ஷிவம் துபே

ஓவர் வெயிட் கிரிக்கெட்டர் டு சி.எஸ்.கேவின் சூப்பர் ஆல்ரவுண்டர் – ஷிவம் துபேவின் கதை!

14 வயதில் ஓவர் வெயிட் என கிரிக்கெட்டை விட்டே ஒதுங்கிய நிலையில், 19 வயது திரும்ப வந்துட்டேன்னு சொல்லு என கம்பேக் கொடுத்து ஷிவம் துபே சாதித்தது எப்படி?… ஷிவம் துபேவுக்கும் சென்னைக்குமான கனெக்‌ஷன் தெரியுமா… இந்த வீடியோவுல நாம பார்க்கப்போறது சி.எஸ்.கே ஆல்ரவுண்டர் ஷிவம் துபே பற்றிதாங்க…

ஷிவம் துபே

Shivam Dube
Shivam Dube

2018 மார்ச்சில் நடந்த மும்பை டி20 லீக்கில் பிரவீன் தாம்பே வீசிய ஓவரில் ஐந்து சிக்ஸர்களைப் பறக்கவிட்ட இளைஞரை மும்பை கிரிக்கெட் உலகம் வித்தியாசமாகப் பார்த்தது. அதே ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி ஷிவம் துபே வாழ்வில் மறக்க முடியாத நாளாக மாறிப்போனது. பரோடாவுக்கெதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் மும்பைக்காக விளையாடிய துபே, கடைசி நாளில் செஞ்சது தரமான சம்பவம். லெஃப்ட் ஆர்ம் ஸ்பின்னரான ஸ்வப்னில் சிங் வீசிய ஒரே ஓவரில் தொடர்ச்சியாக ஐந்து சிக்ஸர்களை விளாசி, கிரிக்கெட் உலகின் கவனத்தைத் தன்பக்கம் திருப்பினார். 2019 ஐபிஎல் சீசனுக்கான வீரர்கள் ஏலம் அதற்கடுத்த நாள் ஜெய்ப்பூரில் நடக்க இருந்தது. அந்த நாள் அவரது வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தவே, அடுத்த நாள் ஏலத்தில் ஆர்.சி.பியால் 5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். இதையடுத்து யாருப்பா இந்தப் பையன்னு கிரிக்கெட் வீரர்கள், விமர்சகர்கள் தொடங்கி ரசிகர்கள் வரை கேள்வி எழுப்பத் தொடங்கியிருந்தனர்.

யார் இந்த ஷிவம் துபே?

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 1993-ம் ஆண்டு ஜூன் 26-ம் தேதி பிறந்தவர் ஷிவம் துபே. ஆறு வயதிலேயே மும்பை அந்தேரி பகுதியில் இருக்கும் சந்திரகாந்த் பாட்டீல் பயிற்சி அகாடமியில் கிரிக்கெட் கற்றுக்கொள்ளத் தொடங்கியவருக்கு, 14 வயதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டது. உடல் எடை அதிகரிப்பால் அவதிப்பட்டு வந்த அவரின் குடும்பத்தில் பொருளாதாரரீதியாக சிக்கல் ஏற்படவே, மனதுக்குப் பிடித்த கிரிக்கெட் கிரவுண்டை விட்டே 5 ஆண்டுகள் வெளியே இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஐந்து ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர், தனது 19 வயதில் மாமா ரமேஷ் துபே, சகோதரர் ராஜீவ் துபே உதவியோடு கிரிக்கெட் கிரவுண்டுக்குத் திரும்பிய துபே, அடுத்தடுத்து காட்டியது மாஸ் முகம்.

Shivam Dube
Shivam Dube

கிளப் கிரிக்கெட்டால் வளர்த்தெடுக்கப்பட்டவர் துபே. எம்.பி.எல் தொடருக்கு முன்பு மும்பையின் முக்கியமான டி20 தொடராக இருந்த Mitsui Shoji T20 League தொடரில் அவர் காட்டிய பெர்ஃபாமன்ஸ், மும்பை அண்டர் 23 அணியில் அவருக்கான இடத்தை உறுதி செய்தது. கிளப் கிரிக்கெட் நாட்களில் ஷிவம் துபே என்றால், சிக்ஸர் அடிக்கும் மிஷின் என்றே அடையாளம் காணப்பட்டிருக்கிறார். 2018 ரஞ்சி சீசனில் ஐந்து சிக்ஸர்கள் சம்பவத்துக்குப் பிறகு ஆர்.சி.பியால் ஐந்து கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட பின்னர், 2019 சீசனில் அவருக்குப் பெரிதாக வாய்ப்புக் கிடைக்கவில்லை. 4 போட்டிகளில் 40 ரன்கள் மட்டுமே அந்த சீசனில் அடித்திருந்தார். ஆனால், ஆர்.சி.பி கேம்ப்பில் கிரிக்கெட்டின் இன்டர்நேஷனல் ஸ்டாண்டர்டைக் கற்றுக்கொண்டவர், அடுத்து நடந்த தென்னாப்பிரிக்க ஏ அணிக்கெதிரான தொடரில் இந்திய ஏ அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்தத் தொடரின் 5 போட்டிகளில் அவரின் ஸ்டிரைக் ரேட் 155.7. 2018/19 ரஞ்சி சீசனில் மாஸ் காட்டிய துபேவின் பேட்டிங் ஆவரேஜ் ஒரு கட்டத்தில் 99.50 ஆக இருந்தது. , முதல் 5 போட்டிகள் முடிந்திருந்தபோது, 489 ரன்கள் குவித்ததோடு 17 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியிருந்தார்.

அதன்பிறகு இந்திய அணிக்காக இதுவரை 13 டி20 போட்டிகளிலும் ஒரே ஒரு ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியிருக்கும் ஷிவம் துபே, வசம் டி20 வரலாற்றில் இரண்டாவது மோஸ்ட் எக்ஸ்பென்சிவ் ஓவரை வீசிய பந்துவீச்சாளர் என்கிற ரெக்கார்டும் இருக்கிறது. கடந்த 2020 பிப்ரவரியில் நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இவர் வீசிய ஒரே ஓவரில் 34 ரன்கள் குவிக்கப்பட்டது. 2019, 2020 சீசன்களில் ஆர்.சி.பியில் இருந்த இவர், 2021 சீசனில் ராஜஸ்தானுக்காக விளையாடினார்.

தோனியுடன்
தோனியுடன்

2022 ஐபிஎல் ஏலத்தின்போது, அவருக்கு ஆண் குழந்தை பிறந்த அதே நாளில், அவரை 4 கோடி ரூபாய்க்கு சி.எஸ்.கே ஏலத்தில் எடுத்தது. தோனி போன்ற மிகப்பெரிய வீரர் ஒருவரின் தலைமையின் கீழ் விளையாடுவது மகிழ்ச்சிகரமான விஷயம். எனது குழந்தை பிறந்த அதேநாளில் இந்த சம்பவம் நடந்திருப்பது டபுள் சந்தோஷம் என்று அப்போது கருத்துத் தெரிவித்திருந்தார். இந்த சீசனில் சி.எஸ்.கே பேட்ஸ்மேன்கள் தடுமாறிக் கொண்டிருக்கையில், தனது சிக்ஸர்களால் சி.எஸ்.கே கேம்பைத் தலைநிமிர வைத்திருக்கிறார் இந்த ஆல்ரவுண்டர்.

Also Read – உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் லீக் ஐபிஎல் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரியும்? #Quiz

3 thoughts on “ஓவர் வெயிட் கிரிக்கெட்டர் டு சி.எஸ்.கேவின் சூப்பர் ஆல்ரவுண்டர் – ஷிவம் துபேவின் கதை!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top