Sachin Tendulkar

சச்சின் டெண்டுல்கர் கரியரின் முக்கியமான 7 தருணங்கள்!

கிரிக்கெட் உலகின் ஆல்டைம் சிறந்த பேட்ஸ்மேனாகக் கருதப்படும் சச்சின் டெண்டுல்கர், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். கிரிக்கெட் வரலாற்றில் 30,000 ரன்கள் குவித்த ஒரே வீரர், ஒருநாள் போட்டியில் முதல் இரட்டை சதத்தைப் பதிவு செய்த வீரர் என பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரர். 16 வயதில் தொடங்கிய சச்சினின் சர்வதேச கிரிக்கெட் பயணம் ஏறக்குறைய 24 ஆண்டுகள் நீண்டது. அவர், 2013ம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதி தனது கடைசி போட்டியில் விளையாட இருந்த சில மணி நேரங்களுக்கு முன்பு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.

2021 ஏப்ரல் 24-ம் தேதி 47வது பிறந்தநாளைக் கொண்டாடும் சச்சின் டெண்டுல்கர் கரியரின் முக்கியமான 7 தருணங்கள்

திறக்கப்படாத ஷாம்பெய்ன் பாட்டில்

டீனேஜராகவே இந்திய அணியில் அறிமுகமான சச்சின், முதல் டெஸ்ட் சதத்தை இங்கிலாந்துக்கு எதிராக ஓல்டு டிராஃபோர்ட் மைதானத்தில் அடித்தார். அந்தப் போட்டியில் இங்கிலாந்து வென்றிருந்தாலும், மேன் ஆஃப் தி மேட்சாகத் தேர்வானார். மேன் ஆஃப் தி மேட்சாகத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அளிக்கப்படும் ஷாம்பெய்ன் பாட்டில், அவர் மைனர் என்பதால் திறக்கப்படவில்லை.

ஹீரோ கப் அரையிறுதி

1993-ல் கொல்கத்தாவில் நடந்த தென்னாப்பிரிக்கா அணிக்கெதிரான ஹீரோ கப் அரையிறுதியில் இந்தியா 195 ரன்களில் ஆல் அவுட்டானது. தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில், சச்சின் பந்துவீசினார். 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த அவர், 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வெற்றிபெற வைத்தார். கிரிக்கெட் வரலாற்றில் ரொம்பவும் அரிதாகக் கடைசி ஓவரை வீசியிருந்தார்.

கென்யா – 1999 உலகக் கோப்பை

1999 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா தோற்றது. ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் வென்றாக வேண்டிய நிலையில், சச்சினின் தந்தை இறந்த செய்தி கிடைத்தது. அவர் இல்லாத நிலையில், அந்தப் போட்டியில் இந்தியா தோற்றது. அடுத்த 3 போட்டிகளிலும் வென்றால் மட்டுமே சூப்பர் சிக்ஸ் சுற்றுக்குத் தகுதிபெற முடியும் என்ற நிலை. இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பிய சச்சின், தந்தையின் இறுதிச் சடங்க்குப் பின்னர் கென்யாவுக்கு எதிரான போட்டியில் சதமடித்து அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். அந்தப் போட்டியில் 140 ரன்கள் எடுத்தார்.

நாஸ்வெஸ்ட் டிராஃபி – 2002

இங்கிலாந்துக்கெதிரான 2002 நாட்வெஸ்ட் டிராஃபி போட்டி சச்சின் கரியரில் முக்கியமானது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மிடில் ஆர்டரில் களமிறங்கிய அவர், அப்போதே ஹெலிகாப்டர் ஷாட்டை அறிமுகப்படுத்தினார். டேரன் காஃப் பந்துவீச்சில் இவர் அடித்த சிக்ஸரே, சர்வதேச கிரிக்கெட்டில் ஹெலிகாப்டர் ஷாட்டின் முதல் என்ட்ரி. செஸ்டர் லீ ஸ்ட்ரீட் மைதானத்தில் போட்டியில் நான்காவது வீரராகக் களமிறங்கி சதமடித்தார் சச்சின். அதன்பின்னர் தோனியால் ஹெலிகாப்டர் ஷாட் பேமஸானது.

முதல் இரட்டைச் சதம்

2010ம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்கெதிராக குவாலியரில் நடந்த ஒருநாள் போட்டி சச்சினுக்கு ரொம்பவே ஸ்பெஷலானது. அந்தப் போட்டியில் 25 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் மூலம் 147 பந்துகளில் 200 ரன்களை சச்சின் எடுத்தார். இதன்மூலம் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் முதல் இரட்டை சதமடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

2011 உலகக் கோப்பை

2011ம் ஆண்டு உலகக் கோப்பை சச்சின் விளையாடிய ஆறாவது உலகக் கோப்பை தொடர். அந்தத் தொடரில் கோப்பையை வென்ற தோனி தலைமையிலான இந்திய அணி, அதை சச்சினுக்கு அர்ப்பணித்தது. இறுதிப் போட்டியில் இலங்கையை வென்ற இந்திய அணி வீரர்கள், சச்சினைத் தோளில் சுமந்து மைதானத்தை வலம் வந்தனர். விளையாட்டுத் துறையில் விருது வழங்கி வரும் பெர்லினின் லாரெஸ் விருது விழாவில் மிகவும் சிறந்த விளையாட்டுத் தருணமாக அது தேர்வு செய்யப்பட்டது.

வான்கடே டெஸ்ட்

சச்சினின் இருபத்து நான்காண்டுகள் கிரிக்கெட் கரியரின் கடைசி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் 2013ம் ஆண்டு நவம்பரில் நடந்தது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான அந்தப் போட்டியில் 118 பந்துகள் சந்தித்த சச்சின் 74 ரன்கள் எடுத்தார். இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 126 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அந்தப் போட்டிக்குப் பிறகு வான்கடே பிட்சுக்குச் சென்று தலைகுனிந்து மரியாதை செலுத்தி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார். முன்னதாக 2013 அக்டோபரில் மும்பை அணிக்காக ஹரியானாவுக்கு எதிராகத் தனது கடைசி ரஞ்சி போட்டியில் களமிறங்கிய சச்சினுக்கு ஹரியான வீரர்கள் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தியிருந்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top