வொரு செஷனிலும் ஒரு சென்சேஷனைப் பல வீரர்கள் தங்களது களமாக்கிக் கொண்டு வெற்றிக்காக உழைத்தனர்.
கப்பு முக்கியம் பிகிலு!
ஒருநாள், டி20 போட்டிகளைப் பொறுத்தவரை இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலியின் ரெக்கார்டுகள் சக்ஸஸ்ஃபுல்லானவை. 95 ஒருநாள் போட்டிகளில் 65-ல் வெற்றி, 45 டி20 போட்டிகளில் 27-ல் வெற்றி – இது கோலியின் ரெக்கார்டு. ஆனால், வொயிட் பால் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை சக்ஸஸ் என்பது எத்தனை ஐசிசி கோப்பைகளை வென்றிருக்கிறார் என்ற அளவுகோலை வைத்தே அளக்கப்படுகிறது. அந்தவகையில், விராட் கோலி கேப்டன்சியில் இந்தியா ஒரு ஐசிசி கோப்பையைக் கூட வெல்லவில்லை. அதிகபட்சமாக, 2017 ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி இறுதிப் போட்டி வரையிலும், 2019 ஒருநாள் உலகக் கோப்பையில் அரையிறுதி வரையிலும் இந்திய அணி சென்றது. சமீபத்தில் நடந்த டி20 உலகக் கோப்பையில் அரையிறுதிக்குத் தகுதிபெறாமலேயே வெளியேற வேண்டிய நிலை. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிலும் அவருக்கு நேரம் கைகூடவில்லை. ஐபிஎல் தொடரிலும் ஒருமுறை கூட கோப்பையை ஏந்தாமல், ஆர்.சி.பி கேப்டன்சியில் இருந்து விலகியிருக்கிறார் கோலி.
ரோஹித்தைப் பொறுத்தவரை இந்திய அணியின் கேப்டனாக இரண்டு கோப்பைகளை வென்றிருக்கிறார். ஒன்று இலங்கையில் நடந்த 3 நாடுகள் கலந்துகொண்ட நிதாஹஸ் கோப்பை, 2018 ஆசியக் கோப்பை தொடர். ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை ஐந்து முறை டைட்டில் வின்னரான மும்பை இந்தியன்ஸை வழிநடத்திய வெற்றிகரமான கேப்டனாக இருக்கிறார் ரோஹித் ஷர்மா. ரஹானேவைப் பொறுத்தவரை, 2021 தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில் 2-1 என்ற கணக்கில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது முக்கியமான மைல்கல்.
Also Read – விராட் கோலி – ரோஹித் ஷர்மா இடையே பிரச்னையா… முதல்முறையாக மனம்திறந்த ரவிசாஸ்திரி!
Muchas gracias. ?Como puedo iniciar sesion?