தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் வர்ணணையின்போது சாதியைக் குறிப்பிட்டு சி.எஸ்.கே வீரர் சுரேஷ் ரெய்னா பேசியதற்கு எதிராக சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. என்ன நடந்தது?
டி.என்.பி.எல் எனப்படும் தமிழ்நடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் கடந்த 19-ம் தேதி தொடங்கின. முதல் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் – சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியின் வர்ணனையின்போது வீடியோ கால் வழியாக சி.எஸ்.கே வீரர் சுரேஷ் ரெய்னா கலந்துகொண்டு பேசினார். அப்போது வர்ணனையாளர் ஒருவர் ரெய்னாவிடம், `தென்னிந்திய கலாசாரத்தை நீங்கள் எப்படி ஏற்றுக்கொண்டீர்கள். வேட்டி கட்டுவது, நடனமாடுவது மற்றும் விசிலடிப்பது போன்றவற்றை எப்படி கற்றுக்கொண்டீர்கள்’’ என்று கேள்வி எழுப்பினார்.

அந்தக் கேள்விக்குப் பதிலளித்த ரெய்னா, “நானும் பிராமணன்தான். 2004-ம் ஆண்டில் இருந்து சென்னையில் விளையாடி வருகிறேன். அதன் கலாசாரம் எனக்கு ரொம்பவே பிடித்தமானது. என்னுடைய டீம் மேட்ஸையும் ரொம்பப் பிடிக்கும். அனிருதா ஸ்ரீகாந்த், சுப்ரமணியம் பத்ரிநாத், பாலாஜி உள்ளிட்டோருடன் விளையாடியிருக்கிறேன். அங்கிருந்து நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். நல்ல நிர்வாகம் இருக்கிறது. நம்முடைய தனித்திறமைகளை அடையாளம் காண நல்ல வாய்ப்புக் கிடைக்கும். சென்னையின் கலாசாரம் மிகவும் பிடித்தது. சி.எஸ்.கே-வின் ஒரு அங்கமாக இருக்க அதிர்ஷ்டம் செய்திருக்கிறேன். அங்கு இன்னும் நிறைய போட்டிகளில் விளையாடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது’’ என்று கூறியிருந்தார்.
சென்னையின் கலாசாரத்தையும், தனது சக வீரர்களையும் சுரேஷ் ரெய்னா ரொம்பவே பாராட்டியிருந்தாலும் கிரிக்கெட் வர்ணனையின்போது சாதியைப் பற்றி பேசியதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. குறிப்பாக சமூக வலைதளங்களில் ரெய்னாவுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. ரெய்னாவுக்கு எதிராக நெட்டிசன்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள். 34 வயதான ரெய்னா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கடந்த 2020 ஆகஸ்டில் ஓய்வு அறிவித்தார். இருந்தாலும், சி.எஸ்.கே-வுக்காகத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். கொரோனா காரணமாக நடப்பாண்டு ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19-ம் தேதி முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்க இருக்கிறது.
Also Read – டீம் மேனேஜ்மெண்ட் Vs செலக்டர்ஸ்… ஓபனர் அபிமன்யூ ஈஸ்வரன் செலக்ஷன் சர்ச்சை பின்னணி!
0 Comments