Abhimanyu Easwaran

டீம் மேனேஜ்மெண்ட் Vs செலக்டர்ஸ்… ஓபனர் அபிமன்யூ ஈஸ்வரன் செலக்‌ஷன் சர்ச்சை பின்னணி!

சுப்மன் கில்லுக்கு ஏற்பட்ட காயம் பிசிசிஐ-யில் வித்தியாசமான ஒரு பிரச்னையைக் கிளப்பியிருக்கிறது. மேற்குவங்கத்தைச் சேர்ந்த ஓபனர் அபிமன்யூ ஈஸ்வரன் செலெக்‌ஷன் விவகாரத்தில் கிளம்பிய சர்ச்சை… அதன் பின்னணி என்ன?

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இப்போது இங்கிலாந்தில் இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குப் பின் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கெதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது இந்திய அணி. அதேநேரம், ஷிகர் தவான் தலைமையில் மற்றொரு ஸ்குவாட் இலங்கையில் முகாமிட்டிருக்கிறது. அங்கு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடர்களில் விளையாடுகிறது அந்த அணி. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து காயம் காரணமாக சுப்மன் கில் விலகியிருக்கிறார். இதனால், மாற்று ஓபனர் ஆப்ஷன்களை கேப்டன் கோலி உள்ளிட்டோர் அடங்கிய டீம் மேனேஜ்மெண்ட் டிக் அடிக்க விரும்புகிறது. அதேநேரம், சேத்தம் ஷர்மா தலைமையிலான தேர்வுக் குழு எடுத்த முடிவுக்கு டீம் மேனேஜ்மெண்ட் குழு அதிருப்தி தெரிவித்திருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் புதிய சர்ச்சைக்கு வழிவகுத்திருக்கிறது.

அபிமன்யூ ஈஸ்வரன்

Abhimanyu Easwaran

மேற்குவங்கத்தைச் சேர்ந்த தொடக்க வீரரான அபிமன்யூ ஈஸ்வரன், இங்கிலாந்தில் இருக்கும் இந்திய அணியோடு இருக்கிறார். காயமடைந்த சுப்மன் கில்லுக்கு மாற்றாக அபிமன்யூ ஈஸ்வரனைத் தேர்வு செய்திருக்கிறது தேர்வுக் குழு. ஆனால், இதுகுறித்து தேர்வுக் குழுவுக்கும், டீம் மேனேஜ்மெண்டுக்கும் இடையேசரியான முறையில் தகவல் தொடர்பு இல்லாதது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கையில் இருக்கும் பிரித்வி ஷா, தேவ்தத் படிக்கல் ஆகியோரை மாற்று ஓபனர்களாகத் தேர்வு செய்ய டீம் மேனேஜ்மெண்ட் வலியுறுத்தியிருக்கிறது. ஆனால், இந்த இக்கட்டான சூழலில் இப்படி ஒரு ரிஸ்க் வேண்டாம் என்று முடிவு செய்ததுடன், அபிமன்யூ ஈஸ்வரன் மீது முழு நம்பிக்கை வைத்து அவரைத் தேர்வு செய்ய தேர்வுக் குழு முடிவு செய்திருக்கிறது. இந்த மாறுபட்ட முடிவுதான் பிரச்னையைக் கிளப்பியிருக்கிறது.

ஹனுமா விஹாரி இதற்கு முன் பல நேரங்களில் ஓபனராகக் களமிறங்கியிருக்கிறார். அதேபோல், கே.எல்.ராகுலையும் ஓபனிங் பொசிஷனுக்கு டீம் மேனேஜ்மெண்ட் பரிசீலிக்கவில்லை என்று தெரிகிறது. அதனாலேயே, பிரித்வி ஷா, தேவ்தத் படிக்கல் ஆகியோர் வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல், இங்கிலாந்து டெஸ்டுக்கு முந்தைய பிராக்டீஸ் மேட்சுகளில் அபிமன்யூ ஈஸ்வரன் பெரிதாகக் கவனம் ஈர்க்கவில்லை எனவும் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் போன்ற அனுபவம் வாய்ந்த இங்கிலாந்து பவுலர் படையை எதிர்க்கொள்ள அவர் இன்னும் தயாராகவில்லை என டீம் மேனேஜ்மெண்ட் கருதுவதாகவும் கூறப்படுகிறது. இதுவே பிரச்னைக்குக் காரணம் என்கிறார்கள்.

Team India

`ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டில் 40-க்கு மேல் சராசரி வைத்திருக்கும் அபிமன்யூ ஈஸ்வரனுக்கு சர்வதேச அளவில் வாய்ப்பு வழங்க வேண்டும்’ என ரிதீந்தர் சோதி உள்ளிட்ட முன்னால் வீரர்கள் சிலர் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.இங்கிலாந்தில் ஸ்பெஷலிஸ்ட் ஓபனர்கள் உள்பட 23 வீரர்கள் இருக்கும் நிலையில், இலங்கை தொடரில் இருக்கும் இருவரை இதுபோன்ற இக்கட்டான சூழலில் அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை’ என்று பிசிசிஐ நிர்வாகம் நினைப்பதாகச் சொல்கிறார்கள். இதனால், பிரித்வி ஷா, தேவ்தத் படிக்கல் ஆகியோர் இங்கிலாந்து செல்வது இதுவரை உறுதியாகவில்லை என்றே தெரிகிறது.

Also Read – `பி டீம்’ பஞ்சாயத்து – இந்திய அணி மீதான விமர்சனம் சரியா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top