சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஐபிஎல் 2021 சீசனின் முதல் போட்டியில் விராட் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, ரோஹித் ஷர்மாவின் மும்பை இந்தியன்ஸ் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
#MIvsRCB – மிஸ் பண்ணக் கூடாத 8 விஷயங்கள்!
-
1 மும்பை சோகம்
மும்பை இந்தியன்ஸ் அணி 2013 சீசன் முதல் தொடர்ச்சியாக ஒன்பதாவது முறையாக ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியிருக்கிறது. இதற்கு முன்னர் 2012 சீசனில் மும்பை இந்தியன்ஸ் முதல் போட்டியை வென்றிருந்தது.
-
2 கடைசி ஓவர் சாதனை
ஆர்.சி.பி வீரர் ஹர்ஷல் படேல் வீசிய இருபதாவது ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து ஒரு ரன்னை மட்டுமே எடுத்தது. ஐபிஎல் வரலாற்றில் கடைசி ஓவரில் ஒரு ரன் எடுக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்னர் டேல் ஸ்டெயின், பிரவீன் குமார் ஆகியோர் இந்த சாதனையைப் படைத்திருக்கிறார்கள். அந்த இரண்டுமே 2008 சீசனில் நடந்த சம்பவங்கள்.
-
3 மேக்ஸ்வெல்
ஐபிஎல் தொடரின் 2018 சீசனுக்குப் பின்னர் இந்தப் போட்டியில் மேக்ஸ்வெல் சிக்ஸர் அடித்தார். 2019 ஐபிஎல் போட்டியில் அவர் விளையாடாத நிலையில், 2020 ஐபிஎல் சீசனில் ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை. அதிரடிக்குப் பெயர்போன மேக்ஸ்வெல் சிக்ஸரே அடிக்காமல் ஐபிஎல்-லில் 171 பந்துகளைச் சந்தித்திருந்தார்.
-
4 ஹர்ஷல் படேல்
மும்பை இன்னிங்ஸ் 159 ரன்களுக்குள் முடிய ஆர்.சி.பி-யின் ஹர்ஷல் படேல் முக்கிய காரணம். 16-வது ஓவரின் கடைசி பந்தில் முதல் விக்கெட்டை எடுத்த ஹர்ஷல் படேல், 20 ஓவர்கள் முடிவில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2021 ஐபிஎல் சீசனின் முதல் ஐந்து விக்கெட் ஹால் இதுவே.
அதேபோல், மும்பை அணிக்கெதிராக முதல் ஃபைபர் எடுத்த வீரர் என்ற சாதனைக்கும் ஹர்ஷல் படேல் சொந்தக்காரர் ஆனார். இதற்கு முன்பாக மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக பெஸ்ட் பௌலிங் வைத்திருந்தவர் இப்போதைய கேப்டன் ரோஹித் ஷர்மா. 2009 சீசனில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக மும்பைக்கு எதிராக விளையாடிய ரோஹித் ஷர்மா 6 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.
-
5 கோலி ஹேப்பி அண்ணாச்சி
இந்தப் போட்டியில் கேப்டனாக 6,000 ரன்களைக் கடந்த விராட் கோலி, இந்த சாதனையைப் படைத்த முதல் ஐபிஎல் கேப்டன் ஆனார். 29 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த கோலி, சேஸிங்கில் 2,753 ரன்களைச் சேர்த்திருக்கிறார். இதன்மூலம், சேஸிங்கில் அதிக ரன்கள் குவித்த ராபின் உத்தப்பா (2724) சாதனையை அவர் முறியடித்தார்.
-
6 ஆர்சி.பியின் சேப்பாக்கம் ராசி
ஐபிஎல் சீசனின் முதல் போட்டியை 2011-க்குப் பிறகு ஆர்.சி.பி வென்றிருக்கிறது. இதற்கு முன்பாக 3 முறை சீசன் ஓபனரில் விளையாடியிருக்கும் ஆர்.சி.பி, அந்த மூன்று போட்டிகளிலுமே தோல்வியையே தழுவியிருந்தது. அதேபோல், மும்பை அணிக்கெதிராக சென்னை சேப்பாக்கத்தில் தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் தோற்றிருந்த நிலையில், அதற்கும் ஆர்.சி.பி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.
-
7 டிவிலியர்ஸ்
எப்போதெல்லாம் டீம் தத்தளித்துக் கொண்டிருக்கிறதோ, அப்போதெல்லாம் ஆபத்பாந்தவன் அவதாரம் எடுக்கும் டிவிலியர்ஸ் இந்தப் போட்டியிலும் ஆர்.சி.பியைக் கரை சேர்த்திருக்கிறார்.
160 ரன்கள் டார்கெட்டை நோக்கி ஓடிய ஆர்.சி.பி, 15 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களுடன் தடுமாறிக் கொண்டிருந்த சூழலை டிவிலியர்ஸின் அதிரடி மாற்றியது. அவர் 27 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்தார். கடைசி ஓவரின் 4வது பந்தில் டிவிலியர்ஸ் ரன் அவுட் ஆகும்போது, கடைசி 2 பந்துகளில் 2 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற நிலையில் ஆர்.சி.பி இருந்தது. முகமது சிராஜ் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் அடுத்த இரண்டு பந்துகளில் இரண்டு ரன்களை எடுத்து ஆர்.சி.பி-யை வெற்றிபெற வைத்தனர்.
-
8 சாஹல்
ஆர்.சி.பி வீரர் யுஸ்வேந்திர சாஹலுக்கு இது நூறாவது ஐபிஎல் போட்டியாகும். இந்தப் போட்டி அவருக்கு சிறப்பானதாக அமையவில்லை. 4 ஓவர்கள் வீசி 41 ரன்களை விட்டுக்கொடுத்த சாஹல், தனது நூறாவது ஐபிஎல் போட்டியில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.
0 Comments